Advocate Santhakumari's Valakku En - 1

‘வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்’என்பார்கள். நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய திருவிழா. மிகுந்த பொருட்செலவோடும், மனநிறைவோடும் நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. பல்வேறு வேறுபாடுகள் காரணமாக நீதிமன்றத்தின் கதவைத் தட்டுபவர்கள் ஏராளம். அப்படி தன்னிடம் வந்த வழக்குகள் குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு மனம் திறக்கிறார்

Advertisment

ஒவ்வொரு குடும்ப வழக்கை சந்திக்கும்போதும்எதிர்கொள்ளும் சவால்கள் வித்தியாசப்படும்.அப்படியொரு மறக்க முடியாத வழக்கு தான் இது. நீதிமன்றத்திற்கு வருவதே தவறு என்கிற மனநிலை மாறிபல காலம் ஆகிறது. இப்போது பிரச்சனை என்றால் பெண்களும்ஆண்களும் நீதிமன்றத்தை நாடுகின்றனர். பெண்களுக்கு இது குறித்த பயம் நீங்கியுள்ளது. என்னிடம் வரும் வழக்குகளில் குறைந்தபட்ச அடிப்படை நேர்மையும் உண்மையும் இருக்குமானால், பாதிக்கப்பட்டவரின் வலியை உணர முடிந்தால் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.

Advertisment

துக்கம் விசாரிக்கச் சென்ற ஒரு இடத்தில் அடிக்கடி ஒரு பெண் வந்து காபி கொடுத்தாள். விசாரித்தபோதுதான் அவருடைய தாய், தந்தையரை நான் முன்பே அறிந்திருந்தது தெரிந்தது. சில நாட்கள் கழித்து தன்னுடைய மகனுக்கு நல்ல பெண் வேண்டும் என்று ஒரு நண்பர் கேட்டபோது, இந்தப் பெண் என் நினைவுக்கு வந்தாள். இதுபற்றி அவரின் தாயிடம் பேசியபோது உடனே அழுதார். அப்போதுதான் அவருடைய பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றியும், அது வெற்றிகரமாக அமையவில்லை என்றும் தெரிவித்தார். என்ன பிரச்சனை என்று அந்தப் பெண்ணிடம் விசாரித்தேன்.

"மிகுந்த நம்பிக்கையோடும் பல்வேறு கனவுகளோடும் தான் திருமண வாழ்வில் நான் அடியெடுத்து வைத்தேன். மாப்பிள்ளையும் நல்லவராகத் தெரிந்தார். ஆனால், முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைக்கும்போது தான் நான் சாவை நோக்கிச் செல்கிறேன் என்பது புரிந்தது. முதலிரவை நிராகரித்துவிட்டு அவர் வெளியே சென்றார். என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வாரத்திற்கு இதே கதை தொடர்ந்தது. நெருக்கத்திற்கான என்னுடைய எந்த முயற்சிகளும் பலன் தரவில்லை. அதன் பிறகு தான், தன்னுடைய இளமைக்காலத்தில் தவறான பெண்ணுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தால் தான் நோய் ஒன்றிற்கு ஆளாகி இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். என்னுடைய வாழ்க்கையை அவர் கெடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். பெற்றோரின் வற்புறுத்தலால் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாகக் கூறினார்" என்று சொல்லி அழுதாள் அந்தப் பெண்.

Advertisment

திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்றும், இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும் கூறி அவளை நான் தேற்றினேன். நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கலாம் என்று ஆலோசனை கூறினேன். திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டதால், திருமணமே செல்லாது என்று தீர்ப்பு வாங்க முடியாது.ஆனால், விவாகரத்து வாங்கலாம் என்று விளக்கினேன். அதன் பிறகு அந்தப் பெண் வேறு திருமணம் செய்துகொண்டு, குழந்தையோடு தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார். இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குடும்பநல நீதிமன்றங்களை நாடலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதும், மாற்று சிந்தனையை ஏற்படுத்துவதும் தான் எங்களுடைய முதல் பணி. பாலியல் ரீதியான உறவுக்குத் தடை விதிக்கும் எந்தத் திருமணமும் செல்லாத திருமணம்தான் என்பதை அந்தப் பெண்ணின் வழக்கில் நீதிமன்றமே தெரிவித்தது. இந்தப் புரிதல் அனைவருக்கும் வேண்டும்.