World Cup Cricket; Australia slipped in the standings

உலக கோப்பையின் 13 வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் 80 ரன்களும், அலிகில் (58) ரன்களும்மற்றும் முஜீப்28 ரன்களும் எடுக்க, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 284 ரன்கள் எடுத்தது.

Advertisment

பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ரூட்டும் 11 ரன்களில் முஜிப்பின் சுழலில் வீழ்ந்தார். ஓரளவு நிதானமாக ஆடிய மாலன் 32 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த கேப்டன் பட்லர் 9 ரன்களிலும், அதிரடி வீரர்கள் லிவிங்ஸ்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் புரூக் மட்டும் அரை சதம் கடந்தார்.

Advertisment

அடுத்தடுத்து வந்த வீரர்கள் கைகொடுக்க தவற, பொறுமை இழந்த புரூக்கும் 66 ரன்களில் முஜீப் பந்தில் ஆட்டமிழந்தார். முஜீப், ரஷீத் கான், நபி என மூவேந்தர் சுழல் கூட்டணியில் இங்கிலாந்து அணி சுழற்றி அடிக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகள் எடுத்த முஜிபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராகப் பெற்ற இந்த பெரிய வெற்றியின் மூலம், ரன் விகிதம் உயர்ந்து, சர சரவென முன்னேறி 6 ஆவது இடம் பிடித்துள்ளது. 9 ஆவது இடத்தில் இருந்த முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு நிலையா என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் கருத்துகளாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்றுஆஸ்திரேலிய அணி தனது மூன்றாவது லீக்ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லக்னோவில் நடைபெற உள்ளது. இலங்கை அணியின் கேப்டன் சனகா, காயம் காரணமாகஉலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், குசால் மெண்டிஸ் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெ.அருண்குமார்