முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
நான்கு பெண்கள் ஒன்றாக சேர்ந்து வந்து என்னிடம் கேஸ் கொடுத்தார்கள். இந்த நான்கு பேரும் வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். ஆன்லைன் பிசினஸ் ஒன்றில் சேர்ந்து வீட்டில் இருந்தே வேலை செய்வதாகச் சொன்னார்கள். வீட்டில் இருக்கும் இவர்கள் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் என்று எண்ணி அந்த ஆன்லைன் பிசினஸில் சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஆன்லைன் பிசினஸில், இவர்கள் எந்தளவுக்கு வேலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு கம்பெனிக்கு 50%, இவர்களுக்கு 50% தருவதாக அந்த கம்பெனிக்காரர்கள் சொல்லிருக்கிறார்கள்.
ஒன்றரை வருடமாக செயல்பட்டு வரும் இந்த பிசினஸில், சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லோரும் சேர்ந்து சந்தித்து வந்திருக்கிறார்கள். அப்போது இந்த நான்கு பெண்கள் குழுவாக சேர்ந்து சம்பாதிக்கும் லீட்ஸ் எல்லாம் ஒரு பெண் திருடுவதாகச் சொன்னார்கள். இந்த லீட்ஸ் எல்லாம் அங்கு செல்வதால் பணம் அனைத்தும் அந்த பெண்ணுக்கு சென்றுவிடுகிறது. அந்த பெண், கம்பெனி நிறுவனருடன் நெருக்கமாக பழகுவதை இவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண் யார்? இதில் நடக்கும் பிரச்சனை என்ன? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று என்னிடம் வருகிறார்கள்.
அதன்படி நாங்கள் இந்த கேஸை எடுத்துக் கொண்டு, எங்களுடைய நபர் ஒருவரை இந்த பிசினஸில் சேர்த்துவிட்டு கண்காணிக்க ஆரம்பித்தோம். இதில் நிறைய விஷயம் புரிய ஆரம்பித்தது. இந்த ஆன்லைன் பிசினஸ் சரியாக செய்ய வேண்டும் என்றும் அனைவருக்கும் சரிசமமான பங்கு என்ற முறையிலும் தான் துவங்கப்பட்டது. இதில், அந்த குறிப்பிட்ட பெண்ணின் கணவர் குறைந்த சம்பளத்தில் தான் வேலை செய்து வருகிறார். ஆனால், அவருடைய வீட்டை பார்க்கும் போது பணக்காரர் போல் புலப்படுகிறது.
இதை பற்றி கண்காணிக்க தொடங்கிய போது கம்பெனி நிறுவனருக்கும், இந்த பெண்ணுக்கும் இடையே உறவு இருப்பதை கண்டுபிடிக்கிறோம். இந்த பெண்ணின் பணப் பேராசையால், அந்த நபரை மயக்க வைத்த இவருக்கு தேவையான தகவல் அனைத்தையும் வாங்கிக் கொள்கிறார். கிட்டத்தட்ட 90 சதவீத லீட்ஸ் எல்லாத்தையுமே இந்த பெண்ணின் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிட்டார். இதனால், யாருக்குமே பணம் செல்வது கிடையாது. இதை கண்டுபிடித்து அந்த பெண்களிடம் கூறினோம். இதில் அந்த பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். அந்த நபருக்கும் திருமணமாகி தனி குடும்பம் இருக்கிறது. பணத்திற்காக இந்த பெண் செய்த வேலையால் இந்த இரண்டு குடும்பத்திற்கு பிரச்சனை வந்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டீமுக்கே பணம் கிடைக்காமல் பிரச்சனை ஆகிவிட்டது.