/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/malathi_2.jpg)
டெக்னாலஜி பெரிதாக இல்லாத காலத்தில் தன்னிடம் வந்த ஒரு வழக்கு குறித்துதுப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
மொபைல் எல்லாம் இல்லாத காலத்தில் நடந்த விஷயம் இது. 1999 ஆம் ஆண்டு என்னை சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு நபர் என்னை சந்திக்க வந்தார். அவருக்கு அதற்கு முந்தைய நாள் தான் திருமணமாகியிருந்தது. தனக்கு சில தகவல்கள் வேண்டும் என்று அவர் கூறினார். தன்னுடைய மனைவிக்கு இன்னொருவரோடு தொடர்பு இருக்கிறது என்று கூறினார் அவர். வெளிநாட்டில் வசிக்கும் அவர், திருமணம் முடிந்து மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் எண்ணத்தில் இருந்தார்.
இன்னொரு ஆணுடன் தன்னுடைய மனைவி பேசிய போன்காலைதான் ஒட்டுக் கேட்டதாகவும், நீ இப்போது சொன்னால் கூட நான் உன்னுடன் வந்து விடுவேன் என்று தன்னுடைய மனைவி அவனிடம் கூறியதாகவும், யாருக்கும் தெரியாமல் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தன்னுடைய மனைவி அந்தப் பையனோடு வாழ விரும்பினால், அதற்குத் தான் சம்மதிப்பதாகவும் கூறினார். அந்த ஆண் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகவல் மட்டும் கிடைத்தது. நாம் விசாரணையைத் தொடங்கினோம். அந்தப் பையனின் நம்பரைத் தேடி அவனுக்கு கால் செய்தோம்.
தானும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்ததாகவும், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதால் அவளுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை நடத்திவிட்டதாகவும் அவன் கூறினான். மூன்று பேரும் எங்களுடைய அலுவலகத்துக்கு வந்தனர். எந்த விவரமும் சொல்லாமல் அந்தப் பெண்ணை நம்முடைய அலுவலகத்துக்கு அவளுடைய கணவர் அழைத்து வந்திருந்தார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவளிடம் கூறினோம். தன்னுடைய கணவருடனேயே வாழ விரும்புவதாக அவள் கூறினாள். தன்னுடைய காதலனிடம் பேசி இது வேண்டாம் என்று கண்வின்ஸ் செய்கிறேன் என்றாள். அந்தக் காதலனுக்கும் அதிர்ச்சி.
தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், கணவரோடு இருந்தால்தான் வெளிநாடு செல்ல முடியும் என்றும் அவள் கூறினாள். காதலனுடைய நினைவுகளோடு அவள் தன்னோடு வாழ்வதைத் தான் விரும்பவில்லை என்று அவளுடைய கணவர் கூறினார். காதலனோடு இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தால் அவளை அழைத்துச் செல்லத் தயார் என்றும் கூறினார். அவளுடைய பெற்றோரை அழைத்து அனைத்தையும் கூறினோம். மகளின் காதல் விஷயம் மற்றவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அனைவரிடமும் பேசி முடிவுக்கு வந்து, இறுதியில் கணவருடனேயே அவள் வெளிநாடு சென்றாள். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், அந்த முன்னாள் காதலன் மீது பரிதாபப்பட்ட பெண்ணின் தங்கை, அவனைத் திருமணம் செய்துகொண்டாள். அவர்களும் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் வாழ்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)