/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/S 2.jpg)
வெளிநாட்டு மாப்பிள்ளைமீதான மோகம் இன்றும் குறையவில்லை. பெண்களும் பெற்றோரும் வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிள்ளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் அதில் பல ஆபத்துகள் உள்ளன என்பது குறித்து ஒரு வழக்கு மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விரிவாகவிளக்குகிறார்
ராதா என்கிற பெண். இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வாக்கப்பட்டுச் சென்ற பெண். அவள் நன்கு படித்தவள். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல வேண்டும் என்று விரும்பினாள். லண்டனில் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றும் பையனின் வரன் தேடி வந்தது. அனைத்தையும் விசாரித்த பிறகு அவன் பார்க்க நன்றாக இருக்கிறான், நன்றாக சம்பாதிக்கிறான் என்பதை அறிந்தனர். அவனுக்கே இவளைத் திருமணம் செய்து கொடுத்தால் இவள் மேற்படிப்பையும் பாதுகாப்பாகத் தொடர முடியும் என்று நினைத்தனர். படித்து முடித்த பிறகு அதே மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ராதா சொன்னதைபெற்றோர் ஏற்கவில்லை.
திருமணம் நடந்தது. இருவரும் லண்டன் சென்றனர். ஒரு வாரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு பெரிய வீட்டில் மாமனார், மாமியாரும் அவர்களோடு இருந்தனர். ஆனால், கணவன் வீடு தங்குவதே இல்லை. அடிக்கடி வெளியே செல்லத் தொடங்கினான். இரவு நேரங்களில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். எந்த நிகழ்ச்சிக்கும் அவளை அழைத்துச் செல்ல மறுத்தான். அவன் வீட்டுக்கு வருவதே குறைந்து போனது. இது குறித்து அவள் மாமியாரிடம் கூறினாள். அவன் லண்டனில் பிறந்து வளர்ந்ததால் அப்படித்தான் இருப்பான் என்று மாமியார் சமாதானம் கூறினார்.
"ஏன் என்னை வீட்டுக்கு வா என்று தொந்தரவு செய்கிறாய்? உன்னைகல்யாணம் செய்துகொண்டதால் எப்போதும் உன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று அவன் சண்டை போட்டான். மாமியார், மாமனார் இதில் தலையிட மறுத்தனர். அதன் பிறகு தனியாக ஒரு வீடு எடுத்து இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர். அதன் பிறகு சுத்தமாக அவன் வீட்டிற்கு வருவதில்லை. ஒருமுறை ஒரு வாரம் வரை அவன் வீட்டுக்கு வரவில்லை. அவனுடைய நண்பர்களை அழைத்து அவள் விசாரித்தாள்.
அப்போதுதான் ஒரு நண்பரின் மூலம் அந்த அதிர்ச்சி செய்தி அவளுக்குக் கிடைத்தது. பென்னட் என்கிற ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் இவன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறான். இவள் அங்கு நேரில் சென்று பார்த்தாள். "உன் கணவன் இங்கு வருவதற்கு நான் என்ன செய்ய முடியும்? வேண்டுமென்றால் போலீசிடம் செல்" என்று கூறினாள் அந்தப் பெண். "நீ வேண்டுமானால் இந்தியாவுக்கு சென்றுவிடு. உனக்கு முன்னாடியே இந்தப் பெண்ணுடன் எனக்கு பழக்கம் உள்ளது" என்று கூறி அவளை அவன் துன்புறுத்தினான். "என்னுடைய வாழ்க்கையை ஏன் கெடுத்தாய்?" என்று இவள் கேட்டபோது, "என் அம்மா, அப்பா இந்திய மருமகள் வேண்டும் என்று விரும்பினர். அதனால்தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன். உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தானே வந்தேன்.. நீயும் உன் விருப்பம் போல இங்கு யாருடனும் வாழலாம்" என்றான்.
அவள் அதிர்ச்சியடைந்தாள். அவள் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் இதைத் தெரிவித்தாள். அவளை உடனடியாகக் கிளம்பி வரச் சொன்னார்கள். அவள் இந்தியா வந்தாள். அதன் பிறகு அவளும் அவளுடைய பெற்றோரும் என்னை வந்து சந்தித்தனர். அவன் மீது கிரிமினல் புகார் கொடுக்கச் சொன்னேன். விசாரணைக்கு அவன் வர மறுத்தான். விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். மாதாமாதம் 50000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினோம். அது கிடைத்தது. அவள் வேலைக்குச் செல்லாத பெண் என்பதால் நாங்கள் கோரிய நிரந்தர ஜீவனாம்சமான 75 லட்ச ரூபாயும் கிடைத்தது. வெளிநாட்டு மோகத்தை விடுத்து நல்ல வரன்களைபெற்றோர் தேட முற்பட வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)