சோவியத் மக்கள் தற்போது பிடல் காஸ்ட்ரோவை நேரில் பார்த்திருக்கிறார்கள், அவரது வசீகரமிக்க மேன்மையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள், அவரைப் பற்றிய எனது சொந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன், அத்தகைய தருணங்களில், அவர் என்னுடன் இலக்கியப்பூர்வமாக விஷயங்களை பகிர்ந்துகொள்வார்.

pablo neruda

அவரை பார்க்க விரும்புபவர், அவருடைய முழுமையான உயரத்தில் பார்க்க வேண்டும். அவர் மிக உயரமானவர். அவர் நமது கண்களுக்கு எதிரிலேயே வளர்ந்தார். அவருடைய நாடும் வளர்ந்திருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், அவரது சின்னஞ்சிறு தீவான கியூபா, இன்றைக்கு கரீபியன் கடல் பிரதேசத்திலும், மாபெரும் ஜனத்திரள் முன்பும் மிக முக்கியமான பங்களிப்பை ஏற்றுச் செயல்படுகிறது.

கரீபியின் கடல் பிரதேசம், இரண்டு புரட்சிகர நிகழ்வுகளைப் பார்த்துள்ளது. அந்தக்கடலில், இரண்டு எதிரெதிர் தத்துவங்கள், இரண்டு கப்பல்கள் மோதிக் கொள்வதைப்போல மோதிக் கொண்டன. அதாவது, தேசபக்தர்கள் தங்கள் நாட்டை விடுவித்து அதன் வாழ்வை வளமானதாகவும் அழகானதாகவும் மாற்ற விரும்பினார்கள். அவர்களுக்கு மாறாக மற்றொரு பிரிவினர், அவர்களுடைய வழியில் இருந்து விலகிச் சென்று, ஏற்கனவே இருக்கிற மோசமான அரசியல் அதிகாரத்தை அப்படியே பாதுகாக்க முயன்றார்கள்.

Advertisment

இந்த எதிரியைப்பற்றி விளக்குவது மிகவும் கடினமானது. அந்த எதிரிக்கு மஞ்சள் செய்தித்தாள் போன்ற முகம் உண்டு. சக்திவாய்ந்த, உரத்தகுரலில் பேசுகிற ரேடியோ ஒலிபரப்பு நிலையம் எனும் குரல் உண்டு. அணு ஆயுதங்கள் என்ற பற்கள் உண்டு. அந்த எதிரி பெண்டகன் என்ற சீருடை அணிந்தவன். அவனது கை விரல்களும், புலி நகங்களைக் கொண்டவை. லத்தீன் அமெரிக்கர்களாகிய நாங்கள், எங்களது சொந்த அனுபவத்தில் இருந்துதான் இதைப் புரிந்துகொண்டோம்.

விடுதலை அடைந்த கியூபா தீவால் மட்டும் பிடல் ஆதரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உலகமும் அவரை ஆதரிக்கிறது. அவர், இப்பூவுலகில் மிகுந்த நம்பிக்கையுடன் நடந்த மாமனிதர். அவர் தனது கொட்பாடுகளில் உறுதியாக இருந்தார்.

Advertisment

pablo neruda

பிடல், கியூபா எனும் தீவை தனது இதயத்தில் தாங்கியிருந்தார். பிடலின் உருவத்துடன் இணையும் வரை, இந்தத் தீவு அடையாளமின்றி இருந்தது. மாபெரும் எழுச்சிமிகு வாழ்வு, உணர்வுகள், கஷ்டங்கள் மற்றும் போராட்டங்கள் ஆகியவை, கியூபாவின் இதயத்தை உணர்வுபூர்வமானதாக மாற்றின. செயலூக்கம் மிக்கதாகவும், ஜனரஞ்சகமானதாகவும் அந்த இதயம் இருக்கிறது. துணிவு, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றால் அந்த இதயம் நிரம்பியுள்ளது. அந்த இதயத்திற்குள் ஏராளமான ஆக்கப்பூர்வமான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க கண்டமும் தனது நாளங்களில் புதிய ரத்தம் பாய்ந்த வேகத்தை உணர்ந்தது. புத்தெழுச்சி, துணிவு, மற்றும் புதிய பலத்தின் அலைகள் உடலெங்கும் பரவி பரவசப்படுத்தியது.

அந்த சின்னஞ்சிறு கியூபா தீவே, இந்த லத்தீன் அமெரிக்க கண்டம் என்ற உடலின் இதயமாக மாறியது.

நாங்கள் ஏன் பிடலைப் போற்றுகிறோம்; ஏன் அவரை நேசிக்கிறோம்; ஏன் அவரைப் பாதுகாக்கிறோம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

அதனால்தான், சில நேரங்களில் கிடார் இசையைப் போலவும், சில நேரங்களில் பெரும் புயலைப் போலவும் ஒலி எழுப்புகிற ஸ்பானிய மொழியில் அவரைப்பற்றி நான் பாடினேன். நான் பிடலை ஒரு உணவகத்தில் பார்த்தபோது, ஒரு பாட்டிலை எடுத்து, அதிலிருந்து ஒரு கிளாஸ் ஒயினை ஊற்றிவிட்டு, அவரிடம் எனது “ஒரு கதாநாயகனுக்கு வந்தனம்” என்ற கவிதையைப் பாடினேன்.

pablo neruda

பிடல், அனைத்து தேசங்களும் உனக்கு நன்றி சொல்கின்றன.

அனைவருக்குமாக நீ மாறினாய் அவர்களுக்காக அனைத்தையும் செய்தாய்.

