நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அகரம் மூலம் கல்வி கற்ற 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் வாழ்வில் அகரம் எவ்வளவு முக்கிய பங்காற்றியது என்று பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், அகரம் அறக்கட்டளையில் பயின்று இச்சமூகத்தில் நல்ல நிலைமைக்குச் சென்ற ஒரு மாணவர், தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்றும் அகரம் எவ்வாறு உதவியது என்றும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
என்னோட பேரு அருண் கனகராஜ். நான் அகரம் 2015 விதை பேட்ச். திருப்பத்தூர் பக்கம் 24 கிமீ தள்ளி இருக்கிற ஒரு குக்கிராமம் தான் என்னுடைய ஊர். அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்த பையன் தான் நான். என் கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருக்கிறார்கள். என்னுடைய 10 வயசுல அம்மா ஒரு விபத்து ஏற்பட்டது. அவருக்கு நிறைய ட்ரீட்மெண்ட் செய்து ரொம்பவே செலவு செய்தோம். ஆனாலுமே ட்ரீட்மெண்ட் பண்ண முடியாமல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இறந்துட்டாங்க. நான் முதல் முதலா சென்னை வந்ததே அப்போது தான். அப்பா வெளிநாட்டுக்கு 3 மாசம் தான் ஆச்சு. ஆனால் அம்மா திடீரென இறந்துட்டதால உடனே இங்கே வந்துட்டாரு. அவர் கொஞ்சம் மது குடிப்பாரு. ஊர்லேயே கிடைக்கிற வேலைய பாத்துட்டு இங்கேயே இருந்துட்டாரு. என்னோட 12 வயசுல அவரும் ஒரு விபத்துல இறந்துட்டாரு.
நான் பையன் ஒரே ஒரு பையன்தான். இருந்தாலும் எனக்கு மேல என் அக்கா இருந்தாள். அதனால், என்னோட பாதி பாரத்தை என் அக்காதான் சுமந்துட்டு இருந்தா. அவளோடு அரவணைப்பிலும் அடைக்களத்திலும் நானும் என் தங்கச்சியும் இருந்தோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. எங்க அப்பா வீட்டில் பெரியவர் என்பதால் எங்க பரம்பரை வீட்ட எங்களுக்கு தாத்தா கொடுத்துட்டாரு. அம்மாவுக்கு விபத்து ஆகுறவரைக்கும் எல்லாமே சந்தோஷமா தான் போயிட்டு இருந்துச்சு. எது கேட்டாலும் நினைச்ச நேரத்தில் கிடைக்கும், எது கேட்டாலும் நமக்கு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். அம்மா இறந்ததுக்கு பிறகு எல்லாமே இல்லாம போன ஆயிடுச்சு. நாங்கள் குடியிருந்த வீட்டோட நிலம், எங்க சித்தாப்புவுக்கு பங்கு போயிடுச்சு. அதனால், அந்த வீடு எங்களுக்கு சொந்தமில்லாத மாதிரி ஆயிடுச்சு. அதன் பிறகு, எங்க ஊர்ல ஒரு வீடு கட்டுறதுக்காக எங்க தாத்தா நிலம் கொடுத்திருந்தாரு. அந்த இடத்திலதான் எங்க அம்மா எங்க அப்பாவை வெளிநட்டுக்கு அனுப்பி அவங்க நகை எல்லாம் வச்சு வீடு கட்ட ஆரம்பிச்சாங்க.
நான் 2வது படிக்கும்போதே வீடு கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. வீடு கட்ட ஆரம்பிச்சு 4வது படிக்கும்போது சுவர் எழுப்பி் மோல்டிங் போட்டுட்டாங்க. அந்த வீட்டில் ஒரு வருசம் எங்க அம்மா குடி இருந்தாங்க.அப்போது, எங்க ஊரு டவுனில் பிரைட் ரைஸ் கடை மாதிரி வச்சிருந்தோம். அந்த வீட்ல இருக்கும்போதுதான் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. அதுக்கப்புறம் அதே வீட்லதான் அப்பாவும் எங்களை பாத்துக்கிட்டாரு. அக்காவை சமைக்கவிடாமல் அப்பா தான் சமைப்பாரு. அம்மா அப்பாவுக்கு நாங்கள் நல்லா படிக்கணும் அப்படின்ற ஆசை. திடீரென அம்மா வாழ்க்கையில் இல்லாமல் போனதுக்கு பிறகு, எங்களுக்கு என்ன பன்றதுன்னு ஒன்னுமே புரியல. பிரைவேட் ஸ்கூலில் என்னைய படிக்க வைக்கனும்னு அவங்களுக்கு ரொம்பவே ஆசை. 5வது முடிச்சிட்டு 6வது போகும் போது, பிரைவேட் ஸ்கூலில் சேர்க்கறதுக்கு எல்லா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டாங்க.
எங்க அப்பா அம்மாவை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு அட்மிஷன் போடுறதுக்கு ஸ்கூலுக்கு வந்தாரு. அடுத்த நாள் ஸ்கூலுக்கு கிளம்புறேன். எங்க ஊர்ல இருக்கற ஒரு டெலிபோனுக்கு எங்க அம்மா இறந்துட்டாங்கனு ஒரு போன் வந்துச்சு. இந்த மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டுதான் வளர்ந்தோம். எங்க அம்மா இருந்த அதே பெட்லதான் எங்க அப்பாவும் இறந்தாரு. அம்மா எல்லா ஹாஸ்பிட்டலும் போயிட்டு கடைசியா ராஜீவ் காந்தி ஹாஸ்பிடல் வந்தாங்க. அதே அவசர சிகிச்சை பிரிவுல அதே பெட்டில் தான் அப்பாவும் அட்மிட் ஆகி இறந்தாரு. அவங்க ரெண்டு பேருமே இல்லை என்று நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கிறேன். எனக்க அம்மா அப்பா ரெண்டு பேரு இல்ல, அதுக்கு பதில் என்னோட பிரண்ட்ஸ் மூலமா எனக்கு அவங்க கிடைச்சிருக்காங்க. ஏன்னா அவங்களோட அப்பா அம்மால்லாம் என்னைய அவங்க பையன் மாதிரி பாத்துக்கறாங்க. எங்க ஊரில் இருந்தவரைக்கும் 10 பேரை தவிர யாரையும் தெரியாது. ஊரை விட்டு காலேஜில் படிக்கும் போது எனக்கு பெரிய நண்பர்கள் வட்டாரமே கிடைச்சது.
அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்பா இருக்காருன்ற ஒரு தைரியத்துல இருந்தோம். ஒரு வருஷத்திலயே அவரும் தவறிட்டாருன்னும்போது எங்க 4 மாமாக்களும், பசங்களை எப்படியாச்சு பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு எங்க அப்பாவோட தம்பிகிட்ட எங்க மூணு பேரையும் ஒப்படைச்சிட்டு எங்க அப்பாவோ இறந்த சடங்கை முடிச்சிட்டு கிளம்பிட்டாங்க. நாங்க மறுபடியும் அதே கவர்மென்ட் ஸ்கூல்ல கண்டினியூ பண்ணோம். சித்தப்பா வீட்ல தங்கிதான் படிச்சிட்டு இருந்தோம். சின்ன சின்ன செலவுக்கு எல்லாம், கனகாமரம் பூ தோட்டத்தில் பூ எடுக்க போவோம் ஒரு கிலோக்கு 5,6 ரூபாய் கொடுப்பாங்க. அப்புறம் வாழைத்தோட்டத்துக்கு எல்லாம் எருவரைக்கு போவோம். அங்க போனா காசும் கொடுப்பாங்க, வாழைக்காயயும் ஒரு சீப்பு கொடுத்து அனுப்புவாங்க. அந்த காயை எடுத்துட்டு வந்து சமைச்சு சாப்பிட்டுருக்கோம். அம்மா அப்பா பேரோட ரேஷன் கார்டு இருந்துச்சு, அத வச்சு தான் அரிசி வாங்கி சாப்பிட்டு இருந்தோம். ஆரம்பத்தில் அக்காவுக்கு காலேஜ் பீஸை சித்தப்பா கட்டுனாரு, அதற்கு அப்புறம் அவர் கட்ட முடியாது என்று சொன்னதுக்கு பிறகு அவளோட பிரண்ட்ஸ் கட்டிருக்காங்க. இப்படி எல்லோருடைய உதவி மூலமாக அவ பிஏ இங்கிலிஷ் லிட்டரேச்சர் முடிச்சா. அதுக்கப்புறம் எங்க மாமா ஒருத்தங்க, அக்காவோட பிஎடுக்கு ஹெல்ப் பண்ணாரு. அவ பிஎட் முடிச்சு 3000 சம்பளத்தில் வேலைக்கு போக ஆரம்பிச்சா. நான் 12த் முடிக்கிற ஸ்டேஜ். அதுவரைக்கும் எங்க சித்தப்பா வீட்லதான் இருந்தோம்.
நம்மளால எந்த பிரச்சனையும் அவங்களுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டு நாங்களா விலகிட்டோம். சித்தப்பா எங்களுக்கு அப்பாவா இருக்கமாட்டாரான்னு நிறைய நாள் ஏங்கியிருக்கேன். அவர் கட்டி பிடிக்கெ மாட்டாரான்னு ஏங்கி இருக்கேன். அவர் தொட்டு பேச மாட்டாரான்னு ஏங்கி இருக்கேன். இந்த மாதிரி நிறைய பீல் வந்திருக்கு.அந்த கோவம்லாம எனக்கு அவர் மேல இருக்கு. என்னைக்கு நாங்க சித்தப்பா வீட்ல இருந்து வெளிய வந்து எங்க வீட்ல தங்கி நாங்க சர்வை பண்ண ஆரம்பிச்சோமோ அன்னைக்குதான் சர்வைவல்னா என்னன்றத கத்துக்கிட்டோம். தனியா இந்த உலகத்துல அம்மா அப்பா இல்லாட்டியும் ஒரு பசங்க ஒழுக்கமா வளர முடியும். பசங்க இந்த மாதிரி நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு போக முடியும்ன்றது தெரிஞ்சுக்கிட்டோம். 12வது முடிச்சிட்டு காலேஜ் போற நேரத்தில், நாங்க தனியா வந்துட்டோம். அக்காவுக்கு 3,000 ரூ தான் சம்பளம், வீட்டில் ஜன்னல் கூட கிடையாது. அந்த ஜன்னலுக்கு எல்லாம் கூட அக்காவோட புடவையதான் தச்சு ஸ்கிரீன் மாதிரி போட்டோம்.ரோட்டோரமே இருக்கற வீடு, யாரு எந்த நேரத்துல எந்த மாதிரி பார்ப்பாங்கன்னு தெரியாது. எல்லாரோட பார்வையும் ஒரே மாதிரியும் இருக்காது. நிறைய பேர் அந்த மாதிரி வித்தியாசமான பார்வையிலும் பார்த்துருக்காங்க. இந்த மாதிரி சமயத்தில் காலேஜ் யார் படிக்க வைப்பாங்க, பீஸ் யார் கட்டுவாங்க என்று யோசிச்சிட்டு இருந்தேன். நான் ரொம்ப ஃபீல் பண்ணி தினமும் அழுவேன். நம்மளால இதுக்கு மேல படிக்கவே முடியாதுனு அழுதுட்டே இருப்பேன். எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை. எனக்கு அம்மா இருந்த வரைக்கும் இது படிக்கணும் அது படிக்கணும்னு ஆசை இருந்துச்சு அதுக்கப்புறம் எனக்கு படிக்கணும்ன்றதே ஒரு பேராசை ஆயிடுச்சு.
படிக்க முடியும நம்மளால? ஏன்னா அந்த படிப்பு கிடைக்காதுன்றது தெரிஞ்சிருச்சு. எங்க போய் அப்ளை பண்றது எதுவுமே தெரியாது. அக்காதான் இருந்த எல்லா காலேஜஸுக்கும் அப்ளிகேஷன் போட கூட்டிட்டு போனாள். அப்ளிகேசன் முடிந்ததால், ஒரு சில காலேஜில் அட்மிஷன் கிடைக்கல. அதுக்கு அப்புறம், 1 வருசம் காலேஜ் போகாமல் இருந்தேன். வேலூரில் இருக்கிற ஒரு தனியார் கல்லூரியில் 3 மாசம் மல்டிமீடியா கோர்ஸ் பண்ணேன். அதை கத்துக்கிட்டு ஒரு இடத்தில் மாசம் ரூ.3,000க்கு வேலை பார்த்தேன். ஒரு இரண்டு மாசம் பார்த்தேன். அடுத்த வருஷம் காலேஜ் சேர வேண்டும் என, பானிப்பூரி கடை, பேக்கரி கடை இந்த மாதிரி எந்தெந்த வேலை கிடைக்குதோ எல்லா வேலைக்கும் போயிட்டு அந்த காசு சேர்த்து வச்சேன். சென்னையில் உள்ள குன்றத்தூரில் பானிப்பூரி கடையில் வேலை பார்த்துட்டு இருக்கும் போது ஒரு பிரண்ட் மூலமா அகரம் அறக்கட்டளையை பற்றி தெரிந்து கொண்டேன். நானும் என்னுடைய நிலைமையையும், குடும்பத்தின் நிலைமையையும் எல்லாவற்றையும் சேர்த்து எழுதி அகரம் அறக்கட்டளைக்கு அப்ளை செய்தேன். ஒரு வாரத்திலேயே அகரம் அறக்கட்டளையில் ஒரு போன் வந்தது, என்னுடைய விவரங்களை சொன்னேன். அதன் பின்னர், ஃபர்ஸ்ட் லெவல் இண்டர்வீயூவுக்கு கூப்பிட்டாங்க. நானும் அக்காவும் அந்த இண்டர்வீயூல் பேசி செலக்ட் ஆகிட்டேன். செகண்ட் லெவல் இண்டர்வீயூவிலும் செலக்ட் ஆனேன். அடுத்து ஹவுஸ் விசிட் செய்தார்கள். ஒரு வேளை அகரத்தில் செலக்ட் ஆகவில்லையென்றால் என்ன என யோசித்து சென்னையில் இருக்கக்கூடிய எல்லா காலேஜிலும் அப்ளை செய்து ஒரு ரிலேட்டிவ் வீட்டில் தங்கியிருந்தேன். அன்னைக்கு நைட் தான் சீட் கிடைத்துவிட்டது என அகரத்தில் இருந்து கால் வந்தது.
என்னுடைய மார்க்கை வைத்து கோயம்புத்தூரில் உள்ள காலேஜில் ஆர்ட் அண்ட் சயின்ஸ் கிடைச்சது. அப்போது தான் ஊரை விட்டே வெளியே வரேன். ஜீரோவா இருந்தேன், அங்க இருக்கும்போது ஒரு மெச்சூரிட்டி எனக்கு கிடைச்சது. 10 வயசுலயே ஒரு 15 வயசு பையன் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சேன். 15 வயசுல 20 வயசு பையன் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சேன். அடுத்து அக்காவை பாத்துக்கணும் தங்கச்சிய பாத்துக்கணும். இவங்க இவங்களுக்கு உண்டான சேப்டி எல்லாம் எப்படி நாம பார்த்துப்போம் அப்படின்றதெல்லாம் இருந்துச்சு. தமிழ் மீடியத்திலேயே படித்ததால், காலேஜில் இங்கிலிஷில் படிப்பதற்கு அவ்வளவு சிரமமாக இருந்தது. எனக்கே தெரியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை வர ஆரம்பித்துவிட்டது. அகரத்தில் படிப்பு மட்டும் இல்லாமல், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் டிரைனிங் கொடுப்பாங்க. அதையும் கத்துகிட்டதால் எனக்கு ரொம்பவே ஈசியாக இருந்தது. எனக்கென்று ஒரு மெண்டார் பிக்ஸ் பண்ணாங்க. அந்த மெண்டார் அண்ணா கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவர் ரொம்பவே உதவி பண்ணாரு. 3 மாசம் கழிச்சு இங்கிலீஷ் நல்லா கத்துக்க ஆரம்பிச்சேன்.
தொடரும்....