Advocate Santhakumari's Valakku En - 22

தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள்குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரிநம்மிடம் விளக்குகிறார்.

Advertisment

எங்களுடைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜி என்கிற பெண் இரண்டு நாட்கள் லீவு வேண்டுமென்று கேட்டார். தன்னுடைய பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். தன்னுடைய பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று நம்பினார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவர்களோடு நானும் சென்றேன். அங்கு ஒரு பெண் திடீரென்று கத்தி அழுதாள். அந்தப் பெண்ணை நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறினேன்.

Advertisment

அந்தப் பெண் திருமணமான ஒரு பெண். அழகான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவளுடைய கணவன் கொடுத்து வைத்தவன் என்று அனைவரும் கூறினர். அதனால் கோவிலுக்குச் செல்லும்போது கூட மற்றவர்கள் அவளைப் பார்க்கிறார்கள் என்று அவன் கூறத் தொடங்கினான். இதுவே அனைத்து இடங்களிலும் தொடர்ந்தது. அவளை ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தான். ஒருநாள் இரவு அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவளுடைய உடலில் சிகரெட் மூலம் அவன் சூடு வைத்தான். யாரிடமும் அதைச் சொல்லிவிட வேண்டாம் என்று அவளிடம் அழுதான். உண்மையில் அவன் ஒரு மனநோயாளியாக இருந்தான்.

அதன் பிறகும் சிகரெட்டை வைத்து அவளைத் துன்புறுத்த ஆரம்பித்தான். யாரிடமும் அவள் பேசக்கூடாது என்றான். பெற்றோரிடம் இதுகுறித்து சொன்னபோது அவர்கள் அவளை சமாதானப்படுத்தினர். ஒருநாள் அவளுடைய பிறப்புறுப்பில் சிகரெட் மூலம் அவன் சூடு வைத்தான். அதை அவள் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வீட்டின் கதவைப் பூட்டிச் சென்றான். அவனைக் கண்டாலே அவள் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அவளுக்கு விவாகரத்து தேவை என்று அவளுடைய தாயிடம் கூறினேன். ஆனால் அவளுடைய தாய் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் என்னிடம் வந்தாள். அவனோடு தான் வாழ விரும்பவில்லை என்றும், அவளுக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டாள். விவாகரத்து வழக்கு தொடர்ந்து அவளுக்கு விவாகரத்து வாங்கினோம். அவளுக்கான வாழ்நாள் இழப்பீட்டுத் தொகையாக 10 லட்ச ரூபாயை அவனிடமிருந்து பெற்றோம். இப்போது ஒரு உதவி பேராசிரியையாக, ஹாஸ்டலில் தங்கி அவள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.