/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Santhakumari31.jpg)
கணவனை ஏமாற்றிய மனைவியின் வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
பிரசன்னா என்கிற பையனுடைய கதை இது. அவர் அமெரிக்காவில் வேலை செய்து வந்தார். பெற்றோர் அவரை கஷ்டப்பட்டு வளர்த்ததால் வாழ்க்கையின் அருமை அவருக்கு தெரிந்திருந்தது. ஒருநாள் அவர் என்னைப் பார்க்க வந்தார். அவருக்கு கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் அது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு பெண்ணுடன் அடிக்கடி அவர் போனில் பேசினார். ஆனால் பெண் அவ்வளவு உற்சாகமாக பேசவில்லை. அவளுடைய இயல்பே அதுதான் என்று பெண்ணின் அப்பா தெரிவித்தார்.
கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு ஒரு போன் வந்தது. "நீ அந்தப் பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அது என்னுடைய ஆள்" என்றான் ஒருவன். இல்லையெனில் அவன் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினான். அந்தப் பெண்ணிடம் இவன் பேசினான். இதுகுறித்து அவன் விசாரித்தான். அவை அனைத்தையும் அவள் அடியோடு மறுத்தாள். ஆனாலும் அவனுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டது. கல்யாணம் நடைபெற்றது. முதலிரவுக்கு அந்தப் பெண் மறுத்தாள். முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு தான் அது நடக்க வேண்டும் என்று கூறினாள். அவனும் அதைப் புரிந்துகொண்டான்.
இருவரும் அமெரிக்காவுக்கு கிளம்பினர். "அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கு" என்று விமான நிலையத்தில் அவளுடைய தாய் அவளுக்கு அறிவுரை கூறினார். இதை அவன் கேட்டான். அவர்கள் அமெரிக்கா சென்றடைந்தனர். அவனுடைய அருகில் செல்லவே அவள் தயாராக இல்லை. அவளிடம் அவனுக்குத் தெரியாமல் ஒரு போன் இருந்தது. அதில் அடிக்கடி யாருக்கோ அவள் போன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஆபீசுக்கு கிளம்பும்வரை அவள் எழவே மாட்டாள். அவளிடம் அவனுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது.
ஒருநாள் அவள் போனில் பேசிக் கொண்டிருந்தபோது போன் கீழே விழுந்து உடைந்தது. அதை எடுத்து அவள் உள்ளே வைத்தாள். அவள் ஒரு ஆணோடு தொடர்ந்து பேசுவதை தொழில்நுட்ப கருவிமூலம் அவன் கண்டுபிடித்தான். அவர்களின் உரையாடலில் காமம் இருந்தது. அவளாக சிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். "பெற்றோரைப் பார்க்க விருப்பமா?" என்று கேட்டான். உடனே அவள் சம்மதித்தாள். டிக்கெட் போட்டு அவளை அனுப்பி வைத்தான். இந்தியாவுக்கு வந்த பிறகு அடுத்த நாள் தான் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு அவள் வந்தாள். இதற்கு மேலும் காத்திருப்பது சரியில்லை என்று முடிவு செய்து அவன் என்னிடம் வந்தான்.
நடந்த அனைத்தையும் அவன் என்னிடம் கூறினான். தொழில்நுட்ப உதவியின் மூலம் அவளுடைய தொடர்புகளை அவன் கண்டுபிடித்ததால், அமெரிக்க சட்டத்தின்படி அதை அவனால் வெளிப்படுத்த முடியாது. அவர்களுக்குள் உறவு சரியாக இல்லை என்கிற அடிப்படையில் நாங்கள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். அவள் செய்த தவறுகள் அனைத்தையும் அவளிடம் நேரடியாக நான் கூறினேன். அந்தப் பெண் நோட்டீசை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்கு வரவில்லை. அதனால் அந்தப் பையனுக்கு விவாகரத்து கிடைத்தது. திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் இப்போது அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். உங்களுக்குப் பிடித்தால் திருமணம் செய்துகொள்ளுங்கள்.பிடிக்கவில்லை என்றாலோ, இன்னொருவர் மீது காதல் இருந்தாலோ, தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்பதுதான் அனைவருக்கும் என்னுடைய ஆலோசனை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)