ADVERTISEMENT

வரதட்சணை கேட்டன்னு புகார் கொடுப்பேன்; கணவனை மிரட்டிய மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 34

11:24 AM Sep 11, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

கணவனை டார்ச்சர் செய்த மனைவி பற்றிய வழக்கு குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்

பாலு அவர்களுடைய வழக்கு இது. குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்ட சாதாரண மனிதன் அவர். பங்குதாரர்களுடன் இணைந்து அவர் ஒரு கடை நடத்தி வந்தார். அவருடைய குடும்பம் நடுத்தர பொருளாதார நிலைமையில் தான் இருந்தது. அவருக்கு திருமணம் நடைபெற்றது. பெண்ணும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். திருமணம் ஆனதிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை குடும்பத்தினரை பிடிக்கவில்லை. இத்தனைக்கும் வரதட்சணை என்று எதுவும் வாங்காத குடும்பம் அது.

ஒருநாள் தாய் வீட்டுக்குச் செல்லும்போது தன்னுடைய பெற்றோர் போட்ட நகைகள், கணவன் வீட்டில் போட்ட நகைகள் அனைத்தையும் கொண்டுபோய் அங்கே வைத்துவிட்டாள். ஏன் என்று கேட்டபோது, வரதட்சணை வழக்கு தொடுத்து விடுவேன் என்று கணவனை மிரட்டினாள். ஒருநாள் வீட்டு அலமாரி சாவியையும் தன்னுடைய தாய் வீட்டில் கொண்டுபோய் அவள் வைத்தாள். அனைத்து கணக்கு வழக்குகளும் அதில் தான் இருந்தன. நடந்த அனைத்தையும் கேள்விப்பட்ட பாலுவின் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவளை அழைத்து விசாரித்தனர்.

அந்தப் பெண் மாற்றி மாற்றிப் பேசுவது போலீசாருக்கு தெரிந்தது. அவளுக்கு அவர்கள் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பினர். அதன் பிறகும் அவளுடைய நடவடிக்கைகள் மாறவில்லை. அவனுடைய தாயிடம் அதிகம் வேலை வாங்கினாள். கேள்வி கேட்டபோது போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பொய்யான புகார் கொடுத்தாள். பாலுவுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. அதன் பிறகு அவள் கர்ப்பமானாள். அந்த நேரத்தில் அம்மாவின் வீட்டுக்கு சென்ற அவள், மூன்று மாதங்களாக அங்கேயே இருந்தாள். நீதிமன்றத்தில் இருக்கும் இலவச சட்ட ஆலோசனை அமைப்பை பாலு அணுகினார்.

இந்தப் பெண்ணுக்கு மனநிலையில் ஏதோ பிரச்சனை இருப்பது தெரிந்தது. தன்னுடைய கணவன் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அவளுக்கு மனநிலை பரிசோதனை நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு கொஞ்ச நாள் அவள் அமைதியாக இருந்தாள். குழந்தை பிறந்தது. மாப்பிள்ளை வீட்டார் யாரும் குழந்தையைத் தொடக்கூடாது என்று அவள் கூறினாள். என்ன கேள்வி கேட்டாலும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது. அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர். அதன் பிறகும் அவ்வப்போது கணவனிடம் சொல்லாமல் தன் தாய் வீட்டுக்கு அவள் சென்றாள்.

ஒருமுறை அவ்வாறு செல்லும்போது வீட்டு சாவியையும் எடுத்துச் சென்றாள். பாலு நம்மிடம் வந்தார். நாங்கள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டு அந்தப் பெண் வழக்கு தொடுத்தாள். ஆனால் குழந்தையைப் பார்க்க விடமாட்டேன் என்றாள். மாதம் 2000 ரூபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும், குழந்தையை கணவனிடம் அவ்வப்போது காட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவள் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டாள். குழந்தையின் படிப்புக்கும் சேர்த்து 5 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்கப்பட்டது. இருவரும் விவாகரத்து பெற்றனர். பாலு இன்னொரு திருமணம் செய்துகொண்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT