The victory parade of Indian cricket team players has started

Advertisment

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு வழியாகச் செல்கிறது. இந்திய அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெறுகிறது. முன்னதாக மும்பையில் பேருந்தில் ஊர்வலமாக வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வான்கடே மைதானப் பகுதியில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஏற்றிச்செல்ல உள்ள திறந்தவெளி பேருந்து ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நமோ எனப் பெயர் பொறிக்கப்பட்ட இந்திய அணியின் ஜெர்ஸி பரிசளிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இந்த ஜெர்சியை பிரதமர் மோடியிடம் வழங்கினர்.