Skip to main content

அடுத்த கட்டம் அரசியலில் குதிப்பதா? - சுரேஷ் ரெய்னா பதில்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

suresh raina

 

ஐபிஎல் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும், சுரேஷ் ரெய்னாவை  வாங்கவில்லை. இதன்காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

சுரேஷ் ரெய்னாவை வாங்காததற்காக சென்னை அணியை, அந்த அணியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ”ரெய்னா இல்லை என்பது எங்களுக்கு மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அணியின் அமைப்பு என்பது வீரரின் ஃபார்மை பொறுத்தும், எந்த மாதிரியான அணியை வைத்திருக்க வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறது என்பதைப் பொறுத்தும் உள்ளது. அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என நினைத்தற்கு அதுவும் ஒரு காரணம்” எனத் தெரிவித்தார். அவரின் இந்த கருத்தும் ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

 

இந்தநிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, சமையல் கலைஞராக விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படாத நிலையில் அடுத்த கட்டம் அரசியலில் இணைவதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரெய்னா, ”கிரிக்கெட்தான் எனது ஒரே காதல். நான் கிரிக்கெட்டில் தொடர்ந்து பயணிப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு அதுதான். அரசியல் எனக்கு அவ்வளவு புரியாது. நான் இப்போது ஒரு நல்ல செஃப்பாகி (சமையல் கலைஞராகி), ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைக்க விரும்புகிறேன். அனைத்து இடங்களுக்கும் சென்று வர விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது? ; வெளியான புது அப்டேட்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

When is IPL 2024 auction? ; New update released

 

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் 2008 முதல் நடந்து வருகிறது. அதன் 17 ஆவது சீசன் 2024 இல் நடக்க உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீரர்கள் ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அது எப்போது நடக்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில் ஐபிஎல் ஏலமானது நடக்க உள்ளது. தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை கொடுக்க கடைசி தேதி நவம்பர் 10 எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 100 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த ஐபிஎல் ஏலத்தை விட 5 கோடிகள் அதிகமாகும்.

 

ஐபிஎல் 2023 இல் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகை எனப்படும் அணிகளின் பர்ஸ் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகமான தொகை வைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 12.20 கோடிகள் வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளில் குறைந்தபட்ச பர்ஸ் தொகையாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 லட்சத்தை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் 6.55 கோடிகளும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 4.45 கோடிகளும், லக்னோ அணி 3.55 கோடிகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3.35 கோடிகளும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.75 கோடிகளும், கொல்கத்தா அணி 1.65 கோடிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடிகளும் கொண்டுள்ளது.

 

ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் ஆவார். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.5 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். இவரைத் தாண்டி ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த வீரரும் எடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- வெ.அருண்குமார்