ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து விமர்சனம்... கொதித்தெழுந்த தாராவி ஆசிரியர்கள்! தாராவி கதைகள் #4

01:17 PM Jun 01, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில்தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் இருந்த பள்ளிகள் குறித்தும் அங்கிருந்த தமிழர்களின் மொழிப்பற்று குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

மும்பையில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 45 பள்ளிக்கூடங்கள் தமிழர்களுக்காக இருந்தன. இங்கு தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படும். இந்தி, ஆங்கிலம், மராத்தி தவிர அனைத்துப் பாடப்பிரிவுகளும் தமிழிலேயே பயிற்றுவிக்கப்படும். இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடங்கி தலைமையாசிரியர்வரை அனைவரும் தமிழர்கள்தான். தாராவியில் மட்டுமே நான்கு பள்ளிக்கூடங்கள் இருந்தன. நான் வசித்த பகுதிக்கு அருகில் இருந்த பள்ளியில் மட்டும் 1,200 மாணவர்கள் படித்தனர். தமிழ் வழியில் நாம் படித்தாலும் படிக்கிற பாடங்கள் மராட்டிய மாநிலத்தின் பாடத்திட்டங்களாக இருக்கும். இந்தப் பாடப்புத்தகங்களை எங்களுக்கு தமிழில் அச்சடித்து தாருங்கள் என தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஒரு பள்ளி என்றால் நாம் ஏதாவது ஏற்பாடு செய்துகொள்ளலாம். மொத்தம் 45 பள்ளிகள்; ஒவ்வொரு பள்ளியிலும் 500 முதல் 1,000 மாணவர்கள்வரை படிக்கின்றனர். அத்தனை பேருக்கும் புத்தகங்கள் ஏற்பாடு செய்வதென்பது மிகவும் கடினமான பணி. ஆனால், கடைசிவரை தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்யவே இல்லை. அதனால், அங்குள்ள ஆசிரியர்களே அந்தப் பணியைச் செய்து, மாணவர்களுக்குப் பாடமெடுத்தனர். அங்கு தமிழ் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதே பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான். செம்பூர், மாடுங்கா பகுதிகளில் ஆங்கிலவழி பள்ளிக்கூடங்கள் இருந்தன. கொஞ்சம் வசதியுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு படிக்க வைப்பார்கள். ஆனால், ஏழ்மையான வசதி வாய்ப்பற்ற மக்கள், இந்தப் பள்ளிக்கூடங்களை நம்பித்தான் இருந்தார்கள். அங்கிருந்த அரசு, மாணவர்களை நன்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்டடங்கள் எல்லாம் கட்டிக்கொடுத்தது. ஆசிரியர்களுக்கு மாநகராட்சி நல்ல சம்பளம் வழங்கியது. நம் மாநிலத்தில் இருந்த பள்ளிகளில்கூட பெஞ்ச் வசதி இல்லாமல் கீழே அமர வைப்பார்கள். அங்கிருந்த அனைத்துப் பள்ளிகளிலும் பெஞ்ச் வசதி இருந்தது.

அந்தப் பள்ளிகளில் வருடந்தோறும் கருத்தரங்குகள் நடைபெறும். அதில், அரசியல், கவிதை, இலக்கியம் என பிற துறையைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் பேசவைப்பார்கள். நானும் ஒரு பள்ளிக்குச் சென்று உரையாற்றியிருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களைவிட, வேறு மாநிலத்திற்குச் சென்று வசிப்பவர்களுக்குத்தான் மொழியுணர்வு அதிகமாக இருக்கும். ஒரு பள்ளியில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து ஒரு விமர்சனத்தை வைத்தேன். அதை அங்கிருந்த ஆசிரியர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பின் அந்த விமர்சனத்திற்கான காரணத்தை விளக்கமாகக் கூறினேன். மனோன்மணியம் பிள்ளை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் உலகத்தை ஒரு பெண்ணாக வர்ணிக்கிறார். இந்தியா அந்தப் பெண்ணினுடைய முகம்; அந்த முகத்தில் உள்ள நெற்றி தென்னிந்தியா; அதில் வைக்கப்படும் பொட்டு திராவிட நாடு; அதிலிருந்து வரும் வாசம் தமிழ் என்கிறார். அந்தப் பாடலில் தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாதது முதல் பிழை. அதேபோல திராவிட நாடு என்பதை முகத்தில் வைக்கப்படும் பொட்டு எனக் குறிப்பிட்டிருப்பார். அதை முகத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் உறுப்புடன் ஒப்பிட்டிருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சிறந்த ஒன்றல்ல எனக் கூறினேன். ஒரு தமிழ் அறிஞனை சாதாரண ஒரு ஆள் குறைத்துக் கூறுகிறானே என்ற கோபம் அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்தது. நான் முன்னரே கூறியதுபோல வெளிமாநிலத்தில் வசிப்பவர்களிடையே மொழிப்பற்று அதிகமாக இருக்கும்.

தாராவியில் இருந்த நான்கு பள்ளிகளில் இரு பள்ளிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. எஞ்சிய இரு பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே படிக்கின்றனர். கடந்த காலங்களில் தாராவியில் 80 விழுக்காடு தமிழர்கள் இருந்தனர். முகமதியர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள் ஆகியோர் 20 விழுக்காடு இருந்தனர். தற்போது தாராவி மக்கள் தொகையில் 15 விழுக்காடுகூட தமிழர்கள் இல்லை. அதுபற்றி அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.

முந்தைய பகுதி...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT