அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று(14-07-25) காலை குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை என்ற பெருமை திருப்பரங்குன்றத்துக்கு உண்டு. இந்த கோவிலில் ரூ.2 கோடியே 36 லட்சத்தில் திருப்பணிகள் நடந்தன. இதை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 8-ம் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க யாகசாலையில் இருந்து தங்கம், வெள்ளி கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. முருகப்பெருமானின் தாய், தந்தையரான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அருள்பார்வையில் பரிவார மூர்த்திகள் மற்றும் கோவிலின் கம்பீரமான 7 நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷம் எழுப்பி முருகனை வணங்கினர். இந்த குடமுழுக்கு நிகழ்ச்சிக்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.