Skip to main content

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் சாதனை!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் பதினோரு ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

 

Dharun

 

பாட்டியாலாவில் ஃபெடரேஷன் தேசிய சீனியர் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான அய்யாசாமி தருண், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 49.45 விநாடிகளில் ஓடிக்கடந்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய வீரர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 

 

இதற்கு முன்னர் இந்திய வீரர் ஜோசப் ஆபிரகாம் 400 மீட்டர் தூரத்தை 49.51 விநாடிகளில் ஓடிக்கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது அதை அய்யாசாமி தருண் முறியடித்திருக்கிறார். 

 

தங்கப்பதக்கம் வென்ற உற்சாகத்தில் பேசிய தருண் விஜய், ‘கடந்த சில தினங்களாக டைப்பாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் என்னால் முறையாக பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. சமீபத்திய பயிற்சி ஓட்டங்களிலும் என்னால் சரியாக ஓடமுடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் என்ன நடந்ததென்பதே தெரியவில்லை. இலக்கை ஓடிக்கடந்தால் போதுமென்று நினைத்தேன். ஆனால், அது சாதனையில் முடிந்திருக்கிறது. மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

கோ-கோ வீரராக இருந்த தருண், பின்னர் தடகள போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டவர். தற்போதைய சாதனையின் மூலம் காமன்வெல்த் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
 

Next Story

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Incentive hike for physically chalanged athletes

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை வழங்கிட கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம் பெற்றிருந்தன. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம் பெறவில்லை.

 

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்படாத குறையினை கண்டறிந்து அதனைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 இலட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1.50 இலட்சம் எனவும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Next Story

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழக வீரர் தேர்வு; முதல்வர் வாழ்த்து

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Tamil Nadu Player Chosen as Asia's Best Athlete; Greetings from the Chief Minister

 

சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில் (ட்ரிப்பிள் ஜம்) தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வபிரபு திருமாறன் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரர் என்ற அங்கீகாரம் செல்வபிரபு திருமாறனுக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் செல்வபிரபு திருமாறனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில், “ஆசியாவின் சிறந்த ஜுனியர் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். ஆசிய  தடகள சம்மேளத்தின் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.