Skip to main content

மகளிர் டி20 உலகக் கோப்பை; இந்திய அணி அறிவிப்பு

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Women's T20 World Cup; Indian team announcement

 

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் இந்தியா பிரிவு ‘பி’ யில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.   

 

கொரோனாவிற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. மூன்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் நடக்க உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன் பிரீத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில், “ஹர்மன் பிரீத்கர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், செஃபாலி வர்மா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா,ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், ரேனுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்தர்கார், ஷிகா பாண்டே” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.