ADVERTISEMENT

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; முதலமைச்சரின் மனைவியை ஏமாற்றிய நபர்! பகுதி  13

04:53 PM Mar 22, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திரா க்ரைம் யூனிட் ஒன்று மோசடி வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவுக்கு புறப்பட்டது. ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சி இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். மாநிலத்தின் தலைநகர் இரயில் நிலையத்தில் நம் திருச்சி ஜங்ஷனின் பாதி அளவுக்கே வசதிகள் இருந்தன.

ராஞ்சியிலிருந்து ஜம்தாராவுக்கு காரில் செல்ல முடிவெடுத்த அவர்கள், வாடகை டாக்ஸி ஒன்றை விசாரித்துள்ளனர். அந்த டாக்ஸி டிரைவரோ, ‘அவ்வளவு தூரம் வர முடியாது’ என்றுள்ளார். இத்தனைக்கும் ராஞ்சியில் இருந்து ஜம்தாராவிற்கு வெறும் 213 கி.மீ தூரம் தான். காரணத்தை விசாரித்தபோது, ‘கார் பயணம் சேஃப் கிடையாது. போவதற்கு மட்டும் 10 மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும்’ என்றுள்ளார்கள் அங்கிருந்த கார் டிரைவர்கள். ‘ரயிலில் செல்லுங்கள் அதுதான் வசதி, 6 மணி நேரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்’ என்றுள்ளார்கள்.

ராஞ்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் ஜம்தாரா செல்லும் எனச் சொன்னதால் ராஞ்சியிலிருந்து ஜம்தாராவுக்கு ரயில் ஏறியுள்ளனர். ஜம்தாராவில் உள்ள சித்தரஞ்சன் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோது கிராமத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அளவுக்கே இருந்தது. ஜம்தாரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து தங்களிடமுள்ள எப்.ஐ.ஆர், கோர்ட் ஆர்டர் காப்பிகளை தந்ததும் அவர், ஏ.எஸ்.பியிடம் அனுப்பியுள்ளார். அவர் ஜம்தாரா சைபர்செல் காவல்நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு பேசிவிட்டு, ‘குற்றவாளிகளை அடையாளப்படுத்தி கைது செய்ய எல்லா உதவிகளையும் செய்யுங்க’ எனச் சொல்லியுள்ளார். காவல்நிலையத்துக்கு சென்று, ஆந்திரா போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டதும் அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த உ.பி போலீஸார், ‘மதராஸியா’ எனக் கேட்டு சிரித்துள்ளனர்.

மேற்குவங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநில க்ரைம் போலீஸாரும் அங்கே அமர்ந்துகொண்டு ஆளுக்கொரு கட்டை டேபிள் மீது வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு இருந்தனர். ஜம்தாரா காவல்நிலைய எஸ்.ஐ., ஆந்திரா போலீஸாரை வரவேற்று, அவர்களிடமிருந்த லட்டரை வாங்கி பிரித்து பார்த்துவிட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் இருந்து ஒரு கட்டை எடுத்து அவர்கள் முன்வைத்தார். ‘நீங்க கொண்டு வந்திருக்கற ஃபோட்டோ இதுல இருக்கான்னு பாருங்க; பெயர் பார்த்தாலாம் தெரியாது. அவுங்க பல பெயர்கள்ல இருப்பாங்க. ஃபோட்டோ பார்த்து அடையாளம் கண்டுபிடிங்க’ என்றுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் ஃபோட்டோ ஒட்டிய நோட்டீஸ்கள் அதில் இருந்துள்ளன. ஒவ்வொன்றாக கவனமாக பார்க்கத் துவங்கினர். இரண்டு மணி நேரத் தேடலுக்கு பின்னர் தங்களிடமிருந்த ஒரு ஃபோட்டோவும், அந்த பேப்பரில் இருந்த ஒரு ஃபோட்டோவும் ஒத்துப் போனது. அதை அந்த எஸ்.ஐயிடம் சுட்டிக்காட்டினர். அதனை வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தவர், அருகில் இருந்த ஏட்டுவிடம் அவனின் முகவரியை கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கச் சொல்லியுள்ளார்.

‘எங்கக் கிட்டயே அட்ரஸ் இருக்கு; ஆனா அது அவன் அட்ரஸ்சா இருக்காது’ என்றுள்ளார் ரைட்டர். பின்னர் அந்த எஸ்.ஐ., பிரிண்டரில் இருந்து ஒரு பேப்பரை தந்து இதுதான் அவனின் ஒரிஜினல் அட்ரஸ் என்றுள்ளார். மேலும் ஆந்திரா போலிஸாரிடம், “இப்போ அந்த ஊருக்கு போக முடியாது. ஈவ்னிங் ஆயிடுச்சி, நைட் ரூம் எடுத்து தங்குங்க காலையில் போகலாம். லாட்ஜ்ல அதர் ஸ்டேட் போலிஸ்ன்னு சொன்னா அலார்ட்டாகிடுவாங்க, அவுங்க ஆளுங்க எல்லா இடத்தலயும் இருப்பாங்க. அதனால் டூர் வந்திருக்கறதா சொல்லி ரூம் எடுங்க” எனச் சொல்லியுள்ளார் ரைட்டர். அதன்படியே இவர்களும் ஒரு லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து இரவு தங்கினர்.

மறுநாள் ஜம்தாரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அந்த கிராமத்துக்கு போலீஸ் ஜீப்பில் புறப்பட்டுள்ளார்கள். “காட்டுவழிப் பயணம் வழியில் யானைகள் க்ராஸ் ஆகும், புலி நடமாட்டம் இருக்கும் பயப்படாம இருங்க. அதுங்க க்ராஸ் செய்யும்போது சத்தம் போட்டுடாதிங்க” எனச்சொல்ல இவர்கள் அடக்கமாக இருந்துள்ளார்கள். “இதெல்லாம் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதி” என மிஷின் கன் வைத்திருந்த போலிஸ்காரர் ஒருவர் சொல்லியுள்ளார். கொஞ்ச தூரம் ஓரளவு நல்ல சாலையில் பயணமானவர்கள் அதற்கடுத்து கரடுமுரடான சாலைகளில் பயணமாகினர். திரும்பிய பக்கமெல்லாம் மரம், அடர்ந்த காடு, திடீரென கொஞ்ச தூரத்துக்கு விவசாய நிலங்கள் கண்ணில் பட்டுள்ளன. மலைகளில் தேயிலை தோட்டம் வைத்திருந்துள்ளனர். அந்த கிராமத்துக்குள் நுழைந்தபோது ஆந்திரா போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஆச்சர்யமாகப் பார்த்தனர். பல வீடுகள் தகரம் போட்ட மண் சுவர் வீடுகளாக இருந்துள்ளன. சில வீடுகள் சில கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பங்களாவாக இருந்தது. பல வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டும் இருந்துள்ளன. அந்த வீட்டில் வசித்த ஆட்களோ பஞ்சம் வந்த காலத்தில் இருந்த உடல்வாகில் இருந்தனர். கிராமத்தின் இரண்டு இடத்தில் ‘இங்கு ஆங்கிலம் கற்று தரப்படும்’ என சுண்ணாம்பால் சுவற்றில் எழுதி வைத்திருந்தனர்.

அந்த கிராமத்தின் தலைவரை சந்தித்து பேசியுள்ளனர். அவர், “எங்க ஆளுங்க அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க” எனச் சொல்ல, “அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவனை வரச் சொல்லுங்க” என்றுள்ளனர் ஜம்தாரா போலீஸார். “அவன் குடும்பத்தோட வேலை செய்ய கல்கத்தா போயிருக்கான். எப்போ வருவாங்கன்னு தெரியாது” எனச் சொல்ல ஆந்திரா போலீஸ் நொந்து போயுள்ளனர். திரும்பி வரும்போது, “இந்த ஊர்க்காரங்களை பார்த்தா டெக்னாலஜி தெரிஞ்சவங்க மாதிரி தெரியலயே. இவுங்களா இவ்ளோ மோசடி செய்யறது” எனக் கேட்க அந்த எஸ்.ஐ சிரித்துள்ளார். “என்னடா படிச்சிருக்கிங்கன்னு கேட்டால், எட்டாவது இல்லன்னா ஒன்பதாவதுன்னு சொல்வானுங்க. அது உண்மைதான். ஆனால் இவனுங்கதான் டிஜிட்டல் வழி மோசடி செய்யறதல நம்பர் ஒன்” என்றுள்ளார். “இவுங்க மோசடிகளை ஏன் தடுக்காம இருக்கிங்க?” என ஆந்திரா போலீஸ் கேட்க, “இந்த பகுதிகள் ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் இந்த பகுதி மீது எந்த கவர்மெண்ட்டும் அக்கறைப் படல. அரசுக்கு இணையா மாவோயிஸ்ட்கள் பழங்குடியின மக்கள் மத்தியில் இணை அரசாங்கமே நடத்தனாங்க.

அதனால்தான் இந்த பகுதியில் காவல் நிலையங்கள் இருக்காது. காவல் நிலையங்கள் இருந்தால் மாவோயிஸ்ட்கள் தாக்கி அழிச்சிடுவாங்க. பழங்குடியின மக்களும் பழமை மாறாதவங்க. தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கல, இவுங்க வாழ்வாதரத்துக்காக திருட தொடங்குனாங்க. திருடிட்டு இவுங்க ஊருக்கு வந்துடுவாங்க, உள்ளுர் போலீசே கூட இந்த பகுதிகளுக்கு வர முடியாது. அது இவுங்களுக்கு சௌகரியமா போச்சு. அதோட, கஞ்சா பயிர் செய்து ரயில்கள் வழியா இந்தியா முழுமைக்கும் கடத்தனாங்க. எங்க ஜம்தாராவை சுற்றி நிறைய ரயில் நிலையங்கள் உள்ளன. அவையெல்லாம் ஜங்சன்கள். இங்கிருந்து டெல்லிக்கு, ஹவுரா (கொல்கத்தா) ராஜஸ்தான், பம்பாய், நாக்பூர், மதராஸிக்குயெல்லாம் நேரடி ரயில்கள் இருக்கு. ரயில்களில் ஏறி பயணிகளை அடித்து, மிரட்டி கொள்ளையடிச்சிட்டு, மலைப்பகுதியில் ரயில் சுலோவா போகும்போதே இறங்கி தப்பிச்சி போய்டுவாங்க. இல்லன்னா செயின் இழுத்து ரயிலை நிறுத்திட்டு காட்டுக்குள்ள போய் பதுங்கிடுவாங்க. இதைத்தான் பல ஆண்டுகளாக செய்துக்கிட்டு இருந்தாங்க.

ஜம்தாரா, கர்மத்தாரா, நளா ரயில்வே போலிஸ்கிட்ட பல புகார்கள் வந்துக்கிட்டு இருந்தது. லாரிகளை மடக்கி கொள்ளையடிக்கறதா ஜம்தாரா போலிஸ்கிட்ட வந்தது. இப்போ அதுவெல்லாம் குறைஞ்சிடுச்சி, இப்போ வர்றதெல்லாம் ஆன்லைன் மோசடி புகார்கள் தான். இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இவுங்க மேல எப்.ஐ.ஆர் போட்டு எங்களுக்கு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. உங்கள மாதிரி இதுவரை 15 ஸ்டேட் போலீஸ் இங்க வந்து பலரையும் கைது செய்தும் போயிருக்காங்க. போலீஸ், வழக்கு, அரஸ்ட், ஜெயிலுக்கு அவுங்க கவலைப்படறதில்லை. லட்சங்களை கட்டி உடனே ஜாமீன்ல வந்துடுவாங்க. இந்த கிராமங்களில் உள்ள மக்களைப் பொருத்தவரை எவ்வளவு மோசடி செய்து சம்பாதிக்கறயோ அந்தளவுக்கு கிராம மக்கள்கிட்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அவுங்கள அப்படியே கொண்டாடுவாங்க. சினிமாவில் தான் ஹீரோங்க சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார்ன்னு பட்டம் வச்சிக்குவாங்க. இங்க மோசடியில் யார் டாப், யாரை ஏமாத்தினாங்க அப்படிங்கறதை வச்சி சக கூட்டாளிங்க சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார்ங்கற பட்டம் குடுப்பாங்க” என்றார் விளக்கமாக.

“என்ன சார் சொல்றீங்க” என அதிர்ச்சியானார் அந்த ஆந்திரா எஸ்.ஐ.

ஒரு முதலமைச்சரோட மனைவியிடம் ஃபோன்ல பேசியே பல லட்சம் களவாடிட்டான்; அவன்தான் இப்போ இந்த மக்களின் ராக் ஸ்டார். யார் அவன்? ராக் ஸ்டாரானது எப்படி?

வேட்டை தொடரும்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT