Skip to main content

தங்கக்கனவுகளுடன் வரும் பெண்கள் சந்திக்கும் தடைகளும், சோதனைகளும்...

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

“ஐந்து முறை உலக சாம்பியன் வென்றவள் நான். ஆனால் இன்னும் எனக்கு பெரியளவில் ஸ்பான்ஸர் இல்லை. நம் நாட்டில் பெருநிறுவன ஊக்கமளிப்பு அரிதானது அல்ல. மற்ற விளையாட்டில் வீரர்களுக்கு கிடைக்கும் நிதியுதவி, எனக்கு கிடைக்காதபோது மிகவும் வருத்தப்படுகிறேன்" - இந்த வார்த்தைகளை உதித்தவர் விளையாட்டுத் துறையில் இந்திய மகளிரில் அதிகம் சாதித்த மேரி கோம். 

 

maricom

 

உலகளவில் குத்துச்சண்டையில் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த வீரருக்கே இதுதான் நிலைமை. அப்படியென்றால் மாவட்ட, மாநில அளவிலும், பள்ளி, கல்லூரிகளிலும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் பல வீராங்கனைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டியது அவசியம். 
 

2009-ஆம் ஆண்டு புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா வீராங்கனைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த உண்மையை ஊடகங்களின் முன் தெரிவித்தார். விளையாட்டு உலகில் பல வருடங்கள் சர்வதேச அளவில் விளையாடிய எனக்கே சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. அப்படியென்றால் புதிய வீராங்கனைகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்ற கேள்வியை எழுப்பினார் உஷா.

 

pt usha

 

பாலின வேறுபாடு, கிடைக்காத ஸ்பான்ஸர்கள், பாலியல் வற்புறுத்தல்கள், பாதுகாப்பின்மை என்ற பல பிரச்சனைகளை தாண்டிதான் மகளிர், விளையாட்டு உலகை நோக்கி அடியெடுத்து வைக்கின்றனர்.  சமூகம், உளவியல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மகளிரை அதிகம் பாதிக்கின்றன. பயிற்சியாளர்கள் மூலம் பாலியல் தொல்லை வருவது இன்றும் பல இடங்களில் நடைபெறுகிறது. 
 

சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவாதத்தை உருவாக்கி சில சாதிக்கும் பெண்களை முடக்கி விடுகின்றனர். உதாரணமாக, அவர்கள் அணியும் ஆடைகள் குறித்து விவாதம் பரப்பப்படுகிறது. அதிகாரிகள், தேர்வு குழுக்கள், பயிற்சியாளர்கள், அரசுகள் இன்னும் விளையாட்டுத் துறையில் பாலின சமத்துவமின்மையை கடைபிடித்து வருகிறார்கள். 
 

விளையாட்டுத் துறையில் பெண்கள் சிறு தவறு செய்யும்போது அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆனால் அவர்கள் சாதிக்கும்போது பெரியளவில் கண்டுகொள்வதில்லை. ஜூனியர்-சீனியர், பணபலம், அதிகாரபலம் போன்ற காரணிகள் வெகுவாக தகுதியான வீராங்கனைகளை தடுக்கிறது. ஜூனியர்களுக்கு திறமை அதிகமிருப்பினும் சீனியர்களின் ஆதிக்கம் இன்றும் விளையாட்டுகளில் கொடிகட்டி பறக்கிறது. 
 

இன்றும் நகரங்களில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அளவிற்கு கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டில் சாதிக்கும் பலருக்கு கிடைப்பதில்லை. பெரிய கல்வி நிறுவனங்களில் விளையாட்டில் ஓரளவு திறமை கொண்டவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் சிறிய கல்வி நிறுவனங்களில் முழுத்திறமை கொண்ட வீரர்களுக்கு அமைவதில்லை.  
 

எதிர்நீச்சல், கானா போன்ற படங்கள் விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக்கூறின. சக் தே இந்தியா போன்ற படங்கள் ஜூனியர்-சீனியர, ஈகோ பிரச்சனை போன்றவை எந்தளவிற்கு சர்வதேச அளவிலும் இருக்கின்றன என்பதை தெரிவித்தது. 
 

விளையாட்டு உலகில் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது அவர்களின் முயற்சிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் அதிகம். பெண்களால் பெரியளவில் சாதிக்க முடியாது என்று கூறிபவர்கள் ஏராளம். தோல்வியுறும் போது அவர்களின் கதை முடிந்தது என்பார்கள். வெற்றிபெறும் போது அமைதி காப்பார்கள் என்று விளையாட்டில் பெண்கள் சாதிக்கத் துணியும்போது சமூகம் அதை எவ்வாறு அணுகியது என்பதை பற்றி தன் வேதனையை தெரிவித்தார் மேரி கோம். 
 

பி.டி.உஷா, மிதாலி ராஜ், மேரி கோம், சாய்னா நேவால் ஆகியோரின் உலக சாதனைகள் எளிதாக படைக்கப்படவில்லை. அவர்கள் தன்னுடைய வாழ்வில் பல கடினமான சோதனைகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்துதான் இன்று உலகின் சிறந்த வீராங்கனைகளாக மாறியுள்ளனர். 
 

விளையாட்டில் சாதிக்க களமிறங்கும் வீராங்கனைகளின் உறுதியான தன்னம்பிக்கையை குறைப்பதற்காக மட்டுமே பல விமர்சனங்கள் வரும். விமர்சனங்கள், ஏழ்மை ஆகியவற்றை தாண்டி ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டி வருகின்றனர் பலர். அவர்களின் போராட்டங்களும், சாதனைகளும் வருங்கால தலைமுறைக்கு பெரிய நம்பிக்கையையும், மாற்றத்தையும் கொடுக்கும்.
 

“அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இன்று ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவிற்கு பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் சிகரங்களை அடைந்த பல திறமையான விளையாட்டு வீராங்கனைகளான மேரி கோம், மிதாலி ராஜ், சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு நாம் இன்னும் சரியான விதத்தில் அங்கீகாரம் அளிக்கவில்லை. 
 

சச்சின், கோலி, தோனி என்று பேசும் நாம் மந்தனா, ராணி ராம்பால், கீதா பகாட், தீபா கர்மகார் என்று பேசும்போதுதான் மகளிர் விளையாட்டும் அங்கீகாரம் பெரும். வாழ்க்கையில் பல விஷயங்களைப் போல, இதற்கான மாற்றமும் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டியது அவசியம்.

 

 

 

Next Story

பதக்கத்துடன் திரும்பிய இந்திய அணி... பெண் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பளித்த ஊர் மக்கள்!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உள்ளது கண்டமத்தான் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி. நேபாளத்தில் உள்ள காட்மெண்டில் சமீபத்தில் சர்வதேச பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவிகள்  பங்கேற்றுள்ளனர்.

 

அதில் கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி ஒருவர் ஆவார். இவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், அவருக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக, புவனகிரி அதிமுக எம்.எல்.ஏ. அருள்மொழிதேவன் கபடி வீராங்கனை மீனாட்சிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு கபடி போட்டியில் கலந்துகொள்வதற்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த மாணவியின் திறமையை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தக் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

Next Story

“நீங்க எங்க வீட்டுப் பொண்ணு!” - கத்தார் தமிழர்களின் அன்பில் திளைத்த கோமதி!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

நம் நாட்டில் எந்தத் திறமையாளராக இருந்தாலும், தானே முட்டிமோதி வெற்றி கண்ட பிறகே உலக வெளிச்சத்தை அடையமுடியும் என்கிற சூழல் இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. 

 

Gomathi


 


கத்தார் நாட்டில் தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 800-மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார் கோமதி மாரிமுத்து. இதுவரை இந்தியாவில் இப்படியொரு சாதனையை யாரும் நிகழ்த்தி இருக்காத நிலையில், 30 வயது கோமதி பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்த புகழை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார். இருந்தபோதிலும், இந்தியாவைச் சேர்ந்த போட்டியாளர்களோ, மற்ற யாருமோ ஓடிச்சென்று வெற்றி எல்லையைத் தொட்டிருக்கும் கோமதியிடம் கைக்குலுக்கவோ, கட்டியணைக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ களத்திற்குச் செல்லவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
 

ஆனால், கத்தார் வாழ் தமிழர்கள் கோமதியை அவ்வளவு தனிமையில் விட்டு விடவில்லை. கோமதி தங்கியிருந்த ஓட்டலில் அவரை வரவேற்பதற்காகவே ஒரு தனிஅறை புக் செய்து காத்திருந்திருந்தது பலரையும் வியப்படையச் செய்தது. அவர்களைக் கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்ட கோமதி, கண்கலங்கி நின்றிருக்கிறார். கத்தாருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் தங்கம் வென்ற கோமதி, கேரளாவைச் சேர்ந்த சித்ரா ஆகியோருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.
 

Gomathi
கோமதிக்கு பரிசு வழங்கும் இந்திய தூதர் பி.குமரன்


ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தங்கக் காசு ஒன்றை கோமதிக்கு பரிசாகத் தந்திருக்கிறார்கள். அங்கே வாழும் தமிழர்கள் சிலர் இந்திய நிர்வாகிகளின் அனுமதி பெற்று கோமதியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று சொந்த மகளைப் போல கவனித்து விருந்துவைத்து உபசரித்திருக்கின்றனர். சிலர் கொடுத்த அன்பளிப்புகள் மட்டுமே 30 கிலோ அளவுக்கு, அன்பின் சுமையாக நிறைந்திருக்கிறது. கோமதியின் பொருளாதாரச் சூழலை அறிந்துகொண்டும், மேலும் பல சாதனைகளை அவர் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலர் அவரது வங்கிக் கணக்கைக் கேட்டபோது, பெருந்தன்மையாக மறுத்திருக்கிறார் கோமதி. தமிழகத்திலும் பலர் அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.
 

இந்தியா திரும்பிய கோமதி தமிழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பயிற்சிக் காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். “சாப்பாட்டுகே வழியில்லாம ரொம்ப கஷ்டப்பட்ட நாட்களில்கூட பயிற்சியைக் கைவிடத் தோணாது. இருந்தும் ரெண்டு வருஷம் வறுமையின் காரணமா பயிற்சி எடுக்க முடியாம போச்சு. ஒருவேளை நல்ல பயிற்சி எடுத்திருந்தா இதைவிட நல்ல ரெக்கார்டு வச்சிருப்பேன். இந்த நேரத்துல என் கடவுளா நினைக்கிற அப்பா என்கூட இல்லாதது வருத்தமா இருக்கு. மாட்டுக்கு வைச்சிருக்க சாப்பாட்டைச் சாப்பிட்டு, என் பயிற்சிக்காக நல்ல சாப்பாடு போட்டாரு என் அப்பா” என கண்கலங்கினார். 
 

“என்னைப் போல பயிற்சிக்காக உதவி கிடைக்காம பலர் இருக்காங்க. பலர் விளையாட்டையே விட்டுட்டு போயிட்டாங்க. இனிமேல் அப்படி நடந்துவிடக் கூடாது. எனக்கு உதவி கெடைக்கலேன்னாலும் பரவாயில்ல. என்னைப்போல திறமையுள்ள பலருக்கும் தமிழக அரசு உதவி செய்தால், நிறைய சாதனைகள் படைக்க முடியும். இந்திய அரசு கூட இந்தப் போட்டிக்காக எனக்கு உதவல. இனிமே உதவி கெடைக்காட்டியும் பரவாயில்ல. கடுமையா பயிற்சி எடுத்து ஒலிம்பிக் மெடல் அடிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்று உறுதியாகக் கூறுகிறார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து. 
 

விடாப்பிடியான தன்னம்பிக்கையும், வறுமையிலும் ஜெயித்துவிட வேண்டும் என்ற உறுதியும் மட்டுமே கோமதியை உலகமே கொண்டாடும் இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தோள் கொடுத்திருந்தால் அதை இன்னும் சுலபமாக்கி இருக்கலாம்.