Skip to main content

முதுகெலும்பு உடைஞ்சவன்தானேன்னு கேட்டாங்க... ஆனால் இன்று??! பியர் கிரில்ஸ் | வென்றோர் சொல் #22

Published on 09/10/2020 | Edited on 11/01/2021

 

Bear Grylls

 

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது தமிழில் பிரபலமான பழமொழிகளுள் ஒன்று. இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இந்த மனிதரைச் சொல்லலாம். இன்று நம் புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு பழமொழியும், சொலவடையும் ஒரே நாளில் உருவானவையல்ல. அது ஒவ்வொன்றுக்குப் பின்னும் நீண்ட நெடிய வரலாறும், உயிர் பிழைத்தலை உள்ளடக்கிய மனித வாழ்வியல் போராட்டங்களும் உள்ளன. அதற்கான உதாரணமாக இந்த மனிதர் செய்யும் செயல்களைச் சொல்லலாம்.

 

உயிர் பிழைத்தலின் அடிப்படை, சூழலோடு பொருந்திப் போதலே ஆகும். பூமிப்பந்தில் பல உயிரினங்கள் இவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பகட்டை விரும்பும் மனிதகுலத்திற்கு இது அத்தனை எளிதானது அல்ல. அடர் வனப்பகுதியோ, வறண்ட பாலைவனமோ, குளிர்ப் பிரதேசங்களோ எதுவாகியினும் அச்சூழலோடு பொருந்தி சவால்களும், ஆபத்துகளும் நிரம்பிய பகுதிகளைக் கடந்து வரும் இம்மனிதனின் பயணம் நமக்கு வெறும் ஆச்சரியமும், பொழுதுபோக்கும் அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால், உண்மையில் அது ஆதிகால மனிதனின் இடப்பெயர்வு வாழ்க்கையையும், அதில் நிரம்பியிருந்த சவால்களையும் தாங்கிய வரலாறு. சூழலோடு பொருந்தி ஆபத்தின் எல்லைகளை அளந்த சாதனை மனிதன் பியர் கிரில்ஸ் என்பதே இவருக்குப் பட்டம் சூட்டும் சந்தர்ப்பம் அமைந்தால் சூட்ட வேண்டிய பொருத்தமான பட்டமாக இருக்கும்.

 

அயர்லாந்து நாட்டில் எளிமையான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் பியர் கிரில்ஸ். அவரது தந்தை ஒரு சாகசப்பிரியர். அவர் அயர்லாந்து நாட்டில் இருந்த பிரபல பொழுதுபோக்கு கிளப்புகளில் உறுப்பினராக இருந்ததால் இளம் வயதிலேயே பியர் கிரில்ஸிற்கு மலையேறுவது, படகு ஓட்டம் செய்வது குறித்து கற்றுத்தருகிறார். சாகசங்களில் ஈடுபடுவது பியர் கிரில்ஸிற்கு பிடித்துப் போக, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவர் ஏறிக் குதிப்பது, ஆபத்தான பள்ளங்களைத் தாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம் மீது அவருக்குத் தீராத காதல் ஏற்படுகிறது. அதை எப்படியாவது ஏறி அடைய வேண்டும் என்பதே அவரது சிறு வயது கனவு.

 

பிறகு, பிரிட்டிஷ் ராணுவத்தில் வான்படை வீரராகப் பணி செய்கிறார். ஆப்பிரிக்க பகுதியில் 16,000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது, பாராசூட் செயலிழந்து, கீழே விழுந்ததில் முதுகுப்பகுதியில் மூன்று எலும்புகள் பலத்த சேதம் அடைகின்றன. இனி எழுந்து நடப்பது சிரமம் என மருத்துவர்கள் கூற, 18 மாதங்கள் கழித்து தன்னம்பிக்கையோடு எழுந்து, தன் சிறுவயது கனவான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைக்கிறார். அதன்பின், ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய மேன் வெர்சஸ் வைல்டு (Man Vs Wild) என்ற தொடர் பெற்ற வெற்றி உலகம் அறிந்ததே.

 

"சிறு வயதாக இருக்கும் போது என் தந்தையுடன் மலையேற்றம், படகு ஓட்டம் செய்யப் போவேன். அதில் மலையேற்றம் செய்வது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அது மிகவும் சிறிய மலைதான். ஆனால், அதை ஏறி முடித்த பின் உலகத்தில் உள்ள ஏதோ ஒரு பெரிய மலையை ஏறியது போல உணர்ந்தேன். அந்தச் சமயத்தில் எனக்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமானது. எப்படியாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். என்னுடைய அறையின் சுவர்களில் எவரெஸ்ட் சிகரத்தின் படங்கள்தான் நிரம்பியிருக்கும். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 18 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். மருத்துவர்கள் எழுந்து நடக்கவே முடியாது என்று என் குடும்பத்தினரிடம் கூறினார்கள். நான் நம்பிக்கை கொண்டு எழுந்தேன். எவரெஸ்ட் ஏறுவதற்காக ஸ்பான்ஸர்ஷிப் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் நீ முதுகு எலும்பு உடைந்தவன் தானே... உன்னால் எப்படி எவரெஸ்ட் ஏற முடியும் என்றார்கள். நான் நம்பிக்கையை சிறிதும் இழக்கவில்லை. மிக இளம்வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்தேன்".

 

பியர் கிரில்ஸை உலகப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற மேன் வெர்சஸ் வைல்டு (Man Vs Wild) என்ற நிகழ்ச்சியில், உயிர் பிழைத்தலுக்காக அவர் கற்றுத்தரும் வழிமுறைகள் அனைத்தும் விசித்திரமானவை. நீர் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாத நேரத்தில், விலங்குகளின் சாணத்தைப் பிழிந்து அதில் இருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்துவது, இறந்து கிடக்கும் மிருகங்களின் இரைப்பையில் இருக்கும் நீரை எடுத்துப் பயன்படுத்துவது, கிடைக்கும் சுள்ளிகளை வைத்து எளிமையாக நெருப்பு உருவாக்குவது, மிருகங்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை, ஆபத்தான பகுதிகளைக் கடப்பது எனச் சவால்கள் நிறைந்த அவரது பயணம் நாமே காடுகளுக்குள் உலவுகிற ஒரு அனுபவத்தினையும், உயிர் பிழைத்த உணர்வையும் கொடுக்கும்.    

 

Ad

 

"வாழ்க்கை நமக்கு எப்போதும் ஒரு வாய்ப்பினை மட்டுமே வழங்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட கோடு நம் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது" இவை தான் பியர் கிரில்ஸை படுக்கையில் இருந்து எழ வைப்பதற்கும், இன்று வரை மலைகள், காடுகள் எனப் பயணத்தைத் தொடர்வதற்குமான ரகசிய மந்திரமாகும்.

 

எழுந்து நடக்கவே வாய்ப்பில்லை என்று முடிவு எழுதப்பட்ட நபர், இன்று மலைகள், காடுகள், பாலைவனங்கள், குளிர்ப் பிரதேசங்கள் என இயற்கையின் அத்தனை கைவண்ணங்களையும் அலசி ஆராய்வதற்கான ஊக்கம் அவர் மீது அவர் கொண்ட நம்பிக்கையே எனலாம். கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்! 

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.