ADVERTISEMENT

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர நாங்கள் விரும்பினோம். ஆனால்…

12:50 PM Dec 26, 2018 | tarivazhagan

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், விராட் கோலிக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரவி சாஸ்திரி பற்றிய சர்ச்சைகள் சில மாதங்களாக அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அணி வீரர்களின் தேர்வு. இந்த நிலையில் வி.வி.எஸ்.லக்ஷ்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய சமயத்தில் நடந்தவை பற்றி குறிப்பிட்டுள்ளார். இது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு பிறகு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர்வதை விராட் கோலி விரும்பவில்லை என அவருடைய கருத்துகளை பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகும் சச்சின், கங்குலி மற்றும் நான் அடங்கிய குழு, அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பினோம். ஆனால் அவர் வெளியேற விரும்பினார் என்று வி.வி.எஸ்.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் டெஸ்ட் அணி கேப்டன் அனில் கும்ப்ளேவை தேர்வு செய்தனர். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி பல்வேறு சாதனைகள் படைத்தது. நடைபெற்ற ஐந்து டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றது.

கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 12 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும், 4 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது. கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 70.6% வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் 13 ஒருநாள் போட்டிகளில் 8 வெற்றியும், 5 தோல்வியும் அடைந்துள்ளது. வெற்றி பெற்றதை சதவிகிதம்படி பார்த்தால் 61.5% ஆகும். ஐந்து டி20 போட்டிகளில் 2 வெற்றியும், 2 தோல்வியும், ஒரு போட்டி முடிவு இல்லாமலும் போனது. வெற்றி பெற்றதை சதவீதத்தின்படி பார்த்தால் 40% ஆகும்.

கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. இங்கிலாந்ததில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடருடன் அவருடைய பதவிக்காலமும் முடிவடைந்தது. ஆனால் கிரிக்கெட் ஆலோசனை குழு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பியது.

அணியில் வீரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட சில விஷயங்களில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவிற்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கோலி பி.சி.சி.ஐ.யிடம் கும்ப்ளே கோச்சிங் ஸ்டைல் பற்றி தெரிவித்திருந்தார். ஆனால், கும்ப்ளே விலகியது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி எட்டமுடியாத உயரத்தை அடைந்தது.

சமீபத்தில் கவுதம் கம்பீர் ஒரு பேட்டியில் ’தான் கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, எம்.எஸ்.தோனி ஆகியோர் தலைமையில் விளையாடி இருந்ததாகவும், இதில் கும்ப்ளேதான் சிறந்த கேப்டனாக என்னை கவர்ந்துள்ளார்’ என்றும் கூறியிருந்தார். அணியின் தேவையைவிட ஒரு சிலரின் தேவைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறதா? என்று கம்பீர் வினவியிருந்தார்.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0, நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4-0, வங்க தேச அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் வெற்றி, பின்னர் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியுடன் வெற்றி என்று அசத்தி வந்தது இந்திய அணி.

கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடரில் மட்டுமல்ல; ஒருநாள் தொடரிலும் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது. நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதில் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும், எந்த வருடமும் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை. மேலும், கும்ப்ளே விலகலுக்கு பிறகு பயிற்சியாளர் நேர்முகத் தேர்வின்போது இரண்டாவது முறை ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கங்குலி கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT