ADVERTISEMENT

"வாங்க செட்டியார், வாங்க உடையார் என்று பேசினாலும் எங்களுக்கு ஜாதி வெறி இருந்ததில்லை" - பர்மா கதைகள் பகிரும் பாக்யம் #2

06:13 PM May 05, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் இரண்டாம் பகுதி...

எங்க அப்பா காலத்தில் எல்லோரும் சென்னை வந்து, சென்னையிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து கௌகாத்தி வந்து, கௌகாத்தியிலிருந்து மணிப்பூர் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே பர்மாவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பாதைகள் சரியாக இல்லாததால் வழிநெடுக நிறைய பிரச்சனைகள் இருந்தன. சிலர் நோய் வந்தும், சாப்பாடு இல்லாமலும் இறந்து போயிருக்கிறார்கள். அன்றைக்கு ரங்கூன் சிட்டி ரொம்பவும் சிறியது. அன்றைக்கு அந்த சிட்டிக்குள் மட்டுமே காரில் போகமுடியும். அதைத் தாண்டி வெளியே செல்லவேண்டுமானால் கப்பலில்தான் செல்லவேண்டும். இந்தக் கப்பல் எல்லாம் பர்மாவை அடித்து நாசம் செய்ததற்கு நஷ்ட ஈடாக ஜப்பான் கொடுத்த கப்பல். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நாடு முழுக்க சாலை வசதி கொண்டுவந்துவிட்டார்கள்.

நம்முடைய ஆட்கள் இன்னமும் 5 லட்சம் பேர் வரை அங்கிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பர்மா மக்களோடு கலந்து அவர்கள் மொழி பேசி, அவர்கள் உணவை சாப்பிட்டு பர்மிய மக்களாகவே மாறிவிட்டார்கள். அங்கு நம் ஊர் முஸ்லீம்கள் 500 மரக்கடைகளுக்கு மேலாக வைத்திருந்தார்கள். ஆரம்ப காலத்தில் நான் அதிலுள்ள ஒரு கடையில்தான் வேலை பார்த்தேன். நம்ம ஊர் செட்டியார்கள், மார்வாடிகள், பெங்காலிகள்தான் அங்கு அதிகப்படியாக இருந்தார்கள். நம்ம ஊர் மவுண்ட் ரோடு மாதிரி அங்கு சூளப்பியா என்று ஒரு ரோடு இருக்கும். அந்த ரோடு முழுவதும் இவர்கள் கடைகளாகத்தான் இருக்கும்.

செட்டியார்கள் மண்ணை பிடித்துவிட்டார்கள், மார்வாடிகள் தங்கத்தை பிடித்துவிட்டார்கள் என்று அங்கு ஒரு பழமொழியே சொல்வார்கள். அங்கிருந்த பர்மிய மக்களுக்கு பெரிய அளவிலான தொழில் செய்வதற்கெல்லாம் வாய்ப்பே அமையவில்லை. ரொம்பவும் பாவப்பட்ட மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். அந்த மக்களுக்கான உரிமைகளை நாம் அதிகமாக எடுத்துக்கொண்டதால்தான் நம்மை அவர்கள் வெளியே தள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்க வீட்டில் மொத்தம் 10 குழந்தைகள். நான்தான் கடைசியாக பிறந்தேன். என்னுடைய மூத்த அண்ணன் ஒருவர் அங்கிருந்த ராணுவத்தில் சேர்ந்து, ஒரு குண்டுவீச்சில் இறந்துவிட்டார். அந்த சம்பவத்தில் 30, 40 பேர்வரை இறந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீதிருந்த பற்றி காரணமாக நிறைய பேர் படையில் சேர்ந்தார்கள். அவருக்காக படையில் சேர்ந்து நிறைய பேர் உயிரை தியாகம் செய்தார்கள். சிலர் ஜெயிலில் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தற்போது உதவித்தொகை கொடுக்கிறார்கள்.

சுதந்திர போராட்டம் பற்றி தெளிவு இல்லாவிட்டாலும்கூட, இந்தியா, தமிழர் என்ற உணர்வு பெரிய ஈர்ப்பை கொடுத்து சுதந்திர போராட்ட வெறியை ஏற்படுத்தியது. வெள்ளாளர், செட்டியார், உடையார், தேவர் என எல்லா சாதியினரும் அங்கு இருந்தனர். வாங்க செட்டியார், வாங்க உடையார் என்றெல்லாம் பேசினாலும் எங்களுக்குள் ஜாதி வெறியில்லை. எல்லோருமே நாட்டுப்பற்று, இனப்பற்றுடன் ஒற்றுமையாக இருந்தோம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT