Skip to main content

அக்காவையும் தம்பியையும் சேர்த்து வைத்து சந்தேகித்த கணவர் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 06

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

 Advocate Santhakumari's Valakku En - 06

 

சந்தேகம் என்கிற பேய் பல்வேறு குடும்பங்களின் நிம்மதியை சிதைத்திருக்கிறது. ஆண்களின் இந்த புத்தியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இது குறித்து தன்னிடம் வந்த ஒரு வழக்கு பற்றி நம்மோடு குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.

 

இது என்னுடைய நண்பர் பற்றிய ஒரு வழக்கு. ஒருமுறை நானும் என் தோழி கலாவும் பாண்டி பஜார் சென்றிருந்த போது என் நண்பரை அங்கு சந்தித்தேன். அவர் ஒரு வழக்கறிஞர். அவரைக் கலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அவளுக்கு வணக்கம் சொன்னார். பதிலுக்கு அவள் வணக்கம் சொல்லவில்லை. அன்று அவளுடைய நடவடிக்கைகள் எனக்கு வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் அவளை நேரில் சந்தித்து அவளுடைய மாற்றத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். அவளுடைய திருமணத்தின் போது நாங்கள் அனைவரும் அவளோடு தான் இருந்தோம். அவள் அழகானவள். ஆனால் அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளையை நாங்கள் கண்டபோது அவர் அவ்வளவு அழகாக இல்லை என்று நினைத்தோம். ஆனால் அதுபற்றி அவள் கவலைப்படவில்லை. நல்ல பையன் நன்றாக சம்பாதிக்கிறான் வரதட்சணையும் எதிர்பார்க்கவில்லை என்று பெற்றோர் ஆறுதல் கூறினர். திருமணம் முடிந்தது. சிறிது காலம் சந்தோஷமாகத் தான் இருவரும் இருந்தனர். 

 

திடீரென்று அவளுடைய கணவரின் போக்கில் அவளுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது. கொரியர்காரன் தபாலை அவளிடம் அளிக்கும்போது அவனிடம் சகஜமாக அவள் பேசியிருக்கிறாள். "என்னடி கொரியர்காரனிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுற.. எத்தனை நாளாகப் பழக்கம்?" என்று கேட்டார் கணவர். அவள் விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்காமல் அவளை எச்சரித்தார். பின்பு ஒருமுறை அவளுடைய தம்பி வீட்டுக்கு வந்தான். சாப்பிட்டு முடித்தவுடன் அவனிடம் குடும்பத்தினர் குறித்து பேசிக்கொண்டிருந்தாள். பேசிவிட்டு வந்ததும் "என்ன.. அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலாக இருக்கிறது" என்றார் கணவர். "இப்போ தனியாப் பேசுவீங்க.. அப்புறம் தனியா இருப்பீங்க" என்றார். அவள் உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தாள். அவளுடைய தம்பி அதிர்ச்சியில் உடனே அந்த இடத்திலிருந்து கிளம்பினான். யாரோடு அவள் பேசினாலும் உடனே சந்தேகப்பட்டான் கணவன். அவளால் அதைத் தாங்கவே முடியவில்லை. அவனை வெறுக்க ஆரம்பித்தாள். இதனால் அவர்களுடைய தாம்பத்திய உறவு முறிந்தது.

 

அதன் பிறகும் அவன் திருந்தவில்லை. அவனுடைய சந்தேகம் இன்னும் அதிகரித்தது. இவை அனைத்தையும் சொல்லி அவள் என்னிடம் அழுதாள். தனக்கு அவனோடு வாழ விருப்பமில்லை என்றாள். எப்போதும் அவனுடைய கண்காணிப்பில் இருப்பது போலவே உணர்வதாகக் கூறினாள். நரகம் போன்ற அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்பினாள். விவாகரத்து பெற அவளுக்கு ஆலோசனை கூறினேன். அவர் தன்னை அடிக்கவில்லை, தனக்குத் தேவையானவற்றை வழங்குகிறார். பின் எப்படி விவாகரத்து பெறுவது என்றாள் அவள். மனரீதியாகக் காயப்படுத்துவதும் குற்றம்தான் என்பதை அவளுக்கு விளக்கினேன். 

 

அவள் விவாகரத்து பெற முடிவு செய்தாள். அவளுடைய கணவர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர் செய்த கொடுமைகளை நீதிமன்றத்தில் நாங்கள் நிரூபணம் செய்தோம். அவர் ஒரு மனநோயாளி என்பதையும் விளக்கினோம். அந்த வகையில் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அவர் அப்படிப்பட்டவர் தான் என்று பரிசோதனை முடிவுகள் கூறின. அதை வைத்து நீதிமன்றம் அவளுக்கு விவாகரத்து வழங்கியது. திருமணம் என்றாலே பயம் ஏற்பட்டதால் அவள் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. வேலைக்குச் சென்று தன்னுடைய வாழ்க்கையைத் தானே நிம்மதியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி வாழ்ந்து வருகிறாள்.