Skip to main content

இந்தாண்டு ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் இவர் பங்கு பெரியளவில் இருக்கும் - கவாஸ்கர் பேச்சு!!!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Sunil Gavaskar

 

பந்துவீச்சுக்கு உகந்த மைதானங்களில் சாஹலின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றும், அதன் மூலம் அணியின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய வீரராக இந்தாண்டு அவர் இருப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. அனைத்து அணிகளும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் உள்ளனர். கோப்பையை வென்ற அணிகள் மீண்டும் கோப்பையை வெல்லும் நோக்கோடும், இதுவரை வெல்லாத அணிகள் முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றும் நோக்கோடும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியினர், இந்தாண்டு கோப்பையைக் கைப்பற்றி தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்தைத் தவிர்க்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான கவாஸ்கர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "பெங்களூர் அணி இதுவரை ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பது புதிராகவே உள்ளது. விராட் கோலி, ட்வில்லியர்ஸ் போன்ற வீரர்களைக் கொண்ட அணிக்கு ரன் பற்றாக்குறை ஏற்படாது. இதுவே அவர்களுக்கு பாதகமான ஒன்றாகவும் இருக்கிறது. இவர்கள் இருவரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்றால் பின் வரிசையில் வரும் வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கத் தவறி விடுகின்றனர். இந்தாண்டு புதிய பயிற்சியாளரின் வருகை அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கலாம். பந்துவீச்சுக்கு உகந்த அமீரக மைதானங்களில் சஹாலின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும். இந்தாண்டு வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய வீரராக அவர் இருப்பார்" எனக் கூறினார்.

 

பெங்களூர் அணி தன்னுடைய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 21-ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

 

 

Next Story

வெளிப்படையாகக் கூறுங்கள்... ரோகித் ஷர்மா காயம் குறித்து கவாஸ்கர் பேச்சு!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Sunil Gavaskar

 

ரோகித் ஷர்மா காயம் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

13-ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ரோகித் ஷர்மா வழிநடத்தி வந்த மும்பை அணியை, கடந்த இரு போட்டிகளாக பொல்லார்ட் வழிநடத்தி வருகிறார். ரோகித் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இவ்வருட இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் அணி வீரர்களின் பட்டியலை நேற்று பி.சி.சி.ஐ வெளியிட்டது. அப்பட்டியலில் ரோகித் ஷர்மா பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், ரோகித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை மும்பை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இது குறித்துப் பேசுகையில், "ரோகித் ஷர்மாவால் மும்பை அணிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட முடிகிறது என்றால், என்ன வகையான காயம் ஏற்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. இதில் சற்று வெளிப்படைத்தன்மை வேண்டும். அவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகக் கூறுவதுதான் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உள்ளது" எனக் கூறினார்.

 

 

 

Next Story

கொல்கத்தா அணியின் கேப்டன் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது... கவாஸ்கர் சொல்லும் காரணம்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Sunil Gavaskar

 

 

முதல் சில போட்டிகளில் கொல்கத்தா அணியின் ஆட்டம் சிறப்பாக இல்லாத பட்சத்தில், அணி நிர்வாகம் கேப்டனை மாற்ற வாய்ப்பிருக்கிறது என இந்திய அணியின் மூத்த வீரரும், ஐபிஎல் வர்ணனைக் குழுவில் ஒருவருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நாளை ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் இதற்கான பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான கவாஸ்கர் கொல்கத்தா அணி குறித்தான தன் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அதில் அவர், "கொல்கத்தா அணி சிறந்த பேட்டிங் வரிசை உடைய அணி. அவ்வணியில் அதிரடியான வீரர்கள் நிறைய உள்ளனர். இயான் மோர்கன் வருகை அவர்களுக்கு கூடுதல் பலத்தை தரும். முதல் சில போட்டிகளில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடாத பட்சத்தில், அணி நிர்வாகம் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் ஒப்படைக்கவும் வாய்ப்புள்ளது" எனக் கூறினார். 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.