ADVERTISEMENT

இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு இடைக்கால தடை விதித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு!

10:51 AM Aug 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இந்தியா சார்பில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியில் தோல்வியடைந்தார். இந்தநிலையில், ஒழுங்கின்மை காரணமாக வினேஷ் போகத்திற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்சின்போது, சக வீராங்கனைகளுடன் அறையைப் பகிர்ந்துகொள்ள மறுத்தது, தேசிய மல்யுத்த பயிற்சியாளரோடு பயிற்சி மேற்கொள்ளாமல் தனிப்பட்ட பயிற்சியாளரோடு பயிற்சி மேற்கொண்டது, ஒலிம்பிக் போட்டியின்போது இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் வழங்கிய உடையை அணியாமல், தனது தனிப்பட்ட ஸ்பான்சர் வழங்கிய உடையை அணிந்து விளையாடியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வினேஷ் போகத்திற்கு ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்தொடர்ச்சியாக இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்கிற்கு ஒழுங்கின்மைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சோனம் மாலிக், தனது பாஸ்போர்ட்டை இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடமிருந்து நேரடியாக பெறாமல், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் பெற்றதால் அவருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சோனம் மாலிக் நேரடியாக மல்யுத்த கூட்டமைப்பிடம் பாஸ்போர்டைப் பெறாதது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "ஹரியானாவில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்ததால், டெல்லி சென்று பாஸ்போர்ட்டைப் பெற முடியவில்லை. ஒலிம்பிக்கிற்கு முன்பாக பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகையில், எந்த விளையாட்டு வீரர் எந்தவகையான பிரச்சனையை எதிர்கொண்டாலும் இந்திய விளையாட்டு ஆணையத்தை அணுகலாம் என தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டி நெருங்கிய சூழலில் எங்கள் கையில் பாஸ்போர்ட் இல்லாததால் பதற்றத்திற்கு ஆளானோம். எனவே விளையாட்டு ஆணையத்தின் அதிகாரியைத் தொடர்புகொண்டு பாஸ்போர்ட்டை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டோம்" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT