Skip to main content

“இவர்கள் கோப்பையை வெல்வது நிச்சயம்” - அறுதியிட்டுச் சொன்ன மிஸ்டர் 360

Published on 08/11/2022 | Edited on 09/11/2022

 

“They will definitely win the trophy,” assured abd

 

முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஏபி டிவில்லியர்ஸ் இந்திய அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். 

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் பிரபல தனியார் ஊடகத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, “இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதில் இந்தியாதான் வெற்றி பெறும். இந்திய அணியில் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் மற்றும் விராட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். இந்திய அணி இங்கிலாந்து உடனான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். அரையிறுதியில் அவர்கள் வென்றால் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள்” எனக் கூறியுள்ளார். 


 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.