/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/602_102.jpg)
இந்தியா இலங்கை அணிகள் மோதிய மூன்றாம் மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மூன்றாவது போட்டியையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அணியின் ரன் எண்ணிக்கையை துவக்கினர். ரோஹித் 42 ரன்களில் வெளியேற விராட் மற்றும் கில் இணைந்து இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.
கில் அசத்தலாக ஆடி 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதகளம் செய்த கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 166 ரன்களை குவித்தார். முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 390 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கினை நோக்கி ஆடிய இலங்கை அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 22 ஓவர்களில் 73 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் சிராஜ் 4 விக்கெட்களும் குல்தீப் யாதவ், முகமது ஷமி 2விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றாவது சதமாக நேற்றைய சதம் அமைந்தது. மேலும் சொந்த மண்ணில் அதிக சதங்களை அடித்திருந்த ஜாம்பவான் சச்சின் சாதனையையும் முறியடித்தார். சச்சின் இதுவரை 20 சதங்களை அடித்திருந்த நிலையில் கோலி நேற்று 21 ஆவது சதமடித்து அசத்தினார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் இருந்தார். அவர் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்களை அடித்திருந்தார். இந்நிலையில் கோலி நேற்றைய சதத்தின் மூலம் இலங்கை அணிக்கு எதிராக 10 சதங்களை அடித்து முதல் இடம் வகிக்கிறார்.
இது தவிர தொடக்க வீரராக களமிறங்காமல் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)