Skip to main content

பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11 

Published on 23/12/2018 | Edited on 06/01/2019

ஜோத்பூர் அருகிலுள்ள மகாமண்டீர் என்கிற இடத்தில் 1951 மே 3ஆம் தேதி   பிறந்தார்   அசோக். அப்பா, பாபு லஷ்மண் சிங் கெலாட். ஜோத்பூரில் பிரபலமான குடும்பம். மாலி கெலாட் என்கிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அசோக் சட்டம் பயின்றவர் எம்.ஏ பொருளாதாரம் படித்துள்ளார். படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அசோக்கின் மனைவி சுனிதா. இவர்களுக்கு வைபவ் என்கிற மகனும், சோனியா என்கிற மகளும் உள்ளனர்.

 

ashok gehlot with his wife

அசோக் - சுனிதா



1971ல் கிழக்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு அகதியாக வந்தபோது, அவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பிலான உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தந்தவர் அசோக் கெலாட். இதனால் ராஜஸ்தான் மாணவர் காங்கிரஸ் பிரிவின் தலைவராக்கப்பட்டார். 1985 முதல் 1999 வரை மாநிலத் தலைவராக இருந்தார் அசோக். 1980ல் இருந்து 1999 வரை எம்.பியாக, மத்திய இணையமைச்சர், மத்திய அமைச்சர் என பதவியில் அடுத்தடுத்து இருந்து வந்தார். மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ தேர்தலில்   அவர் என்றும் நின்றதில்லை.

1998 சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று பாஜகவை தோற்கடித்திருந்தது காங்கிரஸ். யாரை முதல்வராக்கலாம் என்கிற உள்கட்சி மோதல் டெல்லியில் நடைபெற்றது. அப்போது சோனியாகாந்தி குடும்பத்துக்கு நெருக்கமாகயிருந்த, மத்திய அமைச்சர் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்கும்படி ஆனது. எம்.எல்.ஏவாகத் தேர்வாவதற்கு முன்பே ராஜஸ்தான் சட்டசபையில் தனக்கான   உயர்ந்த நாற்காலியை பெற்றுக்கொண்டார். முதல்வர் பதவியில் இருப்பவர் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏவாக வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதி எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார். 2003 வரை பதவியில் இருந்தார். 2003ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்றது. பழைய ராணியான வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். 2008 வரை எதிர்கட்சித் தலைவராக இருந்தார் அசோக்கெலாவட்.

2008 டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சர்தார்புரா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்வான அசோக் கெலாட் இரண்டாவது முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013 டிசம்பர் 13 வரை அந்தப் பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் சம்பாதித்ததை கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் பனாமா பேப்பர்ஸ் என்கிற பெயரில் வெளிவந்தபோது, அதில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட் பெயரும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் அசோக் கெலாட்.


 

sachin pilot with rahul gandhi



2014 ஜனவரி 13ஆம் தேதி ஓரம்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அசோக்கெலாட்க்கு பதில்   ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார் சச்சின் பைலட்.

சச்சின்... இவரது குடும்பமே விமானி குடும்பம். அவரது தந்தை ராஜேஷ் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். ராஜேஷ் இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சச்சினை காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்துப்போட்டார் ராகுல். ராகுலின் நண்பரான சச்சின், 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி இணையமைச்சராக பதவி வகித்தார். 2014ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக வேட்பாளார் சன்வார்லால் என்பவரிடம் தோல்வியை சந்தித்தார் சச்சின். அதன்பின் மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தினார். சச்சின் பைலட், பைலட் உரிமம் வைத்திருப்பவர், சிறந்த விளையாட்டு வீரர், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்.

 

rajesh pilot

ராஜேஷ் பைலட்



2018 ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் தலைவராக காங்கிரஸால் அடையாளம் காட்டப்பட்டவர் சச்சின் பைலட். காங்கிரஸ் வென்றால் அவர்தான் முதல்வர் எனச்சொல்லப்பட்டது. கடுமையான தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கும், ராணியாகவே வாழ்ந்த முதல்வர் வசுந்தராவின்   பேச்சுக்கும் தேர்தல் களத்தில் பதிலடி தந்துவந்தார் சச்சின் பைலட். 

இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட், சர்தார்புரா தொகுதியில் நின்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சாம்பு சிங் என்பவர் நிறுத்தப்பட்டார். சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சாம்புவை அசோக் தோற்கடித்தார். இந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்களே   தோற்றிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் சச்சின் பைலட் என அனைவரும் நினைத்திருக்க, ஓரம் கட்டி வைக்கப்பட்ட அசோக் கெலாட்டை மீண்டும் முதல்வராக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. துணை முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்துள்ளனர். 2019 எம்.பி தேர்தலில் சீனியர் ஒருவர் முதல்வர் பதவியில் இருந்தால்தான் பாஜகவின் தகிடுதத்தங்களை தவிர்க்க முடியும் என்பதால் ஓரம் கட்டிவைக்கப்பட்ட அசோக் கெலாட் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்குப் பின் முதல்வர் மாற்றம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

பழைய மொந்தையில் புதிய கள் என்பார்கள் கிராமத்தில். ராஜஸ்தானில் மொந்தையும் பழையது, கள்ளும் பழையது. பெரும் சவால்கள் முதல்வர் முன் உள்ளன. 

அடுத்த பகுதி:

இந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா? #12 

முந்தைய பகுதி:

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை!  - முதல்வரைத் தெரியுமா? #10 

 

 

 

 

 

 

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.