குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
“கடந்த 1988இல் நடந்த டாக்டர் சிவகுமாரின் பற்றிய வழக்கு இது. கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த இவர், குடும்ப நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாகக் கூறி அந்த நோட்டீஸை எடுத்துக் கொண்டு எனது அலுவலகத்திற்கு வந்தார். அந்த நோட்டீஸை பிரித்து படித்து பார்த்த போது அவரது மனைவி, இவர் மீது மூட்டை மூட்டையாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். என்ஜினியரிங் எம்.பி.ஏ படித்து முடித்த அந்த பெண்ணும், சிவக்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் 8 வயது வித்தியாசம் இருந்திருக்கிறது.
தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் இவர்களது பெற்றோர்களுக்கு தெரியாது. ஒரு நாள் விஷயம் சிவக்குமாரின் தாயாருக்கு தெரிந்த பின்னர், பெண் வீட்டில் போய் சண்டை போட்டிருக்கிறார். அதன் பின்னர், எப்படியோ போராடி பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணச் செலவுகளை எல்லாம் சிவக்குமாரின் பெற்றோர் தான் பார்த்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சில காலம் நன்றாக தான் போய் கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணின் ஜாதியை சுட்டிக்காட்டியும் சீதனம் கொண்டு வராமல் இருந்ததை சுட்டிக்காட்டியும் சிவக்குமாரின் தாயார் அடிக்கடி குறை சொல்லிக் கொண்டே இருந்துள்ளார். அதன் பின்னர், இவர்கள் இருவருக்கும் இடையே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வீசிங் பிரச்சனை இருந்துள்ளது. இந்த சமயத்தில், லண்டனில் படித்து கொண்டிருந்த ஜெயராம் என்ற வகுப்பு தோழனுடன் இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ஏதாவது வேலை ஏற்பாடு செய்யும்படி அந்த ஜெயராம் இந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதன்படி சிவக்குமாரிடம் ஜெயராமுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஆறு மாதம் கழித்து, ஜெயராம் சிவக்குமாரின் வீட்டுக்கே வந்துவிட்டார். அதன் பிறகு, சிவக்குமாரின் வீட்டில் இருந்து ஜெயராம் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்னர், சிவக்குமார் சத்தம் போட, ஜெயராம் தனியாக தங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு எப்போதும் வீட்டுக்கு தாமதமாக வந்திருக்கிறார். இதனை சிவக்குமார் கேட்டதற்கு இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு இரண்டாவது கரு ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால், முதல் குழந்தைக்கு மருத்துவ செலவுகளை பார்க்க வேண்டும், இரண்டாவது குழந்தை பிறந்தால் முதல் குழந்தையை கவனிக்க முடியாது. நாம் வாழ்க்கையில் நன்றாக வந்ததற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி சிவக்குமார் அந்த கருவை கலைக்க கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு வருடம் கழித்து, இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தன் மீது சிவக்குமார் சந்தேகப்படுவதாகவும், மது அருந்திக்கொண்டு அடிக்கடி தினமும் வீட்டுக்கு வருவதாகவும், சிறு சிறு பிரச்சனைகளை காரணம் காட்டி சண்டை போட்டு தன்னை அடிப்பதாகவும், அதனால் தனக்கு விவகாரத்து வேண்டும் என்று அந்த பெண் நோட்டீஸ் அனுப்பினார். சிவக்குமாரின் பெற்றோர், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், சிவக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதாகவும் என அடுக்கடுக்கான புகாரை அந்த பெண் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். அந்த நோட்டீஸை படித்ததும், அந்த பெண் உண்மையை தான் கூறியுள்ளார் என்று நானே நம்பிவிட்டேன். அதன் பின்னர், சிவக்குமாரிடம் விசாரித்தேன். மனைவி கூறுவது அனைத்தும் பொய் அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி சிவக்குமார் தன் பக்கம் மீதான் நியாயத்தை கூறினார்.
எங்க அம்மா அப்பா ஆரம்பத்தில் ஜாதியை பற்றியும் சீதனத்தையும் பற்றியும் கேட்டது உண்மைதான். ஆனால், போக போக அதெல்லாம் கண்டுக்காமல் மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். ஆனால், எனது மனைவி என் அப்பா அம்மாவை மதிக்கவே இல்லை. எங்க அம்மாவுக்கு மனைவிக்கு ஒத்துவரவே இல்லை. இதனால் என்னை தனிக்குடித்தனம் சென்றுவிடும்படி எனது அம்மா கூறிவிட்டார். அந்த சமயத்தில், கல்யாண செலவுகளை செய்ததற்காக 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று எனது அப்பா கோபத்தில் கூறிவிட்டார். நானும், எனது அப்பா அம்மாவுக்கு எந்தவித கடமையும் செய்யாததால் 3 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வாடகை வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் எனது மனைவிக்கும், எனது இரண்டு குழந்தைகளுக்கு எந்தவித குறைகளும் வைக்கவில்லை. அதே போல், இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று கூறியது உண்மைதான். முதல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவளை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி குழந்தை வேண்டாம் என்றேன். ஆனால், இரண்டு குழந்தைகளையும் நன்றாக பார்த்துக்கொண்டேன். நான் அடிக்கடி ரத்தம் கொடுத்து வருகிறேன். மது குடிப்பவனால் எப்படி ரத்தம் கொடுக்க முடியும். ரத்தம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
அதே மாதிரி ஜெயராமுடன் பழகும்போது ஆரம்பத்தில் எனக்கு தோன்றவில்லை. ஆனால், தனி அறையில் பூட்டிவிட்டு மணிக்கணக்காக ஜெயராமுடன் போனில் பேசுவது, அவருடன் அடிக்கடி வெளியே செல்வது இது போன்ற நடவடிக்கையை எனது மனைவி செய்து கொண்டிருந்தார். நண்பர்களோடு வெளியே செல்கிறோம் என்று கூறி ஜெயராமுடன் வெளியே செல்கிறார். இதனை ஒரு நாள் நேரில் பார்த்துவிட்டு கண்டித்தேன் என்று உண்மையை எடுத்துச் சொன்னார். அதன் பின்னர், நீதிமன்றத்தில் கவுண்டர் கிளைம் போட்டேன். பெட்டிஷன் போடும்போதே, மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் சிவக்குமார் போட்டார். நான் கூட எதற்கு என்று கேட்டதற்கு, சிறு சலனத்தால் தவறு செய்துவிட்டாள், இன்றைக்கு அவளை விட்டு பிரிந்துவிட்டால் எனது குழந்தைகளை யார் கவனிப்பது என்று கூறினார். அடுத்ததாக, தனக்கும் தனது குழந்தைகளுக்கு மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கோர்ட்டில் மேலும் ஒரு மனுவை போட்டார்.
ஆனால், தான் சம்பாதிப்பது தனது குழந்தைகளுக்காக தான் கூறி அந்த பணத்தை கொடுக்க சிவக்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால், விவாகரத்து பெற அந்த பெண் உறுதியாக இருந்தார். இதற்கிடையில், சிவக்குமாருக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டார்கள். அவரது உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. அவர் சாகக் கிடக்கிறார் என்று கூறி, நானும் பெண் தரப்பும் வழக்கறிஞரும் பேசி இருவரது வழக்கை வாபஸ் பெறச் செய்தோம். தான் எடுத்த இன்சூரன்ஸில் குழந்தைகளின் பெயரைச் சேர்த்து அந்த பணம் முழுவதும் குழந்தைகளுக்கே சேரும்படி சிவக்குமார் எழுதினார். தன் வீட்டு பாகத்தை தனது குழந்தைகளுக்கு சேரும்படி எழுதிக் கொடுத்தார். அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இந்த வழக்கு மூன்று வருடங்கள் நீடித்தது. இறுதியில் கேன்சர் நோயால் சிவக்குமார் அனாதையாக தான் இறந்தார்” என்றார்.