Skip to main content

"பா.ம.க பகுதிக்குள் நீங்க போக வேண்டாம், அதை திமுக பார்த்துக் கொள்ளும்'' - எதற்காக சொன்னார் திருமா? கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து போட்டியிடுவதால் இது ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இதே திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பிறகு, தனித்துப்போட்டி என தொண்டர்கள் முழக்கம், மக்கள் நலக் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டி என சென்ற பயணம் மீண்டும் தற்போது இந்த முறையும் திமுக கூட்டணியுடன் அதே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் இந்தத் தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த தேர்தலில் சிதம்பரம் தேர்தல் களம் எப்படி இருந்தது? கொஞ்சம் சென்று பார்க்கலாம்.

அப்போதும் தமிழகத்தின் ஹாட்டஸ்ட் தொகுதிகளில் ஒன்றாக சிதம்பரம் தகித்தது. தொகுதியில், வன்னிய சமூக மக்களும், தலித் சமூக மக்களும் ஏறத்தாழ சம பலத்தில் இருக்க, இவர்களையடுத்து இஸ்லாமியத் தரப்பும், கிறிஸ்தவத் தரப்பும், மூப்பனார் சமூகத்தினரும் ஓரளவு கணிசமாக உள்ளனர். பிற சமூக மக்களும் கலந்துகட்டி இருக்கிறார்கள். 

 

thiruma



கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் அரியலூரில் அறிமுகக் கூட்டத்தைக் கலக்கலாகத் தொடங்கிய திருமா, முதற்கட்டமாக தன் கட்சித் தொண்டர்களை அழைத்து "சாதீய மோதலுக்கு வழி வகுத்து, நம்மைப் பலிகடா ஆக்கப் பார்ப்பார்கள். அதனால் பா.ம.க.வினர் இருக்கும் வன்னியப் பகுதிகளுக்குள், நீங்கள் வாக்கு சேகரிக்கப் போக வேண்டாம். அதை சூரியத் தரப்பு பார்த்துக் கொள்ளும்'' என எச்சரிக்கையாகக் கடிவாளம் போட்டார். இதைத்தொடர்ந்து பல தொகுதிகளில் இருந்தும் திருமாவுக்காக களவேலை பார்க்கச் சென்றிருந்த சிறுத்தைப் பிரமுகர்கள், தலித் மக்கள் வாழும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று "பா.ம.க.வில் சேர்ந்து சீட் வாங்கியிருக்கும் மணிரத்தினத்தை ஓரம்கட்டுங்க. அவருக்கு சரியான பாடம் புகட்டுங்க. அ.தி.மு.க. வேட்பாளரோ கரன்ஸியை மட்டுமே நம்பி நிக்கிறார். அவரையும் தோற்கடிச்சி அனுப்புங்க. ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக் குரல் கொடுக்கிறவர் நம்ம திருமாதான்'’ என்றெல்லாம் திண்ணைப் பிரச்சாரம் செய்தார்கள் . இந்த நிலையில் உ.பி.க்கள் திருமாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஒரு தகவல் அப்போதும் கிளம்பியது. குன்னம் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த திருமா "சிறுத்தைகள் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தி.மு.க. சரியாக களப்பணி செய்யவில்லை என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் இங்கே பாருங்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான சிவசங்கர், பெரம்பலூர் மா.செ.துரைசாமி போன்றோர் இங்கே வந்து, அந்த வதந்தியை முறியடித்துவிட்டார்கள்'' என்று  உற்சாகமாகப் பேசி அதை முடித்துவைத்தார்.

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அடிக்கடி தொகுதி முழுக்க விசிட் அடித்து, உ.பி.க்களை உசுப்பிவிட்டபடியே இருந்தாராம். ஒரு முறை குமராட்சி பகுதிக்கு திடீர் விசிட் அடித்த அவர், ஒ.செ. மாமல்லனைக் கூப்பிட்டு "நம்மக் கட்சியில் இருக்கும் வன்னிய வாக்குகளை இலைத் தரப்பு அறுவடை பண்ணலாம்னு பாக்குது. யாரும் ஜாதிப் பாசத்துக்கு இடம் கொடுத்துடாம பார்த்துக்கங்க. தேர்தல் முடிந்ததும் ஒன்றிய வாரியா, நமக்கு எவ்வளவு வாக்குன்னு பார்ப்பேன். ஓட்டு குறைஞ்சா யாரா இருந்தாலும், கட்சிப் பதவிக்கு ஆப்புதான்'' என செல்லமாக எச்சரித்துள்ளார். முஸ்லிம்கள் அதிகமுள்ள லால்பேட்டை, பரங்கிப் பேட்டை பகுதிகளில் ம.ம.க. ஜாகிர் உசேன் டீம், திருமாவுக்கு வாக்குகளை அறுவடை செய்தது. 
2014இல் இலைத்தரப்பில் நல்ல மனிதர் என்று பெயரெடுத்துள்ள சந்திரகாசு வரிந்து கட்டினார். "இங்கு திருமாவை தோற்கடித்துவிட்டு வாருங்கள்" என ஜெ., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தேர்தல் பொறுப்பாளராக அனுப்பிவைக்க அவர், பர்ச்சேஸிங் பாலிஸியைக் கையில் எடுத்தார். தொகுதியில் இருக்கும் வன்னிய வாக்குகளைக் குறிவைத்த அவர், பா.ம.க.வில் இருந்து யார் யாரை இழுக்கலாம் என அண்ணாமலை நகர் வாடகை வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதலில் வன்னிய தலைவர்களில் முக்கியமானவரான பு.த.இளங்கோவனை ஜெ.’தலைமையில் ஐக்கியமாக்கினார். இளங்கோவன் மூலம் பாட்டாளிப் பிரமுகர்களை இழுக்க முயன்றார். டாக்டர் ராமதாஸுக்கு முதலில் அரசியல் அட்வைசராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் பொறியாளர் கோமகனை சந்தித்த அதிமுக முக்கியஸ்தர்கள் "நீங்க எங்கக் கட்சிக்குக் கூட வர வேணாம். நீங்க தேர்தல் வேலை செய்யாமல் இருந்தாலே போதும்'’என்று கூற அவரும், "நான் ஒதுங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டார். செங்கோட்டையனின் ஆட்கள் சிதம்பரம் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை எல்லாம் செல்போனில் தொடர்புகொண்டு "உங்க பகுதியில் மாற்று கட்சிக்காரர்கள் யார் நம்ம பக்கம் வருவாங்க. பட்ஜெட் என்ன?" என தூண்டில் வீசியபடியே இருந்தார்கள்.

 

thiruma 1



காங்கிரஸில் பசை பார்ட்டியான தொழிலதிபர் மணிரத்தினம், சீட்டை பலமாக எதிர்பார்த்திருக்க, கட்சியோ எக்ஸ் எம்.பி. வள்ளல்பெருமானை அறிவித்தது. மணிரத்தினத்துக்கு காங்கிரஸில் சீட் இல்லை என்று தெரிந்ததும், சிறுத்தையினர் வெடிவெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். காரணம் தலித் வாக்குகளை மணிரத்தினம் பிரிப்பார் என்று அவர்கள் நம்பினர். இதனால் டென்ஷனான மணிரத்தினம், பா.ம.க. காடுவெட்டி குருவைத் தொடர்புகொண்டு சீட்டுக்குப் பேசினார். க்ரீன் சிக்னல் கிடைக்க, 100 கார்கள் புடைசூழச் சென்று குருவைப் பார்த்தார். இவரைப் பார்த்ததும் குரு "என்னை காதலுக்கு எதிரின்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டிருக்கீங்க. நான் எதிரி இல்லை. ஏமாற்றுக் காதலைத்தான் எதிர்த்தேன்" என்றார். "தெரியும்ணே" என்ற மணி, குருவுக்கு சால்வை போட்டார். அங்கிருந்து டாக்டர் ராமதாஸை குரு தொடர்பு கொள்ள, அவரும் ஓ.கே. சொன்னார். இதைத்தொடர்ந்து, மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

"சீட் கிடைக்காததால் இன்னொரு கட்சியில் சேர்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?' என மணிரத்தினத்திடம் அப்போது நக்கீரன் கேட்டபோது "விசுவாசமான தொண்டனின் முதுகில் கட்சியே குத்திவிட்டால் அது சரியா? உனக்குதான் சீட் என்று நம்பவைத்து கடைசி நேரத்தில் கட்சி, கழுத்தை அறுப்பது சரியா? சீட் தருவோம் என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் என்னிடம் எவ்வளவோ ஆதாயம் அடைந்தார். நான் மதித்த கட்சி என்னை மதிக்கவில்லை. என்னை மதித்த கட்சியை நான் மதித்து சேர்ந்திருக்கிறேன்'' என்றார் அதிரடியாகவே. ஞானதேசிகன், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சில காலம் இருந்தார். பின்னர், வாசன் அணி பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. காங்கிரஸ் வள்ளல்பெருமானோ, சிதம்பரத்தில் செயல்வீரர் கூட்டத்தைக் கூட்டி "பா.ம.க.வுக்கு போன மணிரத்தினம் துரோகி" என ஆரம்பித்து ஒருமையில் அர்ச்சனை செய்தார். இலைத் தரப்போ "இங்கு நான்குமுனைப் போட்டி என்றபோதும், உச்ச ஃபைட் எங்களுக்கும் திருமாவுக்கும்தான்''’ என்றது அழுத்தமாக.

இப்படி வி.ஐ.பி. தொகுதியான சிதம்பரத்தில் 2014யிலும் சம பலத்தில் போட்டி நிலவியது. போட்டி என்பதைத் தாண்டி ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் என்பது போர் போலத்தான். வியூகங்கள், ஆக்ஷன், துரோகம், ட்விஸ்ட் எல்லாம் கலந்து தற்போதும் தகிக்கிறது தேர்தல் களம். மக்களுக்கு இந்த ஒரு மாதம் கேளிக்கைதான். அதன் பின்பு வென்றவர்களுக்கு கேளிக்கை. மக்களுக்கு வாடிக்கையான வாழ்க்கை.  

 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.