Skip to main content

சென்னை அணியுடன் மோதப் போவது யார்? - மும்பை VS குஜராத் முழு அலசல்

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

 

குஜராத் அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக குவாலிஃபயர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் லக்னோ அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேற நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்றுத் தந்த பாடசாலைக்கு எதிராக வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியில் நெடுங்காலம் விளையாடிய ஹர்திக், குஜராத் அணியின் கேப்டனான பின் தொடர்ந்து இரண்டு முறை அணியை ப்ளே ஆஃப் போட்டிக்கு கொண்டு வந்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார். 

 

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த ஹர்திக் படை என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்பது போட்டியின் போதே தெரியும். மறுபுறம் மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் ‘கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல்’ சிறந்த அணியாக செயல்படுவதை கடந்த சீசன்களில் நாம் பார்த்துள்ளோம். 19 ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அனைத்தையும் தாண்டி மும்பை அணி மட்டும் தான் குஜராத் அணியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. 

 

மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ப்ளே ஆஃப் போட்டி சிறப்பானதாக அமைந்ததில்லை. ரோஹித் 19 முறை மும்பை அணிக்காக ப்ளேஆஃப் போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 297 ரன்களை மட்டுமே எடுத்து சராசரியாக 16.50 ரன்களை மட்டுமே வைத்துள்ளார். அதில் இரு அரை சதங்களும் அடக்கம். அவர் விளையாடிய கடைசி 9 போட்டிகளில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

மற்றபடி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேம்ரூன் க்ரீன், திலக் வர்மா, நெஹேல் வதேரா என அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவே அமைந்துள்ளது. நடப்பு சீசனில் தொடக்க போட்டிகளில் திலக் வர்மா சிறப்பாக ஆடி சில ஆட்டங்களில் மும்பை அணி சிறந்த ஸ்கோரை எட்ட உதவினார். தொடரின் நடுவில் அந்த பணியை சூர்யகுமார் மேற்கொண்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடந்த சில போட்டிகளில் கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். போட்டிக்கு ஏற்றார்போல் மேட்ச் வின்னர்களாக செயல்பட்டு மும்பை பேட்ஸ்மேன்கள் அணிக்கு தூணாக விளங்குகின்றனர்.

 

மறுபுறம் பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் தொடக்க போட்டிகளில் மும்பை அணி விக்கெட்களை எடுக்கத் திணறி வந்தது. ஆனால் தொடரின் பிற்பாதியில் ஆகாஷ் மேத்வாலின் எழுச்சி பிற பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தினால் எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை வேகமாக இழந்தனர். ஆகாஷ் மேத்வாலின் எகானமி ரேட் பவர் ப்ளேவில் 7.25 ஆகவும் டெத் ஓவர்களில் 7.26 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான பெஹ்ரெண்ட்ராஃப் மற்றும் ஜோர்டன் அழுத்தமில்லாமல் பந்துவீச முடிகிறது. சுழலில் குமார் கார்த்திகேயா மற்றும் பியூஷ் சாவ்லா தங்களது பணியை சிறப்பாக செய்வதால் பந்து வீச்சிலும் மும்பை அணி பலமானதாகவே உள்ளது.

 

குஜராத் டைட்டன்ஸ்

லீக் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி முதல்முறையாக வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி இன்றைய போட்டியை எப்படி சமாளிக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் கில் கட்டாயமாக மும்பை பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருப்பார்.  

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷனகா தொடர்ந்து சொதப்பி வருவது குஜராத் அணிக்கும் பெரும் பின்னடைவு. அவருக்கு பதில் ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப் போன்றோர் விளையாட வைக்கப்படலாம். மற்றபடி விஜய் சங்கர், சஹா, மில்லர் போன்றோர் சிறப்பான ஆட்டத்திறனைக் கொண்டுள்ளனர். டேவிட் மில்லர் மும்பை அணிக்கு எதிராக ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக உள்ளது. சராசரியாக 40 ரன்களில் அவர் ஆடி வருகிறார். 

 

நடப்பு சீசனில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சராசரியாக 40 ரன்களை வைத்துள்ளார். ஆனால் 4 ஆவது இடத்தில் களமிறங்கும் போது சராசரியாக 11.4 ரன்களை மட்டுமே சராசரியாக வைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 3 ஆவது இடத்தில் களமிறங்கினால் அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் நடப்பு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரு பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். ரஷித் கான் மற்றும் ஷமி இருவரும் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கு குஜராத் அணிக்கு சாதமாக மாறலாம். ஏனெனில் இஷான் கிஷன் தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திணறி வருகிறார். அதே சமயத்தில் 54 பந்துகளை இஷான் கிஷனுக்கு எதிராக வீசியுள்ள ஷமி ஒருமுறை கூட அவரை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னை அணியுடனான போட்டியில் யஷ் தயாலுக்கு பதிலாக நல்கண்டே சேர்க்கப்பட்டார். அழுத்தமான சூழலில் நல்கண்டே தடுமாறியதைக் காண முடிந்தது. இன்றைய போட்டியில் அவருக்கு பதில் யஷ் தயால் சேர்க்கப்படலாம்.

 

இரு அணியின் ஒப்பீடு

ரஷித் கான் 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ரோஹித் சர்மாவை வீழ்த்தியுள்ளார். ஆனால் ரஷித் கான் பந்துவீச்சில் இதுவரை ஆட்டமிழக்காத சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 67 ரன்களை அடித்துள்ளார். இரு அணிகளும் இலக்கை சேஸ் செய்வதில் முதன்மையான அணியாக திகழ்கிறது. இரு அணிகளும் இதுவரை 9 முறை இலக்கை சேஸ் செய்துள்ளன, அதில் 6 முறை இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது.  மும்பை அணி தனது பவர்ப்ளே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி வந்துள்ளது. அந்த அணியின் பவர் ப்ளே எகானமி 9.2 ஆக இருந்தது. அதன் சராசரி ரன்கள் 54.9. ஆனால் கடைசி 5 போட்டிகளில் 8.2 எகானமி ரேட்டுடன் 27.3 ரன்களை சராசரியாக வைத்துள்ளது.  


 

இதை படிக்காம போயிடாதீங்க !