ADVERTISEMENT

"என் வெற்றியின் ரகசியம் எளிதானதுதான்!" - அர்னால்ட் | வென்றோர் சொல் #1

09:21 AM Jul 27, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

அர்னால்ட்... இந்தப் பெயரை சொன்னதும் 'பாடி பில்டிங்' என்ற வார்த்தை நினைவுக்கு வரும். 'பாடிபில்டிங்' மட்டுமல்லாது ஹாலிவுட் சினிமாவிலும், அமெரிக்க அரசியலிலும் வெற்றிகரமாகத் திகழ்ந்தவர். தன்னுடைய நடிப்பினாலும் அசாத்தியமான முறுக்கேறிய உடல் கட்டமைப்பினாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். பாடிபில்டிங் துறையின் முகமாக அர்னால்டைக் குறிப்பிட்டால் மிகையாகாது. மிஸ்டர் யூனிவர்ஸ், மிஸ்டர் ஒலிம்பியா என பல பட்டங்களை வென்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். மிக இளம் வயதிலேயே 'பாடி பில்டிங்'கில் பல பட்டங்களை வென்ற அர்னால்டின் பெயரில் மிகப்பெரிய பாடிபில்டிங் போட்டி நிகழ்வு நடத்தப்படுகிறது. இன்றும் உலகம் முழுக்க சினிமா ரசிகர்களின் எவர்க்ரீன் ஆக்ஷன் ஹீரோக்களில் முக்கியமானவர் இவர்.

இத்தனை உயரங்களை தொட்ட அர்னால்ட், தன் வெற்றி குறித்தும் அதை அடையக் காரணமாகத் தான் கருதுபவை குறித்தும் கூறியது... "என் வெற்றியின் ரகசியம் குறித்து அடிக்கடி என்னிடம் கேட்பார்கள். அது எளிதான விஷயம்தான். முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் யாராக ஆசைப்படுகிறீர்கள் என்று சிந்தியுங்கள். என்னவாக என்று அல்ல, யாராக ஆசைபடுகிறீர்கள் என்று தீர்மானியுங்கள். மற்றவர்களின் பார்வைக்கு அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்கு அது மகிழ்ச்சி தருமென்றால் அதைச் செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள ஏற்பில்லாத விதிகளை உடையுங்கள். நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே உள்ள கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு சிந்திக்கத் தொடங்குங்கள். தோல்விகளை சந்திக்க பயப்படாதீர்கள். எல்லா நேரங்களிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. தோல்விகள் குறித்தான பயம் உங்களை தேக்கமடையச் செய்யும். உங்களை நோக்கி வரும் எதிர்மறையான கேள்விகளுக்கு செவிசாய்க்காதீர்கள்.

என்னிடம் 'இதுவரை யாரும் இதைச் செய்தது இல்லை. உன்னாலும் முடியாது' என்று கூறினால், 'இதை முதலில் செய்வது நான்தான் என்று நினைத்து சந்தோசப்படுவேன். வாழ்க்கையில் பொழுதுபோக்கு முக்கியம்தான். ஆனால், நீங்கள் பொழுதுபோக்கிற்காக செலவிடும் நேரத்தில் யாரோ ஒருவர் அந்தக் கனவிற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள். வாழ்க்கையில் நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் ஒரே வழிதான் உள்ளது. உங்கள் கனவினை நோக்கி கடின உழைப்பைக் கொடுங்கள். கைகளை வெறுமனே பைகளில் வைத்துக்கொண்டு வெற்றி எனும் ஏணியில் உங்களால் ஏற முடியாது."

"நீங்கள் பொழுதுபோக்கிற்காக செலவிடும் நேரத்தில் யாரோ ஒருவர் அந்தக் கனவிற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்..." - எத்தனை உண்மையான வார்த்தைகள்!!! வென்றவர் சொல்லியிருக்கிறார், நன்றாய் மனதில் வைத்து செயல்படுவோம்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT