Skip to main content

டிஜிட்டல் சதுரங்கவேட்டை; இணையத்தில் நாம் ரகசியமாக இருக்கிறோமா? பகுதி – 21

 

digital-cheating-part-21

 

தமிழ்நாட்டில் இன்ஜினீயரிங் முடித்த ஒரு இளம்பெண் பெங்களுரூவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது அம்மா, அப்பா எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இவர், வேலை முடிந்து தனது நண்பர்கள், குடும்பத்தாரிடம் எல்லாம் பேசி வந்திருக்கிறார். பின் இவர் பிரண்ட்ஷிஃப் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்துள்ளார். அதன் மூலம் தனது ஊரைச் சேர்ந்த தனது அப்பா வழி உறவினரான ஒரு இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அந்த இளைஞரிடம் அந்த ஆப் வழியாகவே வீடியோ காலில் இரவுகளில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

 

பேச்சுகள் திசைமாறி அந்தரங்கம் பற்றியும் சென்றுள்ளன. இருவரும் அந்தரங்கம் குறித்தும் பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் தங்களது நிர்வாண உடம்பை அந்த ஆப் வழியாக வீடியோ காலில் பார்த்துக்கொண்டுள்ளனர். இது அவர்களுக்குள் அடிக்கடி நடந்திருக்கிறது. இந்த இளம்பெண்ணுக்கு வேலை செய்யும் இடத்திலேயே ஒரு இளைஞன் அறிமுகமாகியுள்ளார். தன் ஊருக்கு அருகிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை படிப்பு உயர்த்தி இளம் வயதிலேயே நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. இருவரும் நட்பாக பழகியவர்கள், பின்னர் காதலை தெரிவிக்க இருவரும் மகிழ்ச்சியாக காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இவர்களின் காதலை தெரிந்துகொண்ட உறவுக்கார இளைஞர், அந்தப் பெண்ணை பிளாக்மெயில் செய்யத் துவங்கியுள்ளார். ‘உன்னை நான் கல்யாணம் செய்துக்க முடியாது. நம்ம வீட்ல ஒத்துக்கமாட்டாங்க; உறவுமுறை தடுக்கும். நீ அவனை காதலிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நீ என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்’ எனக் கேட்டுள்ளார். ‘உன்னை என் அண்ணன் மாதிரி நினைச்சனே’ என அந்தப் பெண் சொல்ல, ‘அண்ணன்கிட்ட காட்டக்கூடாததை காட்டினல்ல; இப்போ செய்யக்கூடாததையும் செய்’ என பிளாக்மெயில் செய்யத் துவங்கினார்.

 

மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், அவரின் ஃபோன் கால்களை எடுக்காமல் தவிர்த்துள்ளார். அந்த இளைஞர் விடாமல் தொடர்ந்து ஃபோனில் டார்ச்சர் செய்துள்ளார். திடீரென ஒருநாள் இரவு, ‘இதோ பார் உன் நிர்வாண போட்டோஸ், நீ என்னோட சாட் செய்ததை நான் ரெக்கார்ட் செய்து வச்சிருக்கேன். நீ எனக்கு ஒருநாளாவது வேணும் இல்லன்னா நான் இந்த போட்டோக்களை என் ப்ரண்ட்ஸ் மூலமா உன் வீட்டுக்கு அனுப்பிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியான அந்த இளம்பெண் தனது காதலனிடம் தயங்கி தயங்கி நடந்ததையும் வீடியோ, போட்டோ குறித்தும் சொல்லி அழுதுள்ளார். ‘அவன் அதை வெளியிட்டால் நான் தற்கொலை செய்துக்குவேன்’ என அந்தப் பெண் சொல்ல, காதலன் சமாதானப்படுத்தி அந்த இளைஞனிடமும் பேசியுள்ளார். ஃபோனிலேயே அந்த காதலனை மிரட்டிய இளைஞன், ஒருகட்டத்தில் பெங்களுரூவுக்கு நேரடியாகவே சென்று மிரட்ட இருவருக்கும் இடையே அடிதடி நடந்துள்ளது. தனது காதலனை தாக்கியதால் கோபமாகி நடந்ததை தனது குடும்பத்தாரிடம் அந்த இளம்பெண் சொல்ல அதிர்ச்சியாகியுள்ளார்கள். பின்னர் பெங்களூரு போலீஸில் புகார் தந்து அவனை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

 

தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவர்களுள் ஒருவராக இருந்த அந்த மிக முக்கியப் பிரமுகர், கட்சியில் பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுடன் கடவுள் படத்தின் முன்பு அமர்ந்து கொண்டு வீடியோ சாட் செய்து கொண்டிருந்தார். அந்த வீடியோ வெளியே வந்ததை நாடே பார்த்தது. கட்சியில் தனக்கு போட்டியாளராக உள்ள அந்த பிரமுகரை கட்சியிலிருந்து காலி செய்ய அந்த கட்சியின் தலைவரே தனது ஆட்கள் மூலமாக அதை வெளியிடச் செய்து, அரசியலில் இருந்து அவரை காலி செய்து ஓரங்கட்ட வைத்தார் என பேச்சுகள் எழுந்தன. டேட்டிங் ஆப், இணையதளங்கள் வழியாக தங்கள் கட்சித் தலைவர்களை ஹனி ட்ராப் செய்கிறார் என குற்றம் சாட்டினார் பிரபல நடிகையான அந்த பெண் நிர்வாகி. 

 

இணைய உலகில் ரகசியம் என நாம் நினைப்பதெல்லாம் தவறு. இணையம் என்பது ரகசியமல்ல. நாம் செய்யும் சரியானவற்றையும், தவறுகளையும் மூன்றாம் தரப்பு பார்க்கிறது என்பதே உண்மை. காவல்துறையினருக்கு புலனாய்வு பாடப்பிரிவு என்ன சொல்கிறது என்றால், ஒரு குற்றவாளி தவறு செய்யும்போது அவனுக்கே தெரியாமல் அங்கே ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டே செல்வான். அந்தத் தடயத்தை கண்டுபிடித்தால் குற்றவாளி அகப்பட்டுவிடுவான் என்கிறது.

 

ஆன்லைன் உலகில் குற்றம் செய்பவரோ, நல்லது செய்பவரோ யாராக இருந்தாலும் எத்தனை ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து தவறு செய்தாலும் அவர்கள் செய்த குற்றத்துக்கான தடயம் பல இடங்களில் சேமிக்கப்படுகிறது என்பதே டெக் உலகின் நிஜம். நான் பிரவுசரில் இருந்த ஹிஸ்டரியை அழித்துவிட்டேன், மொபைலில் சேமிக்கப்படும் குக்கீஸ்களை அழித்துவிட்டேன், பிரவுசரை டெலிட் செய்துவிட்டேன் எனச் சொன்னாலும் ஆதாரங்கள் சில இடங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். அழிக்கப்பட்டதை மீண்டும் ரெக்கவரி செய்யவும் முடியும் அதுதான் டெக்னாலஜி.

 

செக்ஸ் டார்ஷன் மோசடி கும்பலை தேடி கேரளா, மகாராஷ்டிரா போலீஸ் சென்றதே என்னவானது? அவர்களை பிடித்தார்களா? என்ன செய்தார்கள்?

 

வேட்டை தொடரும்…

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: 18+ வீடியோக்களால் சிக்கிய முதியவர்.. பகுதி – 20

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !