Skip to main content

சொந்த வீட்டில் திருட்டு; காதலுக்கு மரியாதை செய்த இளம்பெண் -டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 26

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

detective-malathis-investigation-26

 

சொந்த வீட்டிலேயே திருடிய பெண் குறித்த வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்

 

கூட்டுக்குடும்பமாக இருந்த ஒரு குடும்பத்திலிருந்து பெரியவர் ஒருவர் நம்மிடம் வந்தார். தங்களுடைய வீட்டில் கடந்த சில காலமாக பணம், நகைகள் காணாமல் போவதாக அவர் தெரிவித்தார். வீட்டில் யார் மீதும் அவரால் சந்தேகப்பட முடியவில்லை. இதை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறினார். அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நம்மிடம் அறிமுகப்படுத்தினார். 20 வயது நிரம்பிய இளையவர்கள் நிறைய பேர் இருந்தனர். அப்போதே எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்தது. விசாரித்து ரிப்போர்ட்டை மட்டும் தம்மிடம் கொடுக்குமாறு அவர் கூறினார். 

 

எங்களுக்கு சந்தேகம் வந்த நபரின் செயல்களை நாங்கள் கவனிக்க ஆரம்பித்தோம். அவருக்கு ஒரு ஆண் நண்பரோடு தொடர்பு இருந்தது. வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த நண்பர். அவர்கள் இருவரும் வெளியே செல்லும்போது இந்தப் பெண் தான் முழுக்க முழுக்க செலவு செய்தார். இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வருகிறது என்று யோசித்தோம். அந்தப் பையன் புதிதாக பைக் ஒன்றை வாங்கினான். அதற்கு அவனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. அந்த நேரத்தில் வீட்டில் பணம் காணாமல் போனதும் தெரிந்தது. 

 

இதுபற்றி அந்தப் பெரியவரிடம் தெரிவித்தபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால் குடும்பம் பிரியக்கூடாது என்று அவர் நினைத்தார். அவருடைய ஒப்புதலுடன் அந்தப் பெண்ணிடம் நாங்கள் பேசினோம். தான் எதையும் திருடவில்லை என்று முதலில் அந்தப் பெண் தெரிவித்தார். அதன்பிறகு கோபத்துடன் உண்மையை ஒப்புக்கொண்டார். தான் அந்தப் பையனை விரும்புவதாகவும், தங்களுடைய குடும்பத்தின் வசதிக்கு ஏற்ப அவனையும் உயர்த்துவதற்காகத் தான் இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். இது தவறானது என்பதை அவருக்கு நான் புரியவைத்தேன். 

 

அந்தப் பையன் அவராகவே உயர வேண்டும், அதற்காக திருடுவது தவறு என்று கூறினேன். இதுபற்றி மற்றவர்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்தப் பெரியவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற இன்னொரு வழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு எங்களிடம் வந்தது. காவல்துறையினர் வந்து பிள்ளைகளை மிரட்டுவதாகவும், காவல்துறையிடம் சென்றது தவறு என்றும் கூறி அந்தக் குடும்பத்தினர் எங்களிடம் வந்தனர். அனைவரின் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் சக்திவாய்ந்த குடும்பம் அது. யார் தவறு செய்தது என்பதைக் கண்டுபிடித்த நாங்கள், அவரிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொன்னோம். அவரும் வாபஸ் வாங்கினார். பிரச்சனை முடிந்தது.

 


 

 

Next Story

கணவனின் காதலியைச் சந்தித்த மனைவி; நடந்த எதிர்பாராத திருப்பம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 46

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Detective-malathis-investigation-46

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், கணவனை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஒரு திருமணம் ஆகி வேலை பார்த்து கொண்டிருக்கும் பெண் நம்மிடம் புகார் அளிக்க வந்தார். தன்னுடைய கணவன் இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியூர் சென்றதிலிருந்து நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக சொன்னார். சாதாரணமாக தன்னுடைய கணவர் மிகவும் நல்ல மனிதர். குழந்தையையும் தன்னையும் நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் சமீப காலமாக தான் வித்தியாசமாக இருக்கிறார் என்று கண்காணித்து சொல்லுமாறு கேட்டு கொண்டார். 

அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்க  இப்பொழுது மீண்டும் மனைவி கர்ப்பமாக இருந்தார். எல்லா தகவல்களையும் பெற்றுக் கொண்டு கணவரை பின்தொடர ஆரம்பித்தோம். அலுவலகத்தில் வேறு ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா என்றும் முதலில் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதன் பிறகு அவரை தொடர்ந்ததில் எல்லாம் சரியாக இருப்பதாக தெரிந்தாலும் அவர் முகத்தில் மட்டும் ஒரு வித பயமும் குற்ற உணர்வும் இருந்தது. ஒரு 15 நாட்கள் கழித்து அலுவலக நேரத்தில் ஒரு காபி ஷாப்பில் ஒரு லேடியுடன் கைகோர்த்துக் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். மேலும், இருவரும் சேர்ந்து வெளியே சந்திப்பது என்று இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். அந்த பெண்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார் தவிர இவர் கொஞ்சம் தள்ளி தான் இருந்தார். இது எங்களுக்கு புதிராக இருந்தது. அந்த பெண்ணிற்கு தான் ஏதோ ஒரு தொந்தரவு இருப்பதாகவும் இவர் ஆதரவு மட்டுமே அளிப்பதாக இருந்தது. 

