Skip to main content

ஹர்திக் பாண்டியா அணியில் இடம்பெறாதது ஏன்? - கங்குலி விளக்கம்!  

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

GANGULY

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாகத் தென் ஆப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்தநிலையில் ஒமிக்ரான் வகை கரோனா பரவி வருவதால், இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

 

இந்தநிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் தென் ஆப்ரிக்கா பயணம் இன்னும் அட்டவணையில் இருப்பதாகவும், அந்த சுற்றுப்பயணம் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும்தான் பிசிசிஐ எப்போதும் முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியுள்ள கங்குலி, வருகின்ற நாட்களில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் ஹர்திக் பாண்டியா தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, "அவர் ஒரு நல்ல கிரிக்கெட்டர். அவர் உடல்தகுதியுடன் இல்லை. அதனால்தான் அவர் அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்டதும் அவர் திரும்பி வருவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 
 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.