ADVERTISEMENT

வரதட்சணையை காரணம் காட்டி நெருக்கம் காட்டாத கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 11

12:29 PM Mar 21, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமணம் என்கிற பெயரில் பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றைத் தடுப்பது எப்படி என்பது குறித்து ஒரு வழக்கின் மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விளக்குகிறார்

மேகலா என்கிற பெண்ணுடைய வழக்கு இது. அவள் முதன்முதலில் என்னை சந்தித்தது கோர்ட்டிலிருந்து வந்த விவாகரத்து நோட்டீசுடன் தான். அவளுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்தின் போதே சீர்வரிசை தொடர்பாக மாப்பிள்ளை பிரச்சனை செய்திருக்கிறார். அப்போதே திருமணத்தை நிறுத்தாமல் நடத்தி வைத்தனர் பெற்றோர். திருமணத்திற்குப் பிறகும் அவன் அந்தப் பெண்ணோடு நெருக்கமாக இல்லை.

ஏன் என்று அவள் விசாரித்தபோது, தன்னுடைய தரத்திற்கு அவள் குறைந்தவள் என்பது போல் பேசினான். அவளைப் பிடிக்கவில்லை என்றான். பெற்றோரின் வற்புறுத்தலால் தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறினான். அவளால் அதைத் தன்னுடைய பெற்றோரிடமும் கூற முடியவில்லை. விவாகரத்து செய்தால் அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவள் பயந்தாள். சேர்ந்து வாழவே விரும்பினாள். அதுவும் ஒரு பெண்ணுடைய உரிமை தான். இது குறித்து குடும்ப நல நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம்.

அவன் தன்னுடைய தரப்பை நீதிமன்றத்தில் விளக்கினான். நாங்கள் எங்களுடைய தரப்பை விளக்கினோம். அதன்பிறகு அவன் நீதிமன்றத்திற்கே வரவில்லை. அதனால் அவன் போட்ட வழக்கு தள்ளுபடியானது. எங்களுடைய வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதன் பிறகும் அவன் வரவே இல்லை. வீட்டை விட்டே வெளியேறினான். அவன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான் என்கிற தகவல் சில வருடங்கள் கழித்து அவளுக்குக் கிடைத்தது. அதிர்ந்து போனாள். விவாகரத்து குறித்து அவளுக்கு நோட்டீசும் வரவில்லை.

தம்பதியினர் ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்தால் விவாகரத்து பெற சட்டத்தில் வழி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவன் விவாகரத்து பெற்றிருந்தான். நோட்டீசை பழைய விலாசத்திற்கு அனுப்பியிருந்தான். அதனால் அவளுக்கு அது கிடைக்கவில்லை. பத்திரிகை விளம்பரமும் ஆங்கிலப் பத்திரிகையில் கொடுத்திருந்தான். அதையும் அவள் படிக்கவில்லை. இதையெல்லாம் வைத்து அவன் விவாகரத்து பெற்றான். இவன் ஏமாற்றியது நீதிமன்றத்திற்கும் தெரியவில்லை. எனவே நீதிமன்றத்தை ஏமாற்றி அவன் வாங்கிய விவாகரத்து உத்தரவு செல்லாது என்று வழக்கு தொடுத்தோம்.

நடந்த அனைத்தையும் நீதிமன்றத்தில் விளக்கினோம். கொடுக்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்தது நீதிமன்றம். கடைசிவரை சேர்ந்து வாழ அவன் வரவேயில்லை. அவன் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து போலீசில் புகார் கொடுத்தோம். விவாகரத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்று சட்டம் சொல்கிறது. அவன் கிடைக்காததால் போலீசார் அந்த இரண்டாவது மனைவியிடம் விசாரித்தனர். அந்தப் பெண் நடந்த எதுவுமே தனக்குத் தெரியாது என்று கூறினாள். அதன்பிறகு அவனைக் கண்டுபிடித்து, மிரட்டி, மேகலாவுடன் சேர்த்து வைத்தனர்.

குடும்ப நல நீதிமன்றங்களில் முதலில் கணவன் மனைவியை சேர்த்து வைக்கவே முயற்சி செய்வார்கள். அது முடியாத போதுதான் விவாகரத்து வழங்குவார்கள். இருவரும் பரஸ்பரம் விவாகரத்தை விரும்பினால் விரைவில் விவாகரத்து வழங்கப்படும். பிரச்சனை வந்தவுடனேயே தீர்த்துக்கொள்வது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT