Skip to main content

அம்மாவின் ரகசிய உறவை அறிந்த மகன் எடுத்த முடிவு - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 11

 

Detective Malathi's Investigation: 11

 

துப்பறியும் நிபுணராக தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் விதவை தாயின் இன்னொரு பக்கத்தினை தெரிந்து கொண்டு ஷாக் ஆன உறவினர்களை பற்றியும் அவரது மகன் எடுத்த முடிவு பற்றியும் விளக்குகிறார்.

 

பெண் என்றால் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏற வேண்டும் என்கிற காலம் போய், தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானிக்கும் நிலை இன்று வந்துவிட்டது. தன் கணவருடைய சகோதரர் மனைவி குறித்து துப்பறிய வேண்டும் என்று ஒரு பெண் நம்மிடம் வந்தார். அந்தப் பெண்ணுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார். நாங்கள் விசாரிக்க ஆரம்பித்தோம். தினமும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று இன்னொரு வீட்டுக்குச் செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். தனியாகப் போராடி தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். மகன் வெளிநாடு சென்றான். 

 

அதன்பிறகு இன்னொருவருடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ முடிவு செய்தார். இந்தத் தொடர்பு குறித்து குடும்பத்தினரிடம் சொன்னபோது அவர்களுக்கு அதிர்ச்சி. கணவன் இறந்துவிட்டால் ஒரு பெண் தனியாகத்தான் வாழ வேண்டும் என்கிற மனநிலை சமுதாயத்தில் இன்றும் இருக்கிறது. இதைக் காரணம் காட்டி சொத்துக்களை குடும்பத்தினர் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கின்றனர். அந்தப் பெண் செய்ததில் தவறு எதுவும் இல்லை என்பதை குடும்பத்தினரிடம் நான் விளக்கினேன். 

 

குடும்பத்துக்கான கடமைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றியதால் அவருக்கும் சொத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்றேன். என்னுடைய கருத்தை ஏற்று அந்தப் பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப்பட்டது. தாயின் தொடர்பு குறித்து மகனுக்குத் தெரிந்தபோது தன் தாய் மகிழ்ச்சியாக வாழ்வதே தனக்கு முக்கியம் என்று மகன் முடிவெடுத்தான். இருவருக்கும் திருமணம் செய்து வைத்தான். இந்த முற்போக்கான முடிவை வரவேற்று நானும் திருமணத்தில் கலந்துகொண்டேன். இது போன்ற வித்தியாசமான வழக்குகளையும் நான் சந்தித்து இருக்கிறேன்.


 

இதை படிக்காம போயிடாதீங்க !