இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துஉடனான தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரை இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால் பிப்ரவரி மாதம் நடக்கும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரைக்கைப்பற்றினால் மட்டுமே முடியும்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்அறிவிக்கப்பட்டது. சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுஅறிவித்துள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா,கே.எல்.ராகுல்,ரவிச்சந்திரன் அஸ்வின்,கே.எஸ்.பாரத்,சுப்மன் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன்,விராட் கோலி,அக்சர் படேல்,சத்தேஷ்வர் புஜாரா,முகமது ஷமி, முகமது சிராஜ்,ஜெய்தேவ் உனத்கட்,குல்தீப் யாதவ்,சூர்யகுமார் யாதவ்,உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ப்ராஸ் கான் இடம்பெறவில்லை. சர்ப்ராஸ் கான் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சர்ப்ராஸ் கான் தனது சதத்தினை அடித்ததும் களத்தில் இருந்து வெளியேறாமல், மீண்டும் களத்தில் தொடர்ச்சியாக ரன்களை அடிக்கிறார். அனைத்து விதத்திலும் அவர் கிரிக்கெட்டுக்குதகுதியானவர் என்பதையே இது காட்டுகிறது.
உங்களுக்கு உடல் மெலிதான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால், நீங்கள் உடல் மெலிதான வீரர்களை மட்டுமே தேடுகிறீர்கள் என்றால், முதலில் பேஷன் ஷோக்களுக்குச் சென்று சில மாடல்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் பேட் மற்றும் பந்தினை கொடுத்து அதன் பின்னர்அவர்களை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அனைத்து வடிவங்களிலும் வீரர்கள் உள்ளனர். ஒரு வீரனின்உடலளவை கருத்தில் கொள்ளாமல், அவர் எடுத்த ரன்களையும் விக்கெட்களையும் கருத்தில் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.