Skip to main content

கிரிக்கெட் என் வாழ்க்கையில் என்ன சொல்லி கொடுத்தது- யுவராஜ் உருக்கம்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

அதிரடி பேட்டிங், சுறுசுறுப்பான ஃபீல்டிங், ஆச்சர்யம் தரும் பந்துவீச்சு என பல இந்திய ரசிகர்களின் பிடித்தமான வீரராக அறியப்படும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

yuvaraj singh retires from international cricket

 

 

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், புற்றுநோயுடன் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த முடிவை அறிவித்த அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து உருக்கமாக பேசினார்.

செய்தியாளர்கள் முன் பேசிய அவர், "கிரிக்கெட்டை சுற்றியே 25 ஆண்டுகள் எனது வாழ்க்கை சுழன்றுள்ளது. அதில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். தற்போது ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட் எனது வாழ்க்கையில் கற்றுக்கொடுத்தது ஏராளம். போராட்டக்குணம், தோல்வி, அதிலிருந்து மீண்டும் வெற்றியை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்" என கூறினார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை என இரண்டையும் இந்தியா வென்றதில் இவரது பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Goa govt notice to cricketer Yuvraj Singh

 

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணி போட்டியில் வெல்வதற்கும் இரு உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இருந்தும் புற்றுநோய்க்கு முன்பு இருந்த ஆட்டம் வெளிப்படாததால் 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.   

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

அதில் டிசம்பர் 8 ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. யுவராஜ் சிங் ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை எனில் விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.