Skip to main content

உலகக்கோப்பை அணியில் இடம்பெற ஆசை! - மனம்திறக்கும் க்ருனால் பாண்டியா 

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
Krunal

 

 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான பட்டியலில் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் இளம் கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியா. 
 

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடக் கூடியவர் க்ருனால் பாண்டியா. இவர் அந்த அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இவரது சகோதரர் ஹர்தீக் பாண்டியா இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார். பேட்டிங், பவுலிங் என இரண்டு ஏரியாக்களிலும் சிறப்பாக செயல்படும் க்ருனால் பாண்டியாவால் இந்திய அணியில் ஏனோ இடம்பெற முடியாமல் இருந்தது.
 

 

 

இந்த நிலையை மாற்றும் விதமாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் டி20 பிரிவில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் க்ருனால். ஆனால், மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெறும் கனவுகள் குறித்து க்ருனால் பாண்டியா பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் அவர் கலந்துகொண்ட நேர்காணலில், “என் தற்போதைய ஆசை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான். அதேபோல், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையும் இருக்கிறது. நேர்த்தியாக என் திறமையை வெளிப்படுத்தினால், நிச்சயம் நான் அணியில் எனக்கான இடத்தைப் பெறுவேன். இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தபோது, சகோதரர் ஹர்தீக்குடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தது நல்ல அனுபவம். ஒரே அணியில் விளையாடும் அந்த வாய்ப்பு மிகச்சிறந்தது” என தெரிவித்துள்ளார். 
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.