Skip to main content

8 ஆவது ஆண்டாக பெங்களூருக்கு தொடரும் சோகம்; கொல்கத்தா அபார வெற்றி 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Tragedy continues for Bangalore for 8th year; Kolkata is a huge success

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 36 ஆவது லீக் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களையும் நிதிஷ் ராணா 48 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணியில் ஹசரங்கா மற்றும் விஜயகுமார் வைஷாக் தலா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் நிதிஷ் ரானா மொத்தம் 4 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ரானா இரண்டாவதாக இணைந்துள்ளார். அவர் மொத்தமாக கொல்கத்தா அணிக்காக 101 சிக்ஸர்களை அடித்துள்ளார். முன்னதாக ரஸல் 180 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களையும் லோம்ரோர் 34 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும் ரஸல் 2 விக்கெட்களையும் சுயாஸ் சர்மா 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் விராட் கோலி 54 ரன்களை எடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்காக அதிகமாக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி 3 ஆவது இடத்திற்கு முன்னேறினார். 1075 ரன்களுடன் வார்னர் முதல் இடத்திலும் 1040 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் 860 ரன்களுடன் விராட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வென்றதன் மூலம் பெங்களூர் கொல்கத்தா அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 2016 பின் நடந்த 5 போட்டிகளிலும் கொல்கத்தா அணி மட்டுமே வென்றுள்ளது.

 

 

Next Story

கிளாசனின் அதிரடி வீண்; இந்திய இளம் வேகத்தின் அசத்தலால் கொல்கத்தா த்ரில் வெற்றி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் 2024 இன் மூன்றாவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் நரைன் களமிறங்கினர். நரைன் 2 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  அவருக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் நித்திஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் சால்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு துணை நின்ற ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ரசல் இணை ஹைதராபாத் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரசல் 64 ரன்களுடனும், ஸ்டாரக் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றனர்.இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் இணை சிறப்பான துவக்கம் தந்தது. பொறுமையாகவும் அவ்வப்போது அதிரடியையும் காட்டிய அந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. அகர்வால் 32 ரன்களும் அபிஷேக் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களும்,  மார்க்ரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்பு வந்த ஹென்றிச் கிளாசன், அப்துல் சமத் இணை பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல் சமத் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹென்றிச் கிளாசன், சபாஷ் அகமது இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.  சிக்ஸர்களில் மட்டுமே கவனம் செலுத்திய கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்படும் நிலையில் சபாஷ் அகமது மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது ரன் எதுவும் எடுக்காமல் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் வரலாற்றில் சாதனை விலைக்கு எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார்.  அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இளம் வீரர் ஹர்ஷத் ராணா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணியில் ஹர்ஷத் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும்,  ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-வெ. அருண்குமார்

Next Story

தோனிக்கு அறுவை சிகிச்சை?

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Dhoni surgery? for knee injury

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி முதல் நாளில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இந்த வெற்றியுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி குஜராத் உடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளம்மிங், “தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் கணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என்றார். இதன் பின்பே சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். சென்னை அணியின் முதல் போட்டியில் தோனி கலந்து கொண்டார். அப்போட்டியில் தோற்றாலும் தோனி விளையாடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

 

காலில் காயத்துடனே அனைத்து லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் முழுவதும் தோனி ரன்களை எடுப்பதற்கு சிரமப்பட்டதை காண முடிந்தது. தன்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என வீரர்களிடம் சொல்லி இருப்பதாக தோனி ஒரு லீக் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார். லீக் போட்டி ஒன்று முடிந்த பின் தோனி காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதும், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்த பின் ரசிகர்களுக்கு நன்றி செலுத்த மைதானத்தை சுற்று வந்த போதும் காலில் முழங்கால் கேப் உடனே வலம் வந்தார். இத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது. 

 

இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபெண் மருத்துவமனையில் சில சோதனைகளுக்காக தோனி அனுமதிக்கப்பட இருக்கிறார் என்றும் முழங்கால் காயத்திற்கு முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் அவர் வீடு திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டால் முழுமையான சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.