அதனால்தான், நான் தொலைவில் இருந்து வந்துள்ளேன். எனது சொந்த தேசத்தின் திராட்சை ரசத்தை உனக்காக கொண்டு வந்திருக்கிறேன்.

இது, சுரங்கத் தொழிலாளிகள் தங்கள் உழைப்பிலிருந்து வாங்கிய திராட்சை ரசம். பூமியின் பனிக் கின்னங்களிலிருந்து உறிஞ்சியெடுத்த தீக்குழம்பு இது.

நிலக்கரியைத் தேடிப்பிடிக்க, அவர்கள் ஆழ்கடலுக்கு அடியில் நடக்கிறார்கள். வெளிறிப்போன நிழல்களைப் போல அவர்கள் திரும்பி வருகிறார்கள். முடிவற்ற இரவே அவர்களுக்கு மிச்சம், சூரிய ஒளியையும், பகல் வெளிச்சத்தையும் அவர்கள் பார்க்க முடியாது.

இதோ, இங்கே, உனது கிளாஸில் அவர்களின் திராட்சை ரசம். இது, அவர்களது துன்பங்களில் இருந்தும், முடிவற்ற பயணங்களாலும் உருவாக்கப்பட்டது!

அது ஒரு சிறைக் கைதியின் மகிழ்ச்சியைப் போன்றது! இருளாலும் நம்பிக்கையாலும் நிறைந்தது.

pablo neruda

வசந்தம் அதன் மணங்களுடன் வந்துவிட்டதை அவர்கள் அறிவார்கள்.

தங்கள் சுரங்கங்களின் ஆழத்தில் இருள் சூழ்ந்திருக்கும்போதும், மனிதன் ஒருபோது வீழமாட்டான் அந்தத் தொழிலாளி அறிவான்.

அவனது முழுமையான இலக்கை அடையும் வரை எங்களது தெற்குப் பிரதேச சுரங்கத் தொழிலாளிகளும், படகோனிய ஆடுமேய்ப்பர்களும், கியூபாவைப் பார்க்கிறார்கள். பம்பாஸ் புல்வெளியின் ஆதரவற்ற சிறுவர்களுடனும், வெள்ளி மற்றும் தகர தாதுக்களின் தந்தையரும்,

சுக்குய்கமாதா மலைகளின் ஆழக் குகைகளின் அடியில் தாமிரத்தை வெட்டியெடுக்கும் தொழிலாளர்களுடனும்,

குழந்தைப் பருவம் முழுவதும் அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளுடனும்...

பிடல், இந்த திரட்சை ரசத்தை எடுத்துப் பருகுங்கள், அதில் ஏராளமான நம்பிக்கைகள் நிரம்பியுள்ளன...

பருகுங்கள், நீங்கள் உங்கள் வெற்றியை உணர்வீர்கள்.

இது எனது தேசத்தின் சொந்த திராட்சை ரசம்.

தனி நபரால் அல்ல, பலரால் தயாரிக்கப்பட்டது. தனியொரு திராட்சையிலிருந்து அல்ல; அயிரக்கணக்கான திராட்சைகளில் இருந்து!

இது ஒரு துளியல்ல; ஓடைகளிலும், ஆறுகளின் கலந்தது.

இது ஒரு தளபதி மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் உங்களுக்காக போரிடும் படைப்பிரிவு. நாங்கள் உங்களுக்கு அருகிலிருந்து போராடும் போது, நீங்கள் எங்கள் நீண்ட கடினமான போராட்டம் மற்றும் கவுரவத்தின் அடையாளம்,

கியூபா ஒருவேளை வீழ்ந்தால், நாங்களும் வீழ்வோம், ஆனால், மீண்டும் எழுவதற்காகவே வீழ்வோம்.

ஒருவேளை கியூபாவுடன் ஏராளமான பூக்கள் மலர்ந்தால், எங்கள் சொந்த ரத்தத்தைச் அவற்றுக்குஉணவாக தருவோம்.

உங்கள் கைகளால் வென்ற கியூபாவின் சுதந்திரத்தை எவரேனும் அச்சுறுத்தினால்,

அதை, பாதுகாக்க எமது மக்கள் முதலில் களமிறங்குவார்கள்.

நாங்கள் மறைத்துவைத்துள்ள துப்பாக்கிகளை தோண்டியெடுப்போம். எங்கள் ரத்தம் கொந்தளித்து கியூபாவை பாதுகாக்க எழும்...

எமது அருமை சகோதரி கியூபா, உனது சுதந்திரத்தை காப்போம்!

பிடலை, நான் எப்படிப் பார்த்தேனோ, அதை விளக்கினேன். ஒருவேளை, மாஸ்கோவின் வீதிகளில் அவர் வேறுவிதமாக தோன்றியிருக்கலாம். ஆனால், அவர் இன்னும் உங்கள் கண்களின் எதிரில் நிற்கிறார், தனது நாட்டிற்குச் செல்ல விமானத்தில் ஏறிவிட்ட பின்னரும் பிடல், அவரது பெருமைகளுக்காக மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் நீதி உணர்வுக்காகவும், ஆழமான நட்புணர்வுக்காகவும், எப்போதும் மறக்க முடியாதவர். அவர் ஒரு வெல்லமுடியாத போராளி, ஒரு உண்மையான தேசியக் கதாநாயகன்!

-ட்ருட், மே 26, 1963.

முந்தைய பகுதி

சிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 15

அடுத்த பகுதி:

மரண தருணத்தின் சுவடுகள்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 17