Skip to main content

அதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்! சின்னங்களின் கதை #3

Published on 07/05/2019 | Edited on 08/05/2019

எம்.ஜி.ஆரின் இரட்டை நாடி முகத்தை மைனஸ் பாய்ண்ட்டாகக் கூறி, அவரை மந்திரிகுமாரி படத்தில் நாயகனாக ஏற்க தயாரிப்பாளர்கள் மறுத்தார்கள். உடனே, எம்.ஜி.ஆரின் மெட்டியில் உள்ள பள்ளத்தில் சிறிய தாடியை ஒட்டவைத்து, இவர்தான் எனது கதையின் நாயகன் என்று பிடிவாதமாகச் சொல்லி, அவரை கதாநாயகனாக்கியவர் கலைஞர்.

 

mandhiri kumari mgr



அபிமன்யு படத்திற்கு வசனம் எழுதும்போதே எம்.ஜி.ஆரைக் கவனித்து அவருடன் நண்பரானார். ராஜகுமாரியில் அந்த நட்பு நெருக்கமானது. இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆரின் முகத்தோற்றத்தில் ஒரு உறுத்தல் இருந்தது. அதுதான் அவருடைய இரட்டை நாடி. அந்த இரட்டை நாடியைத்தான் மந்திரிகுமாரி படத்தின் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன் குறையாகச் சொன்னார். அவரையே சமாளித்து தனது கதையின் நாயகனாக்கினார் கலைஞர்.

அதாவது 1947 ஆம் ஆண்டிலிருந்தே சினிமா ஸ்டுடியோக்களில் இருவரும் நண்பர்களானார்கள். 1953 ஆம் ஆண்டுதான் எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி திமுகவில் இணைத்தார் கலைஞர். அப்போதிருந்தே இருவரும் திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார்கள். ஏற்கனவே கே.ஆர்.ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் திமுகவில் இருந்தாலும், கலைஞர்தான் முழுநேர திமுக உறுப்பினராகத் தமிழகம் முழுவதும் சுற்றியவர். அவருடைய பேச்சைக் கேட்க தனியே ஒரு கூட்டம் உருவானது.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுக்குக் கிடைக்காத நண்பர்கள் கூட்டம் கலைஞருக்குக் கிடைத்தது. தமிழகம் முழுவதும் கூட்டம் பேசச் செல்லும் கலைஞர், தான் போகிற ஊர்களில் உள்ள கழகத் தோழர்களை மட்டுமல்லாமல், தனது திரைப்பட வசனங்களை ரசிப்போரையும் சந்தித்து திமுகவில் இணைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மற்ற முன்னணித் தலைவர்கள் தாங்கள் செல்லும் பொதுக்கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளை மேடையில் சந்திப்பதோடு சரி. ஆனால், கலைஞர், தன்னை பேச அழைக்கும்வரை மேடைக்கு பின்புறம் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களிடம் தோழமையை ஏற்படுத்திக் கொள்வார். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார். திமுக முதன்முதல் தேர்தலில் போட்டியிட்டபோதே வாய்ப்புக்கிடைத்து குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு ஏரியா பண்ணையாரை திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் ஜெயித்தார் கலைஞர். 
அப்போதிருந்து கட்சிக்குள் அவருக்கும் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கும் எதிராக ஒரு குழு உருவானது. கலைஞருக்கு கட்சியில் கிடைக்கும் முக்கியத்துவதைச் சகிக்கமுடியாத ஈ.வி.கே.சம்பத் முதல்முறையாகக் கட்சியை பிளந்தார். ஆனால், அந்த பிளவு திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 


 

mgr with karunanidhi


1967 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மிகப்பெரிய கோபம் மக்கள் மத்தியில் இருந்தது. அத்துடன் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவமும் சேர்ந்துகொண்டது. திமுக அணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கூட நிறையாத நிலையில் அண்ணா மறைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவின் பொருளாளராக இருந்த கலைஞருக்கு பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலைஞரை ஆதரவளிப்பதை எம்ஜியாரும் அறிந்தார். நீண்டகால நண்பர் என்பதால் எம்.ஜி.ஆரும் ஆதரி்ததார். கலைஞர் முதல்வரானார்.

கலைஞர் முதல்வரான சமயத்தில் எம்.ஜி.ஆர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தால் இருவருக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ள முடியும். மத்தியில் இந்திரா அரசுக்கு ஆதரவு அளித்ததால் அங்கும் திமுகவின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதேசமயம், தமிழ்நாட்டுக்கென தனித்தன்மையையும் திமுகவின் தனித்தன்மை, அதன் கொள்கைகளை அமல்படுத்துவதில் உறுதி என்று கலைஞர் பெரியார், அண்ணா ஆகியோரின் அடியொற்றி செயல்பட்டார். தந்தை பெரியாரின் விருப்பம் அறிந்து அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய சமூகநீதி திட்டங்கள் பலவற்றை சட்டவடிவமாக்கினார்.

1970ல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தையும் பிறப்பித்தார் கலைஞர். இந்த சட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கப்பட்டது. தமிழக அரசும் இந்தத் தடையை எதிர்த்து வழக்காட முடிவுசெய்தது. மாநில உரிமைகளுக்காக கலைஞரின் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்தது. மாநில சுயாட்சிக்காக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவையும் கலைஞர் அமைத்தார். தேசியக் கொடியுடன் தலைமைச் செயலகத்தில் தமிழகத்துக்கென்று ஒரு கொடியையும் கலைஞர் வடிவமைத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

விடுதலை தினத்தன்று மாநில ஆளுநர்கள் கொடியேற்றும் முறையை மாற்றி மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றதிலும், அரசு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்து பாடும் முறையை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்ததிலும் கலைஞரின் நடவடிக்கைகள் மத்திய அரசை மட்டுமின்றி பார்ப்பனர்களை மிகவும் அச்சுறுத்தியது.


 

pillayo pillai mkm

மு.க.முத்து



எனவேதான் 1971 தேர்தலில் திமுக ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று ராஜாஜி சபதம் செய்து காமராஜருடன் கூட்டணி அமைத்தார். இந்திரா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸுக்கு மக்களவைத் தொகுதியில் மட்டும் 9 தொகுதிகளை கலைஞர் ஒதுக்கினார். சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியைக்கூட ஒதுக்க கலைஞர் மறுத்துவிட்டார். கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில், தந்தை பெரியார் ராமர் சிலையை செருப்பால் அடித்தார் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. திமுகவுக்கு எதிராக நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 203 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மக்களவைக்கு நடந்த தேர்தலில் திமுக 23 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 9 இடங்களையும் மொத்தத்தில் கூட்டணி 38 இடங்களையும் வென்றது.

இந்த வெற்றி டெல்லியை 
திகைக்க வைத்தது. கலைஞரின் மாநில உரிமைப் போக்கும், சமூகநீதித் திட்டங்களும், அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னுரிமையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமும் அவர்களுடைய ஆதிக்கத்தை அடியோடு தகர்த்துவிடும் என்று அஞ்சினார்கள். திமுகவை உடைக்க சரியான ஆளைத் தேடினார்கள். அச்சுறுத்தலுக்கு பயப்படும் ஆளாக இருக்க வேண்டும். அதேசமயம் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும் என்று தேடியதில் எம்.ஜி.ஆர் சிக்கினார். தேர்தல் முடிந்த கையோடு மதுரையில் திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் பேரணியில் முகப்பில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து குதிரைமீது அமர்ந்து திமுகவின் கொடியை பிடித்தபடி வந்தார். அவர் அப்போதுதான் கலைஞர் கதை வசனம் எழுதிய பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருந்தார். அந்தப் படத்தை எம்.ஜி.ஆர்தான் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்திருந்தார். 

இப்படி இருந்த நட்பு... பின் கட்சியில் நடந்த பிளவு... அடுத்த பகுதியில் பார்க்கலாம்...  

 

முந்தைய பகுதி...

கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2

 

 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.