ஆனால் அந்த பெண்ணை பார்க்கும் போதும் தவறானவர் போலவும் தெரியவில்லை. அந்த பெண்ணை அடுத்து பின் தொடர்ந்ததில்  ஒரு நாள் நீதிமன்றத்திற்கு சென்று மியூச்சுவல் கன்சன்ட்டில் டைவர்ஸ் வாங்குவதை நேரில் பார்த்தோம். அதற்கு பின்னர், இந்த பெண் தான் விடாப்பிடியாக இவரை பிடித்து வைத்திருக்கிறார் என்று புரிந்தது. நாங்கள் உறுதி செய்த பின், எங்களிடம் புகார் அளித்த பெண்ணை கூப்பிட்டு விஷயத்தை சொன்னோம். உங்கள் கணவரும் பழகுவதை பார்த்தால் தப்பாக தெரியவில்லை. ஆனால் அந்த பெண் தான் உங்கள் கணவரை விடாமல் தொடர்பில் இருக்கிறார். அவரிடம் இதைப் பற்றி பேசுமாறு சொல்லி அனுப்பி வைத்தோம். நாங்கள் அதற்கிடையில் அந்த விவாகரத்து கொடுத்த அந்த கணவனை பின்தொடரவும் செய்தோம். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்று தெரிய வந்தது. 

கணவனிடம் வேறொரு நபர் சொல்லியதாக சொல்லி விஷயத்தை பற்றி கேட்டபோது அந்த கணவரும் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருப்பதினால் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தான் இவ்வளவு நாள் சொல்லாமல் தள்ளி போட்டிருந்தேன் என்று மெல்ல என்ன நடந்தது என்ற விஷயத்தை சொல்கிறார். அந்தப் பெண்ணைத்தான் ஒரு காலத்தில் காதலித்ததாகவும் ஆனால் அவள் பெற்றோர்கள் சம்மாதிக்காததால் அவளுக்கு வேறு ஒரு திருமணம் நடந்து விட்டது. அதன் பின் தொடர்பு இல்லை. ஆனால் இரண்டு மாதம் முன்பு ஆபீஸ் டூர்  போன பொழுதுதான் அந்த பெண்ணைச் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு பின்னர் எனக்கு குடும்பம் முக்கியம் என்று எவ்வளவோ சொன்னாலும் அவள் தன் கணவன் ரொம்ப கொடுமைப்படுத்துவதாக சொல்லி விவாகரத்து வாங்கிவிட்டு என்னுடைய துணை வேண்டும் என்று விடமால் தொடர ஆரம்பித்து விட்டாள் என்றார். இதைக் கணவர் எடுத்து சொல்லியவுடன் அந்தப் பெண் என்னை சந்தித்து இதுபோல தன் கணவன் எல்லா உண்மையும் சொல்லிவிட்டதாக சொன்னார். நான் அவரிடம் வேறு மூன்றாவது நபர் பேசுவதை விட நீங்களே அந்தப் பெண்ணிடம் குழந்தையுடன் போய் சந்தித்து நிலைமையை சொல்லி பேசுங்கள். அந்தப் பெண்ணும் மன உளைச்சலில் தான் இருக்கிறார் என்பதால் கடினமாக பேசாமல் நிலைமையை சொல்லி பொறுமையாக பேசுங்கள். கண்டிப்பாக புரிந்து கொள்வார். அந்தப் பெண்ணும் பார்க்க தவறாக தெரியவில்லை என்ற சொல்லி அனுப்பினோம். அதேபோல இருவரும் பேசியதில் அந்தக் காதலி புரிந்து கொண்டு தன்னால் இனிமேல் குடும்பத்தில் தொல்லை வராது என்று வெளியூர் சென்று விட்டதாக சொன்னார்.  பிரச்சனையும் சுமூகமாக முடிந்தது.

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஹரிஹரனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Armstrong case Hariharan is being investigated by the police

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை கடந்த 20 ஆம் தேதி (20.07.2024) கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையும், ஆம்ஸ்ட்ராங் எதிரிகளை ஒருங்கிணைத்ததாக ஹரிதரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Armstrong case Hariharan is being investigated by the police

அதே சமயம் பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து  விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து செம்பியம் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ரூ.50 லட்சம் பணம் யாரிடம் இருந்து வந்தது?. எங்கெங்கு ரவுடிகள் சந்திப்பு நடந்தது?. வேறு யாருக்கு எல்லாம் இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது?. என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Armstrong case Hariharan is being investigated by the police

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான ஆலோசனையை அவ்வப்போது சம்போ செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வடகிழக்கு மாநிலங்களில் சம்போ செந்தில் எங்கெங்கு தங்குவார் எனவும்  போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சம்போ செந்திலுக்கும்,  ஹரிஹரனுக்கும் உள்ள பத்தாண்டு கால தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்துள்ளனர்.