Advertisment

குடும்பச் சுமை தாங்காமல் இல்லத்தரசி எடுத்த அதிர்ச்சி முடிவு - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 44

Detective malathis investigation 44

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளும் அப்பாவும் அம்மாவை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

Advertisment

ஒரு வித்தியாசமான வழக்கு இது. ஒரு அப்பாவும் பெண்ணும் என்னை சந்திக்க வருகிறார்கள். அம்மா தங்களை விட்டு சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பெண், அம்மாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அவர் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும், இனிமே வரமாட்டார் என்று சொன்னதாகவும்சொன்னார்.

Advertisment

நான் அந்தப் பெண்ணிடமும், அப்பாவிடமும் சில கேள்விகள் கேட்டு அம்மாவின் குணம், வீட்டின் நிலைமை, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இருக்கும் உறவுமுறை என்று பிரச்சினைக்கான காரணிகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அறிகிறேன். ஆனால், எல்லாவிதமான கேள்விகளுக்கும் ஒன்றுமே இல்லை என்றும் தன் அம்மா ரொம்ப அமைதியானவர், குடும்பத்திற்குமட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் சொல்கின்றனர். அந்த அம்மாவிற்கும் பேரன், பேத்திகள் எடுத்து இரண்டு வயது ஆனதும் வளர்த்து தன் கடமைகளை முடித்து விட்டுதான் திடீரென்று ஆசிரமத்திற்கு சென்று இருக்கிறார்.

ஆனால், இப்பொழுது மீண்டும் வர சொல்லி கூப்பிட்டாலும் வருவதில்லை என்று அவர் வராததற்கு காரணம் கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டார்கள். ஒருவேளை அம்மாவிற்கு வேறு எதுவும் தொடர்பு இருந்தது என்றால் ஆசிரமத்தில் இருக்க மாட்டார்கள் அல்லது ஆசிரமத்தில் அவருக்கு தெரிந்தவர் இருக்கலாம் என்று கூட யூகித்தோம். இருந்தாலும் எதுவும் புரியவில்லை. சரி என்று நாங்கள் இந்த வழக்கை எடுத்து கொண்டு ஆசிரமம் சென்று அந்த அம்மாவின் நடவடிக்கையை கண்காணித்தோம். ஆசிரமம் என்பதால் சுலபமாக எங்களால் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால், அவரை கவனித்த வரை ஒரு குறையும் சொல்லும்படி இல்லை. மிக சாதாரணமாக குடும்பத்தை விட்டு வந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு கூட அவரிடம் இல்லை.

பொதுவாக ஒரு வழக்கை நாங்கள் முடிக்க முப்பது நாட்கள் எடுத்து கொண்டு ரிப்போர்ட்டை கொடுத்து விடுவோம். ஆனால், இது காரணம் கண்டுபிடிக்க முடியாததால் ஒரு மாதம் தாண்டியது. வெளியே வேறு ஏதும் தொடர்பு இல்லை என்பதால் யாரையும் பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்களால் அவரது கணவரையும் பெண்ணையும் மட்டுமே மீண்டும் கூப்பிட்டு விசாரிக்க முடிந்தது. கேட்டதில் தன் அம்மா குடும்பத்தில் நிறைய கவனம் கொண்டு குடும்பத்திற்கு ஏற்ப வேளாவேளை விதவிதமாக சமைத்துக் கொடுத்து அன்பாகத்தான் பார்த்துக் கொண்டார்கள் என்று இருவருமே கூறினர். எனவே, மேலும் இதற்கு மேல் வெளியேதேடி ஒரு பலனும் இல்லை என்று அவரிடமே ஆசிரமத்தில் சென்று விசாரிப்பது என்று முடிவு எடுத்து அனுமதி வாங்கிக்கொண்டு அந்த அம்மாவை சந்தித்தேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ஆனால், அவரிடம் எந்தவித சலனமும் இல்லை. அதற்குப் பின் மெதுவாக அவரிடம் குடும்பம் என்று இருக்கும் பொழுது எதற்காக தனிமையைத்தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டவுடன் மெல்ல அவர் பேச ஆரம்பித்தார். என்னால் முடியவில்லை மேடம். என்னால் இனி அவருடன் வாழ முடியாது என்று சொன்னார். அவரது குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று எந்த ஒரு காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை மனைவி தனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது என்றார். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் யோசித்து விதவிதமாக தினசரி சமைத்துப்போட்டு, தன்னை பற்றி யோசிக்க முடியாமல் அவர் வெறுமையை உணர்ந்திருக்கிறார்.

தன்னுடைய கணவர் எந்த ஒரு உதவியும் செய்வதும் இல்லை மேலும் இப்படித்தான் உணவு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு.. நான் பெற்றெடுத்ததோ பெண் குழந்தை. அதை ஒரு இடத்தில் கட்டிக் கொடுக்கும் வரை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் சகித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு தனக்கு என்று நேரம் வேண்டுமென்று உணர்ந்து இங்கே வந்திருக்கிறேன் என்று சொன்னார். இப்பொழுது தான் தனக்கு விடுதலை கிடைத்திருக்கிறது நிம்மதியாக இருக்கிறேன் என்று ஆத்மார்த்தமாக சொன்னார். அவர் பேசியவுடன் அவர் எப்படிப்பட்ட மன வேதனையுடன் இத்தனைக் காலம் வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்ததாக அந்தப் பெண்ணை கூப்பிட்டு அழைத்து விஷயத்தை சொன்னேன். அந்த அம்மாவின் மனநிலையும் எடுத்து சொன்னேன். அந்தப் பெண்ணும் இதையெல்லாம் எங்க அம்மா எங்களிடமே நேரடியாக சொல்லி இருக்கலாமே என்றார். சொல்லியிருந்தாலும் நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. முதலில் பிரச்சனை யாரிடம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உன் அப்பாவிடம் தான் முதலில் நீ எடுத்து சொல்ல வேண்டும். எனவே இருவரையும் சேர்த்து வைக்கும் வழியை பார் என்று ரிப்போர்ட்டை கொடுத்து அனுப்பினேன்.

ஒரு குடும்பத்தைப் பேணி பராமரிக்கும் பெண்ணை குடும்பத் ‘தலைவி’ என்று உயர்ந்த அங்கீகாரம் கொடுத்து அவர்களை வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை தலைவியாகவோ குறைந்தது அவர்களுக்கென்று ஒரு உணர்வும் தனிப்பட்ட தேவை, ஆசை என்று இருக்கும் என்று பெரும்பாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படியே சென்றால் ஆசிரமங்கள் அநாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு என்று இல்லாமல் இப்படி அநாதையாகவும், ஆதரவற்றோர் வரிசையிலும்குடும்ப தலைவிகள்போய்ச் சேர்வதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe