இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வருடந்தோறும் ‘உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்’ எனும் விஸ்டன் விருவதுகள் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஸ்டன் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த முறையும் விராட் கோலி விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்று இருக்கிறார்.
விராட் கோலியோடு சேர்த்து மொத்த 5 சிறந்த வீரர்களைத் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரண், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த ஓவர் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த வீராங்கனையாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்தில் 1,291 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டி20 போட்டியில் சிறந்த வீரராக தொடர்ந்து 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் விராட் கோலி, 2,735 ரன்களை டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்துள்ளார். இதில் 37 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை விராட் கோலி அடித்துள்ளார்.
கோலி குறித்து விஸ்டன் ஆசிரியர் லாரன்ஸ் பூத் கூறுகையில், “கடந்த 1889ம் ஆண்டில் இருந்து பாரம்பரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து விஸ்டன் விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு விராட் கோலி வந்திருந்த போது 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவரின் சராசரி 13.40 ஆக இருந்தது. ஆனால், கடந்த முறை அவர் 593 ரன்கள் சேர்த்து 59.30 ரன்கள் சராசரி வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.