ADVERTISEMENT

"தமிழர், இந்தியர் என்ற உணர்வே நம் மக்களுக்கு பிரச்சனையாகிவிட்டது" - பர்மா தமிழர்களின் கதைகள் பகிரும் பாக்யம் | பர்மா கதைகள் #1

01:32 PM Apr 29, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் முதல் பகுதி...

"என் பெயர் பாக்யம். பர்மாவிலேயே பிறந்து வளர்ந்த நான் 1965ஆம் ஆண்டு அங்கிருந்து இந்தியா வந்தேன். பர்மா பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

எங்க அப்பா, அம்மா சொந்த ஊர் ராமநாதபுரம். அவர்கள் திருமணமானவுடன் அங்கிருந்து கிளம்பி பர்மா வந்தனர். வாழ்வதற்கு வழியில்லாமல் இந்திய மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிழைப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்தால் பர்மாதான் அவர்களது முதல் தேர்வாக இருக்கும். அப்படி ராமநாதபுரத்தில் இருந்து நிறைய பேர் அங்கு வந்தார்கள். சிலர் கப்பலில் சென்றார்கள், சிலர் கால்நடையாகவும் சென்றார்கள். இங்கிருந்து வந்த ஆட்களுக்கு நிலம் பிரித்துக்கொடுத்து அதில் விவசாயம் செய்ய வைத்தார்கள். நம் ஊரில் இருப்பது மாதிரியான பயிர் அங்கு இருக்காது. ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கும். அங்கு சபனை என்று ஒரு அரிசி இருந்தது. ரொம்பவும் சுவையாக இருக்கும். அந்தக் காலத்தில், உலகத்திலேயே பர்மாவில் விளையும் அரிசிதான் சிறந்த அரிசியாக இருந்தது.

அங்கு மொய்ங்கா, பன்றி இறைச்சி, மீன் அதிகமாக சாப்பிடப்படும் உணவாக இருந்தது. ஆனால், அங்கிருந்த நம் மக்கள் அதை அவ்வளவு விரும்பி சாப்பிடமாட்டார்கள். அங்கிருந்த சைனீஸ்காரர்கள்கூட வீட்டில் பர்மாவில் பேசுவார்கள். ஆனால், நம் ஆட்கள் தமிழில்தான் பேசுவார்கள். தமிழ் உணர்வோடுதான் நம் மக்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகக்கூடியவர்கள் பர்மா மக்கள். சைனீஸ் ஆட்கள் அதிகமான பின்னர்தான், அங்கு பிரச்சனையே ஆரம்பித்தது. இப்போது சிறையில் இருக்கும் ஆங் சாங் சூகியின் தந்தை ஆங் சாங் கையில்தான் சுதந்திரம் கொடுத்தார்கள். 16 பேரை வைத்து அவர் அரசாங்கத்தை நடத்திவந்தபோது அவர் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அதன் பிறகு யு நு பிரதமரானார். இவருக்கு இந்திய பிரதமர் நேருவோடு நல்ல நெருக்கம் இருந்தது.

அங்கிருந்த நம் மக்கள் தமிழர்கள், இந்தியர்கள் என்ற உணர்வோடே கடைசிவரை இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. பர்மியர், பர்மியர் அல்லாதவர்கள் என்று அந்த நாட்டில் கணக்கெடுத்தார்கள். பர்மியர் அல்லாதவர்களுக்கு ஒரு அட்டையைக் கையில் கொடுத்து வருடத்திற்கு 25 ரூபாய், 50 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். நம் மக்கள் அதையும் கட்டினார்கள். ராணுவ ஆட்சி வந்த பிறகு, பர்மியர் அல்லாத ஆட்களின் கடைகளை பிடுங்கிவிட்டார்கள். கரன்சியை மாற்றிவிட்டதால் கையில் இருந்த காசும் செல்லாத காசுகளாகிவிட்டது. அங்கிருந்த இந்திய தூதரகத்தில் சென்று போராட்டம் நடத்தியதால் இந்தியாவிலிருந்து கப்பல் அனுப்பினார்கள். அந்தக் கப்பலில் அகதியாகவும் வரலாம். 50 ரூபாய் பணம் கட்டியும் வரலாம். பணம் கட்டி வந்தவர்களுக்கு ஒரு பவுன் தாலிச்செயின் மட்டும் எடுத்துவர அனுமதி. அகதியாக வருபவர்கள் நகை, சொத்துகள் எதையும் எடுத்துவர முடியாது. அதனால் அங்கு சேர்த்து வைத்திருந்த வீடு உள்ளிட்ட சொத்துகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த மிலிட்டரி ஆட்சியில்கூட நம்ம ஊர் செட்டியார் ஒருவர் அமைச்சராக இருந்தார். அந்த மக்களையும் குறை சொல்ல முடியாது. அவர்கள் நாடு என்பதால் அவர்கள் உரிமை என்று பேசினார்கள். அதில் நிறைய பேர் பாதிக்கப்பட்டார்கள். தமிழர்கள் நாம் கொஞ்சம் அதிகப்படியாகவே பாதிக்கப்பட்டோம்".

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT