யார்க்கர்கள் என்றால் ஒரு காலத்தில் வாசிம் அக்ரம் என்ற பொருள்படும். அந்தளவுக்கு எதிரணியினரை கதிகலங்கச் செய்து, களத்தை விட்டு வெளியேற்றியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். அப்படிப்பட்ட வாசிம் அக்ரமே அசந்துபோகும் அளவுக்கு சிறுவன் ஒருவன் பந்துவீசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசிம் அக்ரம், ‘இந்த சிறுவன் எங்கே இருக்கிறான்? நம் நாட்டின் நரம்புகளினூடே இதுபோன்ற திறமை பரவிக்கிடக்கிறது. ஆனால், இதுபோன்ற குழந்தைகளுக்கு சரியான பாதை அமைத்துத் தரத்தான் முடியவில்லை. நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டிய தருணம் இது’ என பதிவிட்டுள்ளார்.
சுவரில் சாய்த்துவைக்கப்பட்ட குச்சி ஒன்றை ஸ்டம்ப் எனக் கருதி, இடதுகையில் பந்துவீசும் அந்த சிறுவன் துல்லியமாக பவுல்டு ஆக்கும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பத்து வயதே நிரம்பியிருக்கும் இந்த சிறுவன் இன் ஸ்விங்கர் மூலமாக பந்துவீசும் காட்சி பார்க்கும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். ஆனாலும், இந்த சிறுவன் யார் என்ற தகவல் இன்று வரை கிடைக்கவில்லை.