ADVERTISEMENT

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிஸ்டர்.கிரிக்கெட்... அதிகம் கொண்டாடப்படாத ஜாம்பவான்

10:19 AM Feb 16, 2019 | tarivazhagan

டி20, டி10 போட்டிகள் கலக்கிவரும் காலங்களிலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் அசத்தலான ஆட்டம் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால் டி20 வீரர்களுக்கு கிடைக்கும் பிரபலமும், புகழும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான புஜாரா போன்ற வீரர்களுக்கு கிடைக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான். உலக கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை எடுத்துப் பார்த்தால் சச்சின் என்ற பெயர் ஆதிக்கம் செலுத்தும். அதுபோல இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் சச்சின் என்றால் வாசிம் ஜாபர் தான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனது 15-வது வயதில் பள்ளி அணியில் விளையாடி வந்தார் ஜாபர். இவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் பேட்டிங் ஸ்டைல் போன்று விளையாடுவார். 18-வது வயதில் ரஞ்சி தொடரில் செளராஷ்டிரா அணிக்கு எதிராக மும்பை அணிக்காக 314 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் ஜாபர், குல்கர்னி ஆகியோர் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக 459 ரன்கள் எடுத்து அசத்தினர். 2000-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதமடித்து அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றினார். 2006-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் இரட்டை சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31 போட்டிகளில் 1944 ரன்கள், சராசரி 34.11. அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார்.

ரஞ்சி தொடரில் 8 வருடங்கள் மும்பை அணிக்கும், 2 வருடங்கள் விதர்பா அணிக்கும் இறுதிப்போட்டியில் விளையாடி, தான் விளையாடிய 10 இறுதிப்போட்டியிலும் ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.


பல சாதனைகளை உள்ளூர் போட்டிகளில் படைத்துள்ளார். இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த போதிலும் உள்ளூர் போட்டிகளில் அசத்தியுள்ளார். ஜாபர் “உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவான்” என்று கூறுவதற்கு அவரது முதல்தர போட்டிகளே போதுமானது.

ஐ.பி.எல். தொடரில் முதல் சீசனில் பெங்களூர் அணிக்கு விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ரஞ்சி போட்டிகளில் மட்டும் இதுவரை 148 போட்டிகளில் 11741 ரன்கள், சராசரி 58.12, அதிகபட்ச ரன்கள் 314, 40 சதங்கள், 46 அரைசதங்கள்.

ஒரு தொடக்க வீரராக மெதுவாக விளையாடும் திறன் கொண்ட ஜாபர் 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் இளம் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2010-2012 வரை உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார் ஜாபர். அந்த நேரங்களில் கம்பீர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வந்தார். தவான் மற்றும் ஷர்மா ஆகியோரின் முதல் 30 டெஸ்ட் போட்டிகளின் சராசரி ஜாபரின் சராசரியை விட சிறப்பாக இல்லை. ஆனால் 30 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே வைத்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஜாபரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது வருத்தப்படக்கூடிய ஒன்று.

இதுவரை 251 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 19079 ரன்கள், 51.42 சராசரி, 57 சதங்கள், 88 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 314 ரன்கள் எடுத்துள்ளார். 35 வயதில் ஜாபர் இங்கிலாந்தில் ஐன்ஸ்டெல் சி.சி. அணிக்கு எல்.டி.சி.சி. லீக்கில் விளையாடினார். மேலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடாத போதிலும் ஜாபர் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். 2014-ஆம் ஆண்டு முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இந்தியா திரும்பிய பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இருந்து மாறி விதர்பா அணிக்கு விளையாட தொடங்கினார்.

ஒரு வீரர் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு திறமைகளை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர் இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டில் பெரிய இடங்களை அடைய முடியாது என்று வருங்கால தலைமுறைக்கு தன் அனுபவத்தின் மூலம் கருத்து கூறியுள்ளார் ஜாபர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறிய சாதனை படைத்த ஒரு வீரரை நாம் கொண்டாடிய அளவிற்கு 41 வயதில் விளையாடிவரும் ஜாபர் போன்ற அரிதிலும் அரிதான உள்நாட்டு ஜாம்பவான்களை கொண்டாட தவறிவிட்டோம் என்பதே நிதர்சனம். இன்று அவரின் பிறந்தநாள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT