ADVERTISEMENT

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; உங்க ஃபோனை உபயோகிக்கும் கொள்ளையர்கள் - பகுதி 6 

05:35 PM Mar 01, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுடெல்லி மாநகரத்தில் வடகிழக்கு பகுதியில் வசிப்பவர் வாஜ்பாய் பாண்டே. இவர் வயது முதிர்வு காரணமாக மருந்து கடைக்கு நேரில் சென்று தனக்கான மருந்துக்களை வாங்குவதற்கு பதில் ஆன்லைனில் மருந்துகளை புக் செய்துள்ளார். அந்த மருந்துகள் தனியார் கூரியர் சேவை நிறுவனமான டி.டி.டி.சி. மூலம் டெலிவரி செய்யப்படும் என அந்த மருந்து விற்பனை இணையதளம் கூறியுள்ளது. அந்த மருந்து இரண்டு நாளில் பெரியவரின் வீட்டுக்கு வந்துவிடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு தினங்கள் கடந்தும் மருந்துகள் வரவில்லை. இதனால் அந்த கூரியர் நிறுவனத்தின் கான்டாக்ட் நம்பர் ஏதாவது கிடைக்குமா என கூகுளில் சர்ச் செய்துள்ளார். கஸ்டமர் கேர் எண் என ஒரு மொபைல் எண்ணை கூகுள் காட்டியுள்ளது. அவரும் அந்த நம்பரை தொடர்புகொண்டு, “மருந்து புக் செய்தேன் இன்னும் வரவில்லை, ஏன் இன்னும் டெலிவரி செய்யவில்லை” எனக் கேட்டுள்ளார்.

கஸ்டமர் கேரில் பேசியவர் புக்கிங் நம்பர், தேதி போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் தன்னிடமிருந்த தகவல்களைத் தந்துள்ளார். இந்த தகவல்களை கொண்டு உங்கள் டேட்டாவை எங்களது இணையத்தில் பார்க்க முடியவில்லை. நீங்க தப்பா சொல்றீங்க. சரியான எண்ணை சொல்லுங்க. முதல் நான்கு எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் பிறகு (நியுமெரிக்) எண்ணில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று கேட்டுள்ளார். அதற்கு முதியவர், “இல்லை 8 இலக்க நம்பர்தான் உள்ளது” என்று சொன்னதும், எதிர் தரப்பிலிருந்து, “உங்களுக்கு அது தெரியவில்லை. உங்கள் மொபைலில் ஸ்கிரீன் ஷேரிங் ஆப் இருக்கிறதா?” என்று கேட்டுள்ளனர். “அப்படின்னா?” என முதியவர் கேட்க, “உங்க மொபைலில் உள்ள மெசேஜ்களை நாங்கள் இங்கிருந்தே படித்து தெரிந்துகொள்ளும் வசதி” என்றிருக்கிறார்கள். அதற்கு முதியவர், “ஆப். இல்லையே” என்று சொல்ல, “அதை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு எங்களை அழையுங்கள்” என எதிர் தரப்பிலிருந்து சொல்லியுள்ளனர்.

“எனக்கு அது தெரியாது” என்று முதியவர் சொல்ல, “தெரியாதா? இருங்க, நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன் அந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் ஸ்கிரீன் ஷேரிங் ஆப் ஒன்று டவுன்லோடாகி உங்கள் மொபைலில் இன்ஸ்டாலாகிவிடும்” என்றுள்ளார். பெரியவரின் மொபைல் எண்ணுக்கு லிங்க் வந்துள்ளது., அவரும் அதனை டவுன்லோட் செய்து அவரது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளார். இதன்பின் அந்த மொபைல் முழுவதும் அந்த மர்ம கும்பலின் கன்ட்ரோலுக்கு சென்றது. அந்த மொபைல் டேட்டாவை ஆன்லயே வைக்க செய்துள்ளனர். “நாளை உங்களுக்கான மருந்து டெலிவரியாகிவிடும்” எனச் சொல்ல இவரும் லைனை கட் செய்துள்ளனர்.

மறுநாள் மருந்து வரவில்லை, ஆனால் அவரது மொபைல் மெசேஜ் ஃபோல்டரில் அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட மெசேஜ்கள், அதற்கான ஓ.டி.பி. வந்திருப்பது தெரிந்து அதிர்ச்சியானார். உடனடியாக புதுடெல்லி வடகிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் குமாரிடம் புகார் தந்தார்.

சைபர்செல் போலீஸார், அவரது மொபைலை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் ஸ்கிரின் ஷேரிங் ஆப் இருந்ததை பார்த்து இதை எதற்காக வச்சிருக்கீங்க எனக் கேட்டபோது, நடந்ததை கூறியுள்ளார். மொபைல் பேங்க் ஆப் ஓப்பன் செய்து பார்த்தனர். பணம் அனுப்பப்பட்ட கணக்கை கண்டறிந்தனர். ஸ்கிரின் ஷேரிங் ஆப் வழியாக பெரியவரின் மொபைலை ஆப்ரேட் செய்த அந்த மர்ம கும்பல், மொபைல் பேங்க் ஆப் வழியாக பெரியவரின் கணக்கை ஓப்பன் செய்து அவரின் கணக்கிலிருந்து 2,40,000 ரூபாயை வெவ்வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டதை கண்டறிந்தனர். அந்த கஸ்டமர் கேர் எண்ணை பெரியவரிடம் சைபர்செல் போலீஸார் கேட்டபோது, அந்த பெரியவர் கூகுளில் தேடியெடுத்த எண்ணை தந்தார். அதை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்புகொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வேறு தொடர்பு எண்களை வாங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விவரத்தை அளித்துள்ளனர். நீங்கள் குறிப்பிடும் நம்பர் எங்களுடைய கஸ்டமர் கேர் தொடர்பு எண் அல்ல எனச் சொல்ல சைபர்செல் போலீஸார் அதிர்ச்சியாகினர். கூகுள் தேடல் பகுதியில் அந்த கூரியர் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தேடி சர்ச் செய்தபோது போலி கஸ்டமர் கேர் எண் தான் முதலில் வந்துள்ளது.

வங்கிகள், ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் போன்றவை தங்களது வாடிக்கையாளர்களின் சேவைக்காக 24 மணி நேர சேவை தொடர்பு எண்களை வெளியிடுகின்றன. இதனை உன்னிப்பாக கவனித்து அதே பெயர்களில் போலியான கஸ்டமர் கேர் எண்களை உருவாக்கி தேடல் பொறிகளில் முதலில் வருவது போல் செட் செய்துள்ளது டிஜிட்டலை அறிந்த மோசடி கும்பல். திடீரென தேவைக்காக ஒரு நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தேடுபவர்களுக்கு போலியான கஸ்டமர் கேர் எண் கிடைத்து அவர்கள் தொடர்புகொண்டதும், அவர்கள் இவர்கள் குறித்த தகவல்களை கேட்பதுபோல் கேட்டு எந்த வழி செட்டாகுமோ அந்த வழியில் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளதை கண்டறிந்தனர். புகார் தந்த டெல்லி பெரியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து எந்தந்த அக்கவுண்ட்டுக்கு பணம் போனது என ட்ராக் செய்யத் துவங்கிய சைபர்செல் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் விபின்குமார். ஒரு பயண ஆப் வழியாக சிங்கப்பூர் டூ டெல்லி செல்ல தனியார் விமானத்தில் அவர், அவரது மனைவி, குழந்தை என மூவருக்கும் டிக்கட் புக் செய்துள்ளார். கோவிட் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான கட்டணத்தை திருப்பி தரவில்லை. 2022 ஏப்ரல் 19 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி நடந்ததை எழுதியவர் முகநூலில் அந்தப் பயண ஆப் பக்கத்தை கண்டறிந்து அதனை டேக் செய்தார். பலரும் தங்களது கருத்துக்களை அதில் தெரிவித்து வந்தனர். ஏப்ரல் 22 ஆம் தேதி அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் இருந்து அழைப்பதாக ஒருவர் கூறி நான் கேட்கும் தகவல்களை வழங்குங்கள் 30 நிமிடத்தில் பணத்தை திரும்ப வழங்க வழி செய்கிறேன் என உறுதியளித்துள்ளார். உங்களுக்கு ஏன் பணம் வரவில்லை எனத் தெரியவில்லை. எங்கள் நிறுவன இணையத்தில் தகவல்கள் சரியாக இல்லை. உங்கள் மொபைல் ஸ்கீரினை ஷேர் செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளனர். இவரும் தனது மொபைலில் ஏற்கனவே உள்ள ஆப் வழியாக தனது மொபைலை பார்க்க அனுமதி தந்துள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் 50 ஆயிரம் எடுத்துள்ளனர். உடனே அவர் தனது வங்கி கணக்கு உள்ள சிட்டி பேங்க் கிளையின் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு தகவல் கூறியுள்ளார். அவர்கள், ஏ.டி.எம். கார்டு வழியாக பணம் எடுக்க முயற்சித்திருப்பார்கள், அதனால் அதனை லாக் செய்துவிடுகிறோம் என ப்ளாக் செய்தவர்கள். புதிய ஏ.டி.எம். கார்டுக்கு அப்ளே செய்யச் சொல்லியுள்ளனர். அவரும் அதனை செய்துள்ளார். ஏப்ரல் 27 ஆம் தேதி விபின் கணக்கிலிருந்து மீண்டும் 2.8 லட்சம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுவிட்டது. மொத்தம் 3.3 லட்சம் ரூபாய் பணம் வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டனர். அதிர்ச்சியானவர் ஐதராபாத் சைபர்செல் போலிஸாரிடம் புகார் தந்தார்.

ச்சிகுடாவை சேர்ந்தவர் அனில்குமார் சவரேகர். ஒரு பொருளை பிரபல தனியார் இணையதளத்தில் ஆர்டர் செய்திருந்தார். இரண்டு நாள் கடந்து கூரியர் எக்ஸ்கியூட்டிவ் எனச் சொல்லிக்கொண்டு அவரது மொபைல் எண்ணில் ஒருவர் பேசினார். உங்க அட்ரஸ் தப்பாயிருக்கு கூரியர் டெலிவரி செய்ய முடியல. நான் அட்ரஸ் மாத்தியிருந்தனே. இல்லையே பழைய அட்ரஸ்தான் இருக்கு. நான் பார்சலை ரிட்டன் அனுப்பிடறேன். இல்லை எனக்கு அந்த பார்சல் அவசியம் தேவை. நீங்க உங்க மொபைல்ல ஸ்கிரின் ஷேரிங் ஆப் இன்ஸ்டால் செய்து உங்க மொபைலை எனக்கு காட்டுங்க என்றுள்ளார். இவரும் அதேபோல் செய்ய. டெஸ்டிங்காக ஒரு ரூபாய் அனுப்பச் சொல்லியுள்ளார். இவரும் பேங்க் வெப்சைட் ஓப்பன் செய்து ஒரு ரூபாய் அனுப்பியுள்ளார். கொஞ்ச நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம், 49 ஆயிரம் என இரண்டு தொகைகள் வேறு கணக்குக்கு மாற்றப்பட்டது. அதனைப் பார்த்து அதிர்ச்சியான அவர் போலீஸில் புகார் தந்துள்ளார். அவர்களின் விசாரணையில் ஸ்க்ரீன் ஷேரிங் ஆப் வழியாக பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேட் பார்த்து தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி வேறு கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார்கள்.

தெலுங்கானா மாநிலம் கோபன்பள்ளியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார் வர்ஷினி. கோபன்பள்ளி காவல்நிலையத்திற்கு வியர்க்க விறுவிறுக்க காரில் வந்து இறங்கி தள்ளாடியபடி வந்து ஒரு புகார் தந்தார். அதில், மின்கட்டணம் கட்ட இன்றே கடைசி நாள். கட்டணம் கட்டவில்லையென்றால் மாலை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மொபைலுக்கு மெசேஜ் வந்தது. 3400 ரூபாய் கட்டவேண்டியதா இருந்தது. உடனே வந்து கட்ட முடியாதுன்னு சொன்னன். ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தச் சொன்னாங்க. எனக்கு கட்ட தெரியாதுன்னு சொன்னன். உங்கள் ஏ.டி.எம். கார்டு நம்பர் சொல்லுங்க நான் கட்டறேன்னு சொன்னார். கார்டு நம்பர் சொன்னன். ஓடிபி கேட்டார் சொன்னன். ஆனால் என் வங்கி கணக்கில் இருந்து 48 ஆயிரம் போயிடுச்சி. திரும்ப அந்த நம்பரை அழைச்சா லைன் எடுக்கல கட்டாகிவிட்டது எனத் தெரிவித்திருந்தார். போலீஸ் விசாரணையில் மின்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மின்வாரியமும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லியுள்ளது. உங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கிறேன் எனச் சொல்லி கால்ஸ் வருகின்றன. லிங்க்குகள் அனுப்பப்பட்டு அதில் தகவல்களை பூர்த்தி செய்யச் சொல்கின்றன. அது எல்லாமே ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை.

இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் சிலதிருக்கு. டாஸ்மாக் சரக்கு ஆன்லைனில் விற்பனை என ஆன்லைன் பேமெண்ட் வாங்கி குடிமகன்களையும், திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு என புக் செய்து பக்தர்களை ஏமாற்றி அரசாங்கத்தையே அலறவிட்டது எப்படி?

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்…

டிஜிட்டல் சதுரங்க வேட்டை - 5: மின்னஞ்சலைத் தொட்டால் மோசடி வலையில் சிக்குவீர்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT