Skip to main content

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா வங்கதேசம்?

Published on 24/10/2023 | Edited on 25/10/2023

 

Will Bangladesh retain their semi final chances against south africa

 

உலக கோப்பையின் 23 வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில்  இன்று நடைபெறுகிறது.

 

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் 50% முடிந்த நிலையில், உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து உட்பட 4 அணிகள் ஒரு வெற்றியுடன் தடுமாறி வரும் நிலையில், முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும், வங்கதேச அணியும் மோத உள்ளது. வங்கதேச அணிக்கு இன்று வெற்றி பெற்றால் தான், அரை இறுதி வாய்ப்பில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதால், அந்த அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாகும்.

 

தென்னாப்ரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முயலும். காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் இந்த போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதால், இது வங்கதேச அணிக்கு பெரிய பலமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிறப்பாக செயல்படுவதால் அந்த அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி 18 முறையும், வங்கதேச அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்துக் கொண்ட  2007 மற்றும் 2019 உலக கோப்பைகளில் வங்கதேச அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருப்பதால், அந்த வரலாறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு சற்று கவலை தரக்கூடிய வகையில் உள்ளது.

 

தென் ஆப்பிரிக்க அணியை, நெதர்லாந்து அணி வீழ்த்தி இருப்பதாலும், கடந்த உலகக் கோப்பைகளில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உள்ளதாலும், தங்களால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு வங்கதேச வீரர்கள் களமிறங்குவார்கள் என்பதால், இன்றைய போட்டி சிறப்பானதொரு ஆட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- வெ. அருண்குமார்

 

 

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா ரிட்டர்ன்?; கைது செய்ய காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றம்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Police waiting to arrest Brajwal Revanna in airport

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்தது. அதோடு ஹொலேநரசிபுராவில் உள்ள வீட்டிலேயே தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் பெண் கவுன்சிலர் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து பெங்களூருக்கு வருவதாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, திடீரென்று, டிக்கெட்டை ரத்து செய்ததால், அவரை பிடிக்க காத்திருந்த போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெர்மனியில் இருந்து நேற்று (15-05-24) நள்ளிரவு 12:20 மணி லுஃப்தான்சா விமானம் மூலம் பிரஜ்வல் பெங்களூருக்கு வருவதாக  விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த சிறப்பு புலனாய்வுக் குழு, பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய பெங்களூர் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று அவருக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ஆனால், பிரஜ்வல் திடீரென்று விமான டிக்கெட்டை திடீரென்று ரத்து செய்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயர் இல்லை என்பதும், அவர் விமானத்தில் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால், ரேவண்ணாவை கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு ஏமாற்றம் அடைந்தனர். 

Next Story

20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - ரத்தக் கறையுடன் வீடியோ வெளியிட்ட நடிகர்

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
kannada actor Chetan Chandra seriously injured in mob attack

கன்னடத் திரையுலகில் பிரபலமாக வலம் வருபவர் சேத்தன் சந்திரா. இவர் தன்னை 20 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரத்தக்கறையுடன் அவர் வீடியோவில் பேசியது, “அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு கோவிலுக்கு என் அம்மாவுடன் சென்றிருந்தேன். வீடு திரும்பும் போது குடிபோதையில் இருந்த ஒருவர் எனது காரை பின்தொடர்ந்து சேதப்படுத்த முயன்றார். அவரிடம் விசாரித்தபோது, அவருக்கு பின்னால் வந்த 20 பேர் என்னை தாக்கத் தொடங்கினர்.

இதனால் எனக்கு கடும் காயம் ஏற்பட்டது. அந்த கும்பல் எந்த இரக்கமும் இல்லாமல் என்னைத் தாக்கினார்கள். இது ஒரு பயங்கரமான அனுபவம். எனது கார் முற்றிலும் சேதமடைந்தது, போலீசார் எனக்கு முதலுதவி அளித்தனர். அடித்தவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்தனர்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் சந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கக்கலிபுரா காவல் அதிகாரிகள், தாக்கிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்பு காவல்துறை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.