ஜோத்பூர் அருகிலுள்ள மகாமண்டீர் என்கிற இடத்தில் 1951 மே 3ஆம் தேதி பிறந்தார் அசோக். அப்பா, பாபு லஷ்மண் சிங் கெலாட். ஜோத்பூரில் பிரபலமான குடும்பம். மாலி கெலாட் என்கிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அசோக் சட்டம் பயின்றவர் எம்.ஏ பொருளாதாரம் படித்துள்ளார். படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அசோக்கின் மனைவி சுனிதா. இவர்களுக்கு வைபவ் என்கிற மகனும், சோனியா என்கிற மகளும் உள்ளனர்.

ashok gehlot with his wife

அசோக் -சுனிதா

1971ல் கிழக்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு அகதியாக வந்தபோது, அவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பிலான உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தந்தவர் அசோக் கெலாட். இதனால் ராஜஸ்தான் மாணவர் காங்கிரஸ் பிரிவின் தலைவராக்கப்பட்டார். 1985 முதல் 1999 வரை மாநிலத் தலைவராக இருந்தார் அசோக். 1980ல் இருந்து 1999 வரை எம்.பியாக, மத்திய இணையமைச்சர், மத்திய அமைச்சர் என பதவியில் அடுத்தடுத்து இருந்து வந்தார். மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ தேர்தலில் அவர் என்றும் நின்றதில்லை.

1998 சட்டமன்றத்தேர்தலில் ராஜஸ்தானில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று பாஜகவைதோற்கடித்திருந்தது காங்கிரஸ். யாரை முதல்வராக்கலாம் என்கிற உள்கட்சி மோதல் டெல்லியில் நடைபெற்றது. அப்போது சோனியாகாந்தி குடும்பத்துக்கு நெருக்கமாகயிருந்த, மத்திய அமைச்சர் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்கும்படி ஆனது. எம்.எல்.ஏவாகத் தேர்வாவதற்கு முன்பே ராஜஸ்தான் சட்டசபையில் தனக்கான உயர்ந்த நாற்காலியை பெற்றுக்கொண்டார். முதல்வர் பதவியில் இருப்பவர் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏவாக வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதி எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார். 2003 வரை பதவியில் இருந்தார். 2003ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்றது. பழைய ராணியான வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். 2008 வரை எதிர்கட்சித் தலைவராக இருந்தார் அசோக்கெலாவட்.

2008 டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சர்தார்புரா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்வான அசோக் கெலாட் இரண்டாவது முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013 டிசம்பர் 13 வரை அந்தப் பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் சம்பாதித்ததை கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் பனாமா பேப்பர்ஸ் என்கிற பெயரில் வெளிவந்தபோது, அதில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட் பெயரும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் அசோக் கெலாட்.

Advertisment

sachin pilot with rahul gandhi

2014 ஜனவரி 13ஆம் தேதி ஓரம்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அசோக்கெலாட்க்கு பதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார் சச்சின் பைலட்.

சச்சின்... இவரது குடும்பமே விமானி குடும்பம். அவரது தந்தை ராஜேஷ் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். ராஜேஷ் இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சச்சினை காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்துப்போட்டார் ராகுல். ராகுலின் நண்பரான சச்சின், 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி இணையமைச்சராக பதவி வகித்தார். 2014ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக வேட்பாளார் சன்வார்லால் என்பவரிடம் தோல்வியை சந்தித்தார் சச்சின். அதன்பின் மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தினார். சச்சின் பைலட், பைலட் உரிமம் வைத்திருப்பவர், சிறந்த விளையாட்டு வீரர், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்.

Advertisment

rajesh pilot

ராஜேஷ்பைலட்

2018 ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் தலைவராக காங்கிரஸால் அடையாளம் காட்டப்பட்டவர் சச்சின் பைலட். காங்கிரஸ் வென்றால் அவர்தான் முதல்வர் எனச்சொல்லப்பட்டது. கடுமையான தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கும், ராணியாகவே வாழ்ந்த முதல்வர் வசுந்தராவின் பேச்சுக்கும் தேர்தல் களத்தில் பதிலடி தந்துவந்தார் சச்சின் பைலட்.

இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட், சர்தார்புரா தொகுதியில் நின்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சாம்பு சிங் என்பவர் நிறுத்தப்பட்டார். சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சாம்புவை அசோக் தோற்கடித்தார். இந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்களே தோற்றிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் சச்சின் பைலட் என அனைவரும் நினைத்திருக்க, ஓரம் கட்டி வைக்கப்பட்ட அசோக் கெலாட்டை மீண்டும் முதல்வராக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. துணை முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்துள்ளனர். 2019 எம்.பி தேர்தலில் சீனியர் ஒருவர் முதல்வர் பதவியில் இருந்தால்தான் பாஜகவின் தகிடுதத்தங்களை தவிர்க்க முடியும் என்பதால் ஓரம் கட்டிவைக்கப்பட்ட அசோக் கெலாட் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்குப் பின் முதல்வர் மாற்றம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

பழைய மொந்தையில் புதிய கள் என்பார்கள் கிராமத்தில். ராஜஸ்தானில் மொந்தையும் பழையது, கள்ளும் பழையது. பெரும் சவால்கள் முதல்வர் முன் உள்ளன.

அடுத்த பகுதி:

இந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா? #12

முந்தைய பகுதி:

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை! - முதல்வரைத் தெரியுமா? #10