உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தரவரிசையில் நல்ல இடங்களைப் பெறாத அணிகள் தகுதிச்சுற்றில் கலந்துகொள்ள வேண்டிய இருக்கிறது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகள் மோதுகின்றன. ஜிம்பாப்வேயில் இந்த தகுதிச்சுற்றானது நடைபெற்று வருகிறது.
போட்டியை நடத்தும் நாடு, உலக தரவரிசையில் முதல் ஏழு இடத்தில் இருக்கும் நாடுகளின் அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் 2 அணிகள் என உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ளும்.
நேற்று ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 289 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் எடுத்த 138 ரன்கள் வீணாகின.
இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக்கோப்பையில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பில் முக்கால்வாசி தூரத்தை எட்டியிருக்கிறது எனலாம். தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, புதன்கிழமை நடக்கவிருக்கும்ஸ்காட்லாந்து உடனான போட்டியில் தோல்வியைத் தவிர்க்கவேண்டும். அதேபோல், ஜிம்பாப்வே அணி வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள யூ.ஏ.இ. உடனான போட்டியில் வென்றால் அந்த அணியும் உலகக்கோப்பைக்கு தகுதிபெறலாம